இந்த படம் அம்மாவுக்கு கிடைத்த வெற்றி! - ‘மாமன்னன்' தனபால் கருத்து

முன்னாள் சபாநாயகர் தனபால்
முன்னாள் சபாநாயகர் தனபால்
Published on

மாமன்னன் திரைப்படம் வெளியாவதற்கு முன்னால் கிளப்பிய விமர்சனங்கள் இப்போது திசை மாறியுள்ளது. படம் நேற்று வெளியான நிலையில், மாமன்னன் கதாபாத்திரம் அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கருதுகின்றனர்.

அதேபோல், அதிமுக சபாநாயகர் பற்றிய கதையில் திமுக அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஏன் நடித்தார் என்ற கேள்வியும் பரவலாக எழத்தொடங்கியுள்ளது. இந்த கேள்விகளோடு முன்னாள் சபாநாயகர் தனபாலைத் தொடர்பு கொண்டோம்.

மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டீர்களா சார்?

நான் இன்னும் பார்க்கவில்லை. என்னுடைய வாழ்க்கை கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். எப்படி எடுத்திருக்காங்கனு தெரியவில்லை. அப்படி எடுத்திருந்தால் அது என்னுடைய உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்.

அதேபோல், நான் 1971ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவின் தீவிர விசுவாசி. அம்மா எனக்கு அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தார்கள். பின்னர் அமைச்சர் பதவி கொடுத்தார்கள். தொடர்ந்து, துணை சபாநாயகர் பதவி, இரண்டு முறை சபாநாயகர் பதவி கொடுத்தாங்க. என்னுடைய தீவிர உழைப்பையும் விசுவாசத்தையும் நம்பியே அம்மா எனக்கு இந்தப் பதவிகளை கொடுத்தாங்க.

மாமன்னன் படம் என்னுடைய வாழ்க்கை கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தால், அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல், அவருடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப் படத்தை எடுத்துள்ளது. அதை எப்படி பாக்குறீங்க?

உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தயாரித்து நடித்திருப்பதை பற்றி நான் என்ன சொல்றது” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com