மாணவர்களிடம் நீதி போதனை வகுப்பு நடத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் சாதி, ஜன மோதல்கள் நடப்பது வழக்கம் என்றும் மாணவர்களின் நெஞ்சில் நஞ்சை வைதைப்பது திமுக ஆட்சியில் தொடர் கதையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள அவர், “ பள்ளி மைதானத்தில் காலை பிரார்த்தனை நடைபெறும்போதே ஆசிரியரை திமுக நிர்வாகிகள் தாக்குவது, கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் என தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.” என்றும் தெரிவித்துள்ளார்.
”கடந்த 4ஆம் தேதி அன்று கல்பாக்கம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில், பொது மேடையில் பெண் ஆசிரியையிடம் திமுக நிர்வாகி அநாகரிகமாகவும் தரக்குறைவாகவும் நடந்துகொண்டார். அதுகுறித்து தமிழகமே வெட்கித் தலைகுனிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மூலம் மாணவர்கள் ஒழுக்கத்தையும் நீதி போதனைகளைப் பெறுவதையும் தி.மு.க. நிர்வாகிகள் தடுக்கின்றனர்.” என்றும் பழனிசாமி தன் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என திமுக அரசு கேட்கிறது. இனியாவது மாணவர்கள் மத்தியின் நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவர்கள் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.” என்றும்,
சாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும்; அதன்மூலம் மோதல்களின் ஆரம்பப் புள்ளியைக் கண்டுபிடித்து முளையிலேயே அகற்றவேண்டும்.” என்றும் பழனிசாமி ஆலோசனை கூறியுள்ளார்.