குற்ற வழக்கில் தண்டனை பெறும் முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Published on

ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்படும். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் பெரும்பாலும் அபராதமே விதிக்கப்படும் என்கின்றனர்.

இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை.

கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக டேனியல்ஸ் கூறியிருந்தார்.

இவ்வழக்கில் மொத்தமாக 34 புகார்களை டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டு வந்தார். ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் 12 நடுவர்கள் இரண்டு நாட்கள் விவாதித்து ஒருமனதாக டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com