ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாயைத் தொடும் நிலையில், ஆளுநர் மாளிகை சமையலில் தக்காளி பயன்படுத்த பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தடை விதித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் பெய்த மழையால் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பஞ்சாப்பில் தக்காளி விலை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை விரைவில் 300 ரூபாயாகும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ராஜ்பவனில் தக்காளி பயன்படுத்த தடை விதித்துள்ளார். இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மற்றும் சண்டிகரில் வசிப்பவர்கள் கடந்த சில வாரங்களாக தக்காளி விலையில் அசாதாரணமான உயர்வை எதிர்கொள்கின்றனர், இதனால் தக்காளியை பயன்படுத்தும் குடும்பங்கள் கவலையடைந்துள்ளன.
காய்கறி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். ஒரு பொருளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அல்லது தவிர்ப்பதன் மூலம், அதன் தேவை இயல்பாகவே குறையும். இது அதன் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், தற்காலிகமாக தங்கள் வீடுகளில் மாற்று வழிகளை ஆராய மக்களை ஊக்குவிக்கிறேன். ஆளுநர் மாளிகையில் தக்காளி பயன்படுத்துவதைத் தவிர்க்க வலியுறுத்தியுள்ளேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.