யார் இந்த இஸ்மாயில் ஹனியே? - 10 குறிப்புகள்!

இஸ்மாயில் ஹனியே
இஸ்மாயில் ஹனியே
Published on

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்துவரும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை புதிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

1948 ஆம் ஆண்டு பிறந்த இஸ்மாயில் ஹனியே, சிறு வயதிலிருந்தே பாலஸ்தீனர்களுக்கான அகதிகள் முகாமில் வளர்ந்தவர். இயல்பாகவே பாலஸ்தீனர்களின் கஷ்டங்களை அறிந்தவராக இருந்தார்.

ஐ.நா. குழந்தைகள் அமைப்பு நடத்தும் பள்ளியில் பள்ளிக் கல்வியையும் காசாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் பட்டமும் பெற்றார். மாணவர் பருவத்திலேயே அரசியலில் குதித்தார்.

1987ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய ஹனியே, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

ஹமாஸ் இயக்கத்தின் மதத் தலைவரான ஷேக் அகமது யாசினுடனான நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, அவ்வமைப்பில் அவரை மேலும் உயர்த்தியதோடு, தலைவர் அந்தஸ்துக்கும் உயர்ந்தார்.

தன் அரசியல் செயல்பாட்டால் இஸ்ரேலியப் படையால் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலஸ்தீனத் தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை பெற்றது. அப்போது ஹனியே பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அரசியல் காரணங்களால் அது நடைபெறவில்லை.

இந்நிலையில், ஹனியே கடந்த 2017ஆம் ஆண்டு ஹமாஸின் தலைவரானார். ஹமாஸின் கொள்கை, உத்திகளை வகுப்பதில் அவரின் பங்கு முக்கியமானது எனக் கூறப்படுகிறது.

மற்ற ஹமாஸ் தலைவர்களைப் போல அல்லாமல், இஸ்மாயில் ஒரு மிதவாதத் தலைவராக காசா மக்களால் பார்க்கப்பட்டு வந்தார்.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து ஹனியேவின் உறவினர்கள் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் அவரின் மூன்று பிள்ளைகளும் இரண்டு பேரக் குழந்தைகளும் கொல்லப்பட்ட நிலையில், தற்போதும் அவரும் குறிவைத்துக் கொல்லப்பட்டிருப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் சர்வதேச நடப்பியல் ஆய்வாளர்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com