ஒலிம்பிக் பாரிஸ்
ஒலிம்பிக் பாரிஸ்

திக்..திக்..திக்.. கலக்கல்... முதல் நாள் பாரிஸ் ஒலிம்பிக்!

Published on

இன்று தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவை முன்னிட்டு பாரிஸ் நகரத்தில் காவல்துறை, இராணுவம், தனியார் படையினர் என பாதி பாரிசுக்கும் கூடுதலான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக முன்னெப்போதும் நடந்திராதபடி, ஆயிரக்கணக்கான பன்னாட்டு விளையாட்டு வீரர்கள், பாரிஸ் நகரின் மையப்பகுதியில் வலம்வரவுள்ளனர். உள்நாட்டு நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை மாலையில், 7 ஆயிரத்து 500 போட்டியாளர்கள் சீன் ஆற்றில் 85 படகுகளில் ஆறு கிலோமீட்டர் தொலைவுக்கு படையணிபோல பவனி வருகிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மைதானமே காலியாக கிடந்தது போன்ற நிலைமை. காரணம், உலக நாடுகளையே உலுக்கியெடுத்த கொரோனா!

அதையடுத்து, இப்போது நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் மூன்று இலட்சம் பேர் பார்வையாளர்களாக வருகின்றனர். இவர்களில் உலகம் முழுவதுமிருந்து வரக்கூடிய மிக முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்.

ஒலிம்பிக்கைக் காணவந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நேற்று விருந்தளித்த பிரெஞ்சு அதிபர் கேமரூன், இதுவரை இல்லாத நம்பமுடியாதபடியான ஒரு தொடக்க விழாவைக் காணப் போகிறீர்கள் எனப் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தொடக்கவிழாவில் வரிசைகட்டும் கலைஞர்களில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் லேடி காகா, உலக அளவில் பாராட்டப்படும் பிரெஞ்சு மாலியன் பாடகர் அய நகமுராவும் இடம்பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

பாரிசில் கோடை கால ஒலிம்பிக் போட்டி முதன்மையான அரங்கத்தை விட்டுவிட்டு இப்போதுதான் முதல் முறையாக வெளியில் நடத்தப்படுகிறது. அண்மைக் காலமாக, பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில் இந்த முடிவு குறித்து பல மாதங்களாக கேள்விக்கணைகள் எழுந்துகொண்டே இருந்தன. ஆனாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை.

சீன் நதியின் இரு கரைகளிலும் பகலிரவு பாராமல் காவல்துறையினர், துணை இராணுவப்படையினர் என 45 ஆயிரம் பேர் தொடக்கவிழா பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் 10 ஆயிரம் இராணுவத்தினரும் 22 ஆயிரம் தனியார் பாதுகாப்புப் படையினரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

”சந்தேகமே இல்லாமல், இது பாதி பாரிசுக்கு அளிக்கும் பாதுகாப்பைவிடக் கடினமானதுதான். சுமார் 80 ஆயிரம் பேரை வைத்துக்கொண்டு அங்கு வரும் மொத்த பேரையும் சோதனை செய்து உரிய இடங்களில் அமரவைக்கவேண்டும் என்பது அவ்வளவு சாதாரணம் இல்லைதானே?” என்கிறார், பிராஞ்சு காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் பிரெட்ரிக் பேச்னாடு.

டொனால்டு டிரம்பின் மீதான தாக்குதல் காரணமாக, இன்னும் துல்லியமாக சுடும் காவல்துறையினரும் உயரமான கட்டடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இத்துடன், படகுகளில் ஆயுதப்படை அதிகாரிகளும் வலம்வருவார்கள் என்றும் பிரெஞ்சுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இஸ்ரேல், பாலஸ்தீனக் குழுக்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, புதன் அன்று நடைபெற்ற இஸ்ரேல் கால்பந்தாட்டக் குழுவின் முதல் போட்டியில் அந்நாட்டின் நாட்டுப்பண் பாடப்பட்டபோது இடையூறு செய்ததும் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்ததும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிக்கலானது.

இது ஒரு பக்கம் இருக்க, தொடக்க விழாவில் 3 ஆயிரம் நடனக் கலைஞர்கள் சீன் நதியின் இரு கரைகளிலும் அருகில் உள்ள நோட்ரி டேம் தேவாலயம் போன்ற புராதனச் சின்னங்களின் முன்பாக ரசிகர்களை ஆடித் திளைக்கவைக்க இருக்கிறார்கள். உலக அளவில் கலைக்குப் பேர்போன பிரெஞ்சின் மரபையும் வேற்றுமையில் ஒற்றுமை, பாலின சமத்துவத்தைக் காட்டும்வகையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, உலக சுற்றுலா காதலர்களின் விருப்பத்துக்குரிய இடமான பாரிசின் சிட்டி ஆஃப் லைட் போன்ற கட்டுமானங்கள் இந்த ஒலிம்பிக் போட்டியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியாக ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com