1967-க்குப் பிறகு: தமிழக வாக்காளர்களும் தேசியக் கட்சிகளும்

1967-க்குப் பிறகு: தமிழக வாக்காளர்களும் தேசியக் கட்சிகளும்
Published on

ஒரு காலம் இருந்தது. தமிழ்நாட்டில் தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தல்களில் வென்று அசைக்கமுடியாத சக்தியாக இருந்தகாலம். ஆனால் 1967&க்குப் பிறகு இந்த நிலை தலைகீழாக  மாறிவிட்டது. இன்றுவரை திராவிடக் கட்சிகளே மாறிமாறி ஆட்சியில் உள்ளன. தேசியக்கட்சிகள் பல்வேறு உத்திகளைக் கடைபிடித்தும் வெற்றிபெற முடியாத நிலைமை நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் தேசியக கட்சிகளின் செயல்பாட்டை மட்டும் இந்த கட்டுரையில் பார்ப்போம். 1967 சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து இது வரை பன்னிரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளன. அதேபோல் அந்த ஆண்டிலிருந்து 14 நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

1967-இல் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்துக்கு 232 இடங்களில் போட்டியிட்டு 51 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. பெற்ற வாக்குகளின் சதவீதம் 41.10 சதவீதம். இது கூட்டணி இல்லாமல் பெறமுடிந்த வாக்கு சதவீதம். இவ்வளவு பெரிய வாக்கு வங்கியுடன் இருந்த கட்சி சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு பெற  முடிந்த வாக்குகள் 6.42 சதவீதமே. (கூட்டணியில் பெற்ற இடங்களைப் பொறுத்துதான் இந்த வாக்குகள் என்றாலும் கட்சியின் செல்வாக்கைக் கணிக்க இது உதவும்)

இந்த இடைப்பட்ட காலங்களில் அக்கட்சி தன் முழுவலிமையுடன் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி இன்றி போட்டியிட்டது 1989-இல். அப்போது 19.5% வாக்குகளைப் பெற முடிந்தது. அதற்கு அப்போதைய அரசியல் சூழலும் காரணம். அதிமுக ஜெ அணி, ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்து இருந்தது. அந்த சமயத்தில் இழந்த ஆட்சியை பிடிக்கலாம் அல்லது  முக்கிய கட்சியாக மாறலாம் என போட்ட திட்டத்தில் காங்கிரசுக்கு ஓரளவே வெற்றி கிடைத்தது. ஆனால் அதன்பின்னர் தமிழகத்தில்

ஆட்சியைப் பிடிப்பது என்கிற முயற்சியில் உள்ளூர் கட்சிகளைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்று எண்ணியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி வேண்டும் என்பதால் சட்டமன்ற திட்டத்தை டெல்லி தலைமை பின் வரும் ஆண்டுகளில் முடக்கிவிட்டது.

இடது சாரிகளான சிபிஐ, சிபிஐஎம் ஆகிய இருகட்சிகளுமே 1967க்குப் பின்னர் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணியிலும் சில சமயம் வேறு கட்சி கூட்டணியிலும் இடம் பெற்று தேர்தலை சந்தித்துள்ளன. எவ்வளவு சிரமப்பட்டாலும் அவை கூட்டணியிலோ தனியாகவோ பெறும் வாக்குகள் மூன்று சதவீதத்தை ஒட்டியே அமைந்துள்ளன. சில சமயம் மிகக்குறைவான சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதைப் பார்க்கிறோம்.

1977-இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது. தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரஸில் இருந்தவர்கள் பெரும்பாலோர் ஜிகே மூப்பனார் தலைமையில் இந்திரா காங்கிரஸுடன் இணைந்தனர். மீதிப்பேர் ஜனதா கட்சியில் இணைந்தனர். அதே போல் ராஜாஜி மரணமடைந்த நிலையில் சுதந்தரா கட்சிக்காரர்களும் ஜனதாவில் சேர்ந்து இருந்தனர். முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த ஜனதா கட்சி, இந்த சட்டமன்றத்  தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு தன் பலத்தைப் பரிசோதித்து மண்ணைக் கவ்வியது.

பாஜகவின் நிலைமை இந்த மூன்று தேசிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமாகவே இருந்துவந்துள்ளது, 1984-இல் இருந்து தமிழகத்தில் அக்கட்சி போட்டியிட்டு வந்துள்ளது. ஆனால் அக்கட்சியை பிற தமிழக கட்சிகள் பல தேர்தல்களுக்கு விலக்கப்பட்ட கட்சியாகவே கருதின. இவர்களின் வாக்கு சதவீதமும் ஒன்றைத் தாண்டாமலேயே இருந்தது. பிறகு தேசிய அளவில் அக்கட்சி வளர ஆரம்பித்த நிலையில் முதலில் அதிமுகவும் பின்னர் திமுகவும் இரு தேர்தல்களில் தூக்கிச் சுமந்த நிலையில் கழற்றிவிட்டுவிட்டன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு அரசியல் சூழல்களால் கிடைத்தது. இருப்பினும் ஓர் இடம் கூட வெல்ல முடியவில்லை!

