எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ள போராட்டம் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளன. இதன் அடிப்படையில் மொத்தம் 26 கட்சிகள் இணைந்து முதல் கட்டமாக பாட்னாவில் கூட்டத்தை நடத்தின. இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வாக பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில், ‘ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சிகள் சமூக நீதி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தேசிய நலன் ஆகியவற்றுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வெறுப்பை தூண்டும், பிரிவினையை ஏற்படுத்தும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், ஊழலையும் உண்டாக்கும் அரசியலில் இருந்து மக்களை விடுவிக்க விரும்புகிறோம். இந்தியாவுக்காக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA – Indian national development inclusive development) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பின்னர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “எதிர்க்கட்சிகளின கூட்டணியான இந்தியாவை எதிர்க்க பாஜகவுக்கு தைரியம் உண்டா? பேரழிவிலிருந்து இந்தியாவை காப்போம். நாட்டு மக்களுக்காக எதிர்க்கட்சி கூட்டணி செயல்படும். பாஜக அரசின் கீழ் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவில்லை. நாங்கள் தாய் நாட்டை நேசிக்கிறோம். நாட்டுப் பற்று கொண்ட நாங்கள் நாட்டின் நலனுக்காக செயல்படுவோம்” என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும், பண வீக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் மோடியின் ஆட்சியில் எல்லா துறைகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருப்பதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்தார்.
மேலும் அவர் , ’10 ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பை மோடி பெற்றார். மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்த அவர், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று இந்திய பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். எனவே ஒத்த கருத்துள்ள இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும்’ என்று கூறினார்.
கூட்டத்தின்போது ராகுல் காந்தி, “பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராக நாம் போராட்டம் நடத்துகிறோம். இந்தியாவுக்கு எதிராக எவராலும் போராட முடியாது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்தவுள்ள போராட்டம் இந்தியாவுக்கானது. நாட்டில் பொருளாதார ரீதியில் ஏற்றத் தாழ்வுகளை பிரதமர் மோடி ஏற்படுத்தி விட்டார். இந்தியாவின் செல்வம் தற்போது மோடி மற்றும் பாஜகவால் தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலரின் கையில்தான் உள்ளது.” என்றார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் INDIA டிரெண்டாகிவருகிறது. இதை எதிர்க்கட்சி கூட்டணி தொண்டர்கள் உற்சாகமாக பார்க்கின்றனர்.