ஈரானியச் செயற்பாட்டாளர் நர்கீஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல்!

நர்கீஸ் முகம்மதி
நர்கீஸ் முகம்மதி
Published on

ஈரானிய மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் நர்கீஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஜான்ஜனில் 1971ஆம் ஆண்டு பிறந்த நர்கீஸ் முகம்மதி, இயற்பியல் பட்டப்படிப்பு படித்தவர். தொழில்முறை பொறியாளரான அவர், பல சீர்த்திருத்த பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி நிறுவிய மனிதவுரிமைக் காப்பாளர்கள் மையத்தில் சேர்ந்து, பின்னர் அந்த அமைப்பின் துணைத்தலைவராகவும் ஆனார்.

ஈரானிய அரசை விமர்சித்ததற்காக முகம்மதி, இதுவரை 13 முறை கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து முறை குற்றவாளி என்றும் தண்டனை பெற்றுள்ளார். மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 154 கசையடிகளையும் பெற்றுள்ளார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள முகம்மதி இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

ஈரானியப் பெண்களுக்காகப் போராடி சிறையில் அடைக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு உதவியதற்காக 2011ஆம் ஆண்டில் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பிணையில் வெளிவந்த முகம்மதி, ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் காரணமாக, 2015ஆம் ஆண்டு மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காகவும் மனித உரிமைகள் - அனைவருக்குமான சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காகவும் நர்கீஸ் முகம்மதிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com