உயிரிழந்த இலங்கைக் கடற்படைச் சிப்பாய் பிரியந்த ரத்நாயக்கே
உயிரிழந்த இலங்கைக் கடற்படைச் சிப்பாய் பிரியந்த ரத்நாயக்கே

தமிழகப் படகு மோதி இலங்கைப் படை வீரர் சாவு!

Published on

வடக்கு இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறிச் சென்று தமிழக மீனவர்கள் இழுவைப்படகில் மீன்பிடிப்பதாக அங்கு குற்றம்சாட்டப்படுகிறது. அரசாங்கம் மட்டுமின்றி அங்குள்ள ஈழத்தமிழ் மீனவர்களும் அரசியல் கட்சிகளுமே இந்தக் குற்றச்சாட்டை வைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதியன்று யாழ்ப்பாணம் மாவட்டப் பகுதி உட்பட்ட வட கடல் பரப்பில் இலங்கைக் கடற்படையின் வடபிராந்தியக் கட்டளைப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அந்தப் படகுகளை நோக்கி இலங்கைக் கடற்படையினர் விரைந்தபோது தமிழகப் படகுகளுடன் மோதல் ஏற்பட்டது என்றும் அதில் இலங்கைக் கடற்படைப் படகு அணியின் மாலுமியான பிரியந்த ரத்நாயக்கே காயமடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்த 41 வயதான இவர், அந்நாட்டின் சிறந்த நீர்மூழ்கி வீரர்களில் ஒருவர் என்று பெயரெடுத்தவர். ஆறு வயது ஆண் குழந்தையும் 11 வயது பெண் குழந்தையும் உள்ள பிரியந்தாவின் மரணம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத் தமிழ் மீனவர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. குருநாகலில் நடைபெற்ற அந்தச் சிப்பாயின் இறுதி நிகழ்ச்சியில் யாழ்ப்பாண மீனவர்கள் மூன்று பேருந்துகளில் சென்று கலந்துகொண்டனர்.

இதனிடையே, பிரியந்தா மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறையிடம் முறையிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எல்லைதாண்டிய மீன்பிடிக் குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 300க்கும் அதிகமானோரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ள நிலையில், முதல் முறையாக தமிழகப் படகுடன் ஏற்பட்ட மோதலில் அந்நாட்டுக் கடற்படைச் சிப்பாய் உயிரிழந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com