தைவான் நாட்டில் இன்று காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். 736 பேர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 7.4ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் தென்பகுதி நகரான ஹூவேலியனை மையமாகக் கொண்டு 18 கி.மீ. சுற்றளவுக்கும் 34.8 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் இருந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு சற்றுமுன்னதாக தைவானை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கத்தின் அளவு பதிவாகியுள்ளதாக தைபே நகரில் உள்ள நிலநடுக்கவியல் மையத்தின் இயக்குநர் வூ சியான் ஃபூ தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கமானது நிலத்திலே அதிகமாக இருந்தபோதிலும் கடல்பகுதியிலும் உணரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தின் மையமானது இரண்டு கண்டத் திட்டுகளுக்கு இடைப்பட்ட பகுதி என்றாலும், தைவான் மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வாலும் கடுமையான கட்டட விதிமுறைகளாலும் பேரழிவு நிகழாதபடி தடுக்கப்பட்டுள்ளது என்றும் வூ தெரிவித்தார்.
இதற்கு முன்னர் 1999 செப்டம்பரில் தைவானில் 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு, அதில் 2,400 பேர் பலியானது இதுவரை அந்நாட்டின் மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.