காசாவில் சுமார் 17 ஆயிரம் ஆதரவற்று இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கான பாலஸ்தீன தொடர்புத் தலைவர் ஜொனாதன் கிரிக்ஸ் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
“காசாவிலிருந்து சுமார் 17 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இது ஒரு சதவீதமாகும். இதில், பெற்றோர்கள், உறவினர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 17 ஆயிரத்தைத் தாண்டி உள்ளதாக மதிப்பிடப்பட்டப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் இழப்பு குறித்த கதை உள்ளது. அந்த கதை இதயத்தை உடைக்க கூடியதாக இருக்கிறது.
குழந்தைகள் காப்பகத்தில் உணவு, தண்ணீர், தங்குமிடம் இல்லாததால் போரில் கைவிடப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பாலஸ்தீன குழந்தைகளின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புச் சத்தத்தைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் மிக அதிகளவில் பதட்டம் அடைந்துள்ளனர். பசியின்மை, தூக்கமின்மை, பீதி ஆகியவற்றால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசாவில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மனநலம், உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது” என்று ஜொனாதன் கிரிக்ஸ் கூறினார்.
அதேபோல், காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 21 மருத்துவமனைகள் செயல்படவில்லை என்றும், 13 மருத்துவமனைகள் பகுதி நேரமாக செயல்படுவதாகவும், 2 மருத்துவமனைகள் மட்டுமே முழுமையாக செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.