“சிறுபான்மை என்று சொன்னீங்கனா…செருப்பை கழட்டி அடித்துவிடுவேன் – கொதித்த சீமான்!

பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான்
பத்திரிகையாளர் சந்திப்பில் சீமான்
Published on

“அநீதிக்கு துணை நிற்கின்றவர்களையே சாத்தானின் குழந்தைகள் என்று சொன்னேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் குழந்தைகள் என அவர் முன்பு பேசியது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சீமான், இன்றைக்கு இருக்கிற ஆட்சியாளர் யாராவது நேர்மையாக, நியாயமாக, தேவனின் மகன் போன்று ஆட்சி செய்கிறார்களா? எல்லாம் சாத்தானின் ஆட்சி முறை தான். இதை சகித்துக் கொண்டு இருப்பவர்கள் யார்? பைபிள், குரான் சொல்வதை நான் சொன்னால் ஏன் கோபப்படுகிறீர்கள்?

இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார். எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன். 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் திமுக, காங்கிரஸ் செய்தது என்ன? ஒரே ஒரு நன்மையை சொல்லுங்க.?

சாத்தான் என்ற சொல் எதில் உள்ளது? பைபிள், குரானில் தானே உள்ளது. சாத்தானின் செயலை இப்போது யார் செய்கிறார்கள்? அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் யார்? இவர்களை குரான் சாத்தானின் நண்பர்கள் என்கிறது. நான் சாத்தானின் குழந்தைகள் என்று சொல்லிவிட்டேன். அது வேண்டுமானாலும் தவறு என்று சொல்லலாம்.

மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை. எல்லாவற்றையும் விட பெரியது மொழி, இனம்தான். இங்கு உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள். சிறுபான்மை என்று கூறினால் செருப்பை கழட்டி அடித்துவிடுவேன். யார் சிறுபான்மை? சிறுபான்மை என்று எப்படி கூறுகிறார்கள். மதம் மாறிக் கொள்ளலாம். மொழி, இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.

அநீதிக்கு துணை நிற்பர்களை சாத்தான் என்று கூறினேன். மொத்தமாக அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் கூறவில்லை. அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறிவீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன். அநீதிக்கு தொடர்ந்து துணை நின்று கொண்டுள்ளீர்கள். எனக்கு பதில் செல்ல வேண்டாம். இறைவனும் பதில் கூறியே ஆக வேண்டும்.

நேற்று யுவன் ஷங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்னவாக இருந்தார்கள், இன்று என்னவாக இருக்கிறார்கள்? முன்பு அவர்கள் பெரும்பான்மை, இன்று அவர்கள் சிறுபான்மையினரா? என் கட்சியில் சிறுபான்மையினர் அணி என்ற இல்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com