இலங்கை தமிழ் எம்.பி. மீது தாக்குதல்: போலீஸ் முன்பு சிங்கள வெறியர்கள் அட்டூழியம்!

இலங்கை, திருகோணமலையில் திலீபன் ஊர்தி மீது தாக்குதல்
இலங்கை, திருகோணமலையில் திலீபன் ஊர்தி மீது தாக்குதல்படம்: நன்றி- ஐபிசி
Published on

இலங்கையின் ஈழத்தமிழரின் பூர்வீக நகரான திருகோணமலையில் திலீபன் நினைவு ஊர்திப் பயணம்சென்ற தமிழ் எம்.பி. கஜேந்திரன் மீது சிங்கள இனவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை அரசின் காவல்துறையினர் முன்பாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

போர் முடிந்த பின்னரும் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள், இனரீதியான வன்முறைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட அக்கட்சியினர், திலீபன் நினைவு ஊர்திப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கு மாகாணப் பகுதியான பொத்துவில்லில் தொடங்கிய இந்த ஊர்திப் பயணம், கடந்த மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பகுதியைக் கடந்து திருகோணமலை நகரத்தை நெருங்கியபோது, பயண ஊர்திக்கு தடையாக சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டிருந்தார்கள். அந்த இடத்தில் ஊர்தி மெதுவாகச் சென்றபோது, சுற்றிவந்த சிங்கள இனவெறியர் கும்பல் ஒன்று, கண்மண் தெரியாமல் தாக்கத் தொடங்கியது.

ஊர்தியில் அமர்ந்திருந்த தமிழ் எம்.பி. செல்வராசா கஜேந்திரனும் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருடன் இருந்த காண்டீபன் எனும் வழக்குரைஞரை சிங்கள இனவெறி கும்பல் கம்பால் குத்தியது.

ஊர்தியிலிருந்து கஜேந்திரன் இறங்கியபோதும் அவரை அந்த கும்பல் விடாமல் சென்று தாக்கியது. இன்னொரு இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றிச்செல்ல முயன்றதாகக் கருதி சிங்களப் பெண் ஒருவர் வண்டிக்காரரை மிரட்டிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980களின் கடைசிப் பகுதியில் இனப்பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண வலியுறுத்தி, போராளியான திலீபன் இதே செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 12 நாள்கள் தண்ணீர்கூடக் குடிக்காமல், உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார். அந்த நாள்களை ஈழத்தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஊர்திப் பயணத்தை நடத்திவருகிறது.

அமைதியாக நடந்துவரும் இந்தப் பயணத்தில் இந்த ஆண்டில்தான், அதுவும் இலங்கை காவல்துறையின் முன்பாக இப்படியொரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இரண்டு பெண்கள் முன்னிலையில் வந்து ஊர்தியைத் தாக்கியதுடன் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டது, தமிழர் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com