வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் யார் என்பதை பார்ப்போம்.
வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். மேலும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படைகளின் தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுக்களின் பிரதிநிதிகள் கொண்ட 13 பேருடன் நேற்று அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸை இடைக்கால தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முகமது யூனுஸ் அதிபர் முகமது ஷஹாபுதீனால் நியமிக்கப்பட்டார். அவர் விரைவில் பாரிசிலிருந்து வங்கதேசத்துக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
யாா் இந்த முகமது கான்?
பேராசிரியர் முகமது யூனுஸ் (83), தொழிலதிபருமாகவும் பொருளாதார நிபுணராகவும் வங்கதேச மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் குறுங்கடன் முறைக்கு முன்னோடியாக இருந்த அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1984-ஆம் ஆண்டு அவர் தொடங்கிய கிராமீன் வங்கி, கடன் பெறத் தகுதியில்லாதவர்களுக்கு கடனுதவி அளித்து வந்தது. இதனால் ஏராளமானவர்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுடனா யூனுஸின் நெருக்கம் ஹசீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால், 2008ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் அவருக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கினார் ஹசீனா. அவர் மீது மட்டும் 190 வழக்குகளை போட்டுள்ளார்.
கிராமீன் வங்கி மூலம் ஏழைகளுக்குக் கடன் அளித்தாலும், அதை வசூலிக்க வன்முறை மற்றும் பிற மோசமான வழிமுறைகளைக் கையாண்டதாக யூனுஸ் மீது குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா, ‘ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவர்’ என்று விமர்சித்தார். ஷேக் ஹசீனா ஆட்சியின் கொள்கைகளை முகமது யூனுஸ் மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார்.
1940 ஆம் ஆண்டு சிட்டாங்கில் பிறந்த யூனுஸ் டக்கா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த பின்னர், பொருளாதாரம் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், மத்திய டென்னசி மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். பின்னரே அவர் வங்கதேசம் திரும்பினார்.