அவசர அறிவிப்பால் புழக்கத்திற்கு வந்து, அதே அவசரத்துடன் திரும்பப் பெறப்பட்டுள்ளார் திருவாளர் 2000 ரூபாய் நோட்டு. இதற்கான அறிவிப்பை கடந்த மே 19ஆம் தேதி வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த அறிவிப்புக்குப் பின்னர் பலருக்கு வயிறு கலங்கிவிட்டது.
’முன்பெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்த் தாளைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது பார்த்தால் கலக்கமாக இருக்கிறது. அன்று என் கடையில் 2000 ரூ தாளை ஒருவர் கொடுத்து பொருள் வாங்கிப்போனார். அந்த நோட்டை என்ன செய்வது என யோசித்தேன். மறுநாள் தயங்கிக்கொண்டே பெட்ரோல் போட ஒரு நிலையத்தில் கொடுத்தேன். அவர்கள் மறுத்தனர். இன்னொரு நிலையத்தில் பெற்றுக்கொண்டனர். அதன் பின்னரே எனக்கு நிம்மதியாக இருந்தது’- இது ஒரு பெட்டிக்கடைக்காரரின் அனுபவம்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி, 500, 1000 ரூபாய் தாள்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பணத்தாள்களுக்கான தேவையை நிறைவேற்ற புதிதாக 2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அது வரையில் இல்லாத புது டிசைனில் அச்சடிக்கப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகள் போல் இல்லாமல், வேறு சைஸில் அச்சிடப்பட்ட இதன் அளவுக்கு ஏற்றபடி, நாடு முழுக்க ஏ.டி.எம் இயந்திரங்களை மாற்ற வேண்டி இருந்தது. இதனால், 2.2 லட்சம் ஏ.டி.எம் இயந்திரங்களில் இந்த மாறுதல் செய்யவேண்டி இருந்தது. புதிய 2000 ரூபாய் நோட்டில் ‘சிப்’ இருப்பதாக சொல்லப்பட்டது கிண்டலுக்கு உள்ளான நிலையில், அதன் தரத்தாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பின் போது தங்களிடம் இருந்த 100 ரூபாய் நோட்டுகள் தீர்ந்துவிட்டதாக ரிசர்வ் வங்கியிடம், பிற வங்கிகள் கோரிக்கை வைக்க, தன்னிடம் இருந்த பழைய 100 ரூபாய் நோட்டுகளையே ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. இந்த நோட்டுகள் ஏ.டி.எம்களில் அடிக்கடி சிக்கிக் கொள்வதாகவும் அப்போது புகார் எழுந்தது. மக்களோ வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் பணத்துக்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். ஆனால் சக்தியும் தொடர்பும் வாய்ந்தவர்களிடம் புத்தம் புது 2000 ரூ தாள்கள் புரண்டன.
மேலும், புதிதாக அச்சிடப்பட்ட 2000 நோட்டின் பயன்பாடு மக்களிடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. அவை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் போல இல்லை. சில்லறை மாற்றுவதே கடினமாக இருந்ததால், எளிய மக்களுக்கும் சாதாரண வியாபாரிகளுக்கும் இந்த நோட்டு உகந்ததாக இல்லை.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்தபோது, அப்போது புழக்கத்திலிருந்த நோட்டுகளில் 86% அவைதான். பின்னர் 2000 தாள்கள் பெருமளவில் புழக்கத்தில் இருந்தன. சுமார் 50% தாள்கள் அவைதான். பின்னர் 2018 மார்ச்சில் அவற்றின் சதவீதம் 37% ஆகக் குறைந்து, இந்த ஆண்டு அவற்றின் புழக்க சதவீதம் 10.8 மட்டுமே. 2018 லேயே இவற்றை அச்சடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
தற்போது, 2000 ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் 500 ரூபாய் நோட்டுதான் பெரியண்ணன். அதாவது உயர் மதிப்புள்ள நோட்டு. கோடிகளை கையடக்க சூட்கேஸ்களில் எடுத்துக் கொண்டு போனவர்களுக்கு இனி ட்ரங்க் பெட்டிகள் தேவைப்படும்! இதற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி, இ- ரூபாய் போன்றவை இருக்க முடியுமா? என்பது சந்தேகம் தான்.
முன்பு 5000 ரூ, 10000 ரூ மதிப்புள்ள தாள்களை அடிக்கலாம் என யோசிக்கப்பட்டு, அந்த யோசனை கைவிடப்பட்டது. ஒருவேளை இந்த யோசனை மறுபரிசீலனை செய்யப்படக்கூடும். தேர்தல் சமயங்களில் பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கிவிட்டு, 5000 ரூ தாளைக் கொடுத்து சில்லரை கேட்டு உதை வாங்கும் காட்சிகளைக் கூட காண நேரிடலாம்!
செப்டம்பர் 30-ம் தேதி வரை இதை வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ளலாம். அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு அதன் நிலை என்னவாக இருக்கும் என்று இப்போது சொல்லப்படவில்லை. இந்த ரூபாய்த் தாள்கள் திரும்பப் பெறப்படுகின்றன என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அவை செல்லாது என அறிவிக்கப்படவில்லை. ஆகவே அக்டோபருக்குப் பின்னரும் இந்த ரூபாய் நோட்டுகளைத் திரும்ப அளிக்கும் வசதி தொடரக்கூடும் எனக் கருதப்படுகிறது.