உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை கடந்த ஆண்டு அதிரடியாக வாங்கினார். அதை அடுத்து அந்நிறுவனத்திலும் ட்விட்டர் பயன்பாட்டிலும் அவர் செய்த அதிரடி மாற்றங்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. ட்விட்டரின் உரிமையாளரே ஏற்படுத்திக்கொடுத்த தொழில்வாய்ப்பை பயன்படுத்த, களம் இறங்கியிருக்கிறார் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்.
ட்விட்டரைப் போலவே, மைக்ரோ பிளாக்கிங் தளமாக ‘த்ரெட்ஸ்’ என்ற தளத்தை உருவாக்கியிருக்கிறது மெட்டா. உலக அளவில் அறிமுகமான சில மணிநேரங்களில் த்ரெட்டிஸில் 10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இணைந்திருக்கிறார்கள். இது ட்விட்டர் மாற்றாக த்ரெட்ஸ்-ஐ உருவாக்கும் என டெக்னாலஜி வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ, “ட்விட்டருக்கு பதிலாக இன்னொன்று வரமுடியாது. எங்களை அடிக்கடி யாராவது காப்பி எடுக்க முயல்வார்கள். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெற்றதில்லை” என அழுத்தமாக கூறியுள்ளார்.
இந்த இருபெரும் ஜாம்பவான்களின் பிஸினஸ் கணக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். சரி, த்ரெட்ஸில் என்ன ஸ்பெஷல்?
பயனர்கள் 500-எழுத்துகள் வரையிலான இடுகைகளைப் பகிரலாம். படங்கள், இணைப்புகள் மற்றும் 5 நிமிட வீடியோக்களையும் சேர்க்கலாம். இன்ஸ்டாகிராம் குழுவால் வடிவமைக்கப்பட்ட, புகைப்பட-வீடியோ பகிர்வு பயன்பாட்டில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் நேரடியாக த்ரெட்களில் லாகின் செய்யலாம்.
சுவாரஸ்யமாக த்ரெட்ஸ் லோகோ தமிழ் ‘கு’ போல உள்ளதாக ஒரு பேச்சும் சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. லோகோ குறித்து ஜுக்கர்பெர்க் அல்லது மெட்டாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்றாலும், இந்த வடிவமைப்பு நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளை ஆற்றிவருகின்றனர். சிலர் இது காது போல இருப்பதாகவும் சிலர் தமிழ், மலையாள எழுத்துக்கள் ’கு’ போல இருப்பதாகவும் சிலர் ‘G’ என்ற எழுத்துபோல உள்ளதாகவும் விவாதிக்கின்றனர்.
அதே சமயம் இது ‘இ’ போல இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதை நூல் என்பதா இழை என்று அழைப்பதா என தமிழ் ஆர்வலர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.
பயனர்களை வைத்து எவ்வளவு பிஸினஸ் செய்ய முடியும் என முதலாளிகள் சிந்தித்துக்கொண்டிருக்க, பயனர்கள் ‘லோகோ’ குறித்து தீவிரமாக வினையாற்றிக்கொண்டுள்ளனர். அவரவர்களுக்கு அவரவர் பிரச்சினை!