மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட தஷ்மத் ராவத்தை நேரில் வரவழைத்து, அவரின் கால்களைக் கழுவியுள்ளார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
மத்தியப் பிரதேசத்தில் நேற்று முன் தினம் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சாலை ஓரமாக அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் மீது இன்னொரு நபர் சிகரெட் புகைத்துக் கொண்டே சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் என்பதும், சிறுநீர் கழித்தவர் பிரவேஷ் சுக்லா என்பதும் அடையாளம் காணப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்து நேற்று முன் தினம் தான் அது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த செயலுக்கு பலரும் பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று அதிகாலை பிரவேஷ் சுக்லாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா, சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா மற்றும் ரேவா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜேந்திர சுக்லா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர் பாஜக ஆதரவாளர் என்பதால் எப்படியும் தப்பிவிடுவார் என்று சமூகவலைதளங்களில் சிலர் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான் போபாலில் உள்ள தனது இல்லத்தில், சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த தஷ்மத் ராவத்தின் கால்களைக் கழுவியுள்ளார். அதேபோல், அவருக்கு சால்வை போர்த்தி, பிரசாதம் ஊட்டி, மாலை அணிவித்தும் மரியாதை செய்துள்ளார்.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.