பிரான்சில் நேற்று நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாம் சுற்று முடிவும் வந்து அந்தரத்தில் தள்ளிவிட்டுள்ளது.
அதிபர் மேக்ரோன் தலைமையிலான மையவாதக் கட்சி ஆட்சி பிரான்சில் நடைபெற்றுவந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டு முறைமைப்படி கடந்த மாதம் 29, நேற்று ஜூலை 7 ஆகிய தேதிகளில் இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடத்தப்பட்டது.
முதல் சுற்றில் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணிக் கட்சி தலைமையிலான கூட்டணி 33.2 சதவீத வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியது. இடதுசாரிகள் கூட்டணி இரண்டாவது இடத்துக்கு வந்தன.
நேற்றைய இரண்டாவது சுற்றும் முடிந்த நிலையில், மொத்தமுள்ள 577 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதே வலதுசாரிக் கூட்டணியே முன்னிலை பெறும் எனக் கருதப்பட்டது. ஆனால் அதை வரவிடாமல் செய்ய மற்ற கட்சிகள் அனைத்தும் கைகோக்குமாறு அதிபர் மேக்ரோன் அறைகூவல் விட்டார்.
இந்நிலையில் இடதுசாரிகள் கூட்டணியான புதிய பாப்புலர் முன்னணி 187 இடங்களைப் பெற்று முதல் இடத்துக்கு வந்துள்ளது.
ஆளும் மையவாதக் கட்சி 159 இடங்களைப் பிடித்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தீவிர வலதுசாரிக் கூட்டணியோ 142 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 289 இடங்களை முன்னணியில் வந்துள்ள மூன்று கட்சிகளில் ஒன்றுகூடப் பெறமுடியாத நிலையில், பிரான்சில் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் புதிய பிரதமர் யார் என்பதே இப்போது அனைவரின் கேள்வியுமாக இருக்கிறது.
ஆளும் மையவாதக் கட்சி கூட்டணி வாக்கெடுப்பில் விலகி நின்றால், இடதுகூட்டணி அதில் வெற்றிபெற்றுவிடும். இப்படித்தான் அங்கு ஆட்சியமைய வாய்ப்பு உள்ளது.
முதலிடம் வந்துள்ள இடதுசாரிக் கூட்டணி இந்த வாரத்திற்குள் பிரதமரை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டணியில் அதிக இடங்களை வென்றுள்ள தலைகுனியா பிரான்ஸ் எனும் கட்சியின் தலைவர் ஈன் லூக் மெலிஞ்சான் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவது சந்தேகம்தான். ஏனென்றால், பிரெஞ்சு சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி ஆகிய கட்சிகளும் சேர்ந்து முடிவைத் தீர்மானிக்கவேண்டிய நிலையில், மெலிஞ்சான் அவருடைய கட்சிக்கு உள்ளேயே கடும் போக்கைக் கையாள்பவர் என்கிற பெயர் உண்டு. இதை மீறியும் அவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
இது ஒரு பக்கம் இருக்க, ஒருவேளை இந்தத் தேர்தலில் வலதுசாரி தேசியப் பேரணிக் கட்சிக் கூட்டணி அதிக இடங்களைப் பிடித்திருந்தால், அக்கட்சியின் தலைவர் இருபத்தெட்டே வயதான இளைஞர் ஜோடான் பாடெல்லா பிரதமராக ஆகியிருப்பார். கடந்த மாதம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பாடெல்லாவின் பிரச்சாரமும் செல்வாக்கும் ஓங்கியிருந்தன. முதல் சுற்றிலும்கூட அவரால்தான் வலதுசாரிக் கூட்டணி முன்னிலைக்கு வந்தது என்று கூறப்பட்டது. தேர்தல் முடிவால் அவரின் பிரதமர் கனவு தகர்ந்துபோனது!