மன்னிப்புக்கேட்டா தப்பு சரியாகிடுமா? எஸ். வி. சேகர் வழக்கில் நீதிமன்றம் குட்டு!

எஸ். வி. சேகர்
எஸ். வி. சேகர்
Published on

கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து வெளிவந்த விமர்சனத்தை நடிகரும், பா.ஜ.க. கட்சியின் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதே போன்று கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாகவும் தேசிய கொடியை அவமதிக்கும் விதமாக யூடியூபில் வீடியோ வெளியிட்டதாகவும் எஸ்.வி.சேகருக்கு எதிராக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசஷ், பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு வழக்கில் 'பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிகட்டி விடமுடியாது' என்று கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com