இக்கட்சிகள் இல்லாமல் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, ப்ரஜா சோஷலிச கட்சி, சம்யுக்தா சோஷலிஸ்ட்  கட்சி, இந்திய குடியரசு கட்சி, பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சி போன்ற தேசிய கட்சிகளும் தமிழக அரசியலில் ஒரு காலகட்டத்தில் செயல்பாட்டில் இருந்திருக்கின்றன. 1967 சட்டமன்றத் தேர்தலில் இவற்றில் ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்ததால் 20 இடங்களில் வென்றதுடன் 5 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. பாரதிய ஜனசங்கம் பெற்ற வாக்குகள் 0.15% மட்டுமே. இருசோஷலிச கட்சிகளும் இந்திய குடியரசு கட்சியும் பெரிதாக வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியானது, காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஓ என்ற பெயரிலும் பின்னர் இந்திரா காங்கிரஸ் என்ற பெயரிலும் தமிழக தேர்தல்களில் களமிறங்கி இருந்திருக்கிறது. ஆனாலும் ஆட்சிக் கட்டிலிலும் ஏறும் வல்லமை கிடைக்கவில்லை. ஜனதா கட்சியும் சில தேர்தல்களில் போட்டியிட்டுப் பார்த்திருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிடலாம்.

இதுதான் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் நிலை. சரி நாடாளுமன்றத் தேர்தல்களில்? மக்கள்

சட்டமன்றத்துக்கு ஒரு மாதிரியும் நாடாளுமன்றத்துக்கு வேறுவிதமாகவும் வாக்களிப்பர் என்ற ஒரு தியரி உண்டு.  இது ஒரு சில தேர்தல்களில் சரியாகவும் பிற தேர்தல்களில் தவறாகவும் போயிருக்கிறது.

எமெர்ஜென்சிக்குப் பிறகு 1977-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தேசிய கட்சிகளான ஜனதா, காங்கிரஸ் (ஓ) போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. இந்திரா காந்தியுடன் நெருக்கம் காட்டிய அதிமுக, காங்கிரஸ், சிபிஐயுடன் கூட்டணி வைத்திருந்தது. நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டியபோது தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக& காங் கூட்டணிக்கு 34 இடங்களில் வெற்றியைத் தூக்கிக் கொடுத்தார்கள்.

1980-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக& இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெரு வெற்றி பெற்றது. ஆனால் இதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சியைக் கலைத்துவிட்டு நடத்தப்பட்ட தேர்தலில் இந்த கூட்டை தமிழக வாக்காளர்கள் புறக்கணித்து விட்டனர்.

பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த எம்ஜிஆர். நாடாளுமன்றத்துக்கு தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை வழங்குவது.

சட்டமன்றத்தில் குறைவான இடங்களை வழங்குவது என்ற வழியைப் பின்பற்றினார். இதைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதமும் வென்ற இடங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதைக் காணலாம். ஆனால் 1996க்குப் பிறகு காங்கிரஸின் கை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கீழ் நோக்கி சரிய ஆரம்பித்து இருப்பதையும் கூட்டணியில் குறைவான எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் வாக்கு எண்ணிக்கை வீழ்ந்து வருவதைக் காணலாம். 2014 தேர்தலில் தன்னந்தனியாக காங்கிரஸ் 39 இடங்களிலும் நின்றபோது 4.30% வாக்குகளையே பெற முடிந்திருப்பதைக் காணலாம்.

பாஜகவைப் பொறுத்தவரை விலக்கப்பட்ட கட்சி என்ற பிம்பத்தை அது 1998-இல் இருந்து உடைத்துள்ளது. எனவே அது ஒரு சில இடங்களை வெல்லவும் வாக்கு வங்கியில் கொஞ்சம் முன்னேற்றத்தைக் காணவும் முடிந்திருப்பதைக் காணலாம்.

இடதுசாரிகளைப் பொருத்தவரை அவை திமுக அதிமுக கூட்டணியில் நிற்கும்போது அதிக பட்சம் நான்கு இடங்களையும் குறைந்த பட்சம் ஓர் இடத்தையும் வெல்ல முடிந்துள்ளது. தனியாகவோ மூன்றாவது அணி அமைத்து நின்றபோதோ அவை தோற்றுத்தான்போயிருக்கின்றன.

காங்கிரஸ், இடது சாரிகள், இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக ஆகிய கட்சிகள் தமிழக கட்சிகளுடன் தேர்தல் கூட்டு மட்டுமே கொண்டுள்ளன. அது முடிந்த பின்னர் இக்கட்சிகளை உடைக்கும் அல்லது

செல்வாக்கைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதையே மறைமுக அல்லது நேரடி நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இதை ஐம்பது ஆண்டுகளாக தமிழக வாக்காளர்கள் பொருட்படுத்தாமல் புறக்கணித்து வந்துள்ளனர்.

பின்குறிப்பு:

இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் பி.ஜே.பி. அதிக சதவிகித ஓட்டு வாங்கியது 1999இல் திமுகவுடன் கூட்டணி அமைத்தபோது. இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் அதிக

சதவிகித ஓட்டு வாங்கியது 1991இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது.

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com