ஒரே நேரத்தில் வெடித்த பேஜர் குண்டுகள்…. அலறிய ஹிஸ்புல்லா... இஸ்ரேலின் மொசாட் கைவரிசை?

Pager explosion Hezbullah
பேஜர் குண்டுகள்
Published on

அவனவன் டிபன் பாக்ஸில் குண்டு வைப்பான்… ரயிலில் குண்டு வைப்பான். இத்தினியூண்டு பேஜர்ல குண்டு வைப்பானோ என்று லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் அலறிக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று லெபனானின் தலைநகரில் இயங்கும் இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லா இயக்கப் போராளிகள் பயன்படுத்தும் பேஜர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடிக்க, ஒன்பது பேர் இறந்துபோனார்கள். அதைப் பயன்படுத்திய ஏராளனபேர் காயமடைந்துள்ளனர்.

என்னது இந்த செல்போன் யுகத்தில் பேஜரா? ஒரே பேஜாராக இருக்கிறதே என்று நினைக்கலாம்.

ஹிஸ்புல்லா இஸ்ரேலின் லெபனான் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1980களில் உருவான இயக்கம். அதிலிருந்து இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. ஹிஸ்புல்லாவின் செயல்பாடுகளை இஸ்ரேல் தீவிரமாகக் கண்காணிப்பதால் செல்போன்களைப் பயன்படுத்தினால் தகவல்கள் கசியும் என்பதால் ஹிஸ்பில்லா போராளிகள் பேஜர்கள் மூலம் தகவல்களைப் பறிமாறிக் கொண்டிருந்தனர். இதனால் லெபனானில் பொதுமக்களும் கூட இன்னும் பேஜர் பயன்பாட்டில் இருக்கிறார்கள்.

காஸா பகுதியில் இஸ்ரேல்- ஹமாஸ் மோதலுக்குப் பின்னால் ஹிஸ்புல்லா மீதான கண்காணிப்பை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இந்நிலையில்தான் பேஜர் வெடிப்புகள்.

யோசனையே செய்யாமல் இந்த குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் இருக்கிறது என்று சொல்லிவிடலாம். தைவான் நாட்டில் இருந்து பேஜர்களை ஹிஸ்புல்லா இறக்குமதி செய்கிறது. வரும் வழியில் இந்த பேஜர்களில் நுண்ணிய வெடிபொருளை ஆள்வைத்து சேர்த்துவிட்டிருக்கிறது மொசாட். 3 கிராம் அளவிலான வெடி மருந்துதான் இது! பல மாதங்களாகவே இது நடந்துவந்துள்ளது.  கடைசியில் நேற்று திட்டமிட்டபடி ஹிஸ்புல்லா அமைப்பு அனுப்புவதுபோல் ஒரு ரகசிய செய்தியை மொசாட் ஆட்கள் பேஜரில் அனுப்ப, அதை திறந்த உடன் பேஜர்களில் உள்ள வெடி மருந்து தூண்டப்பட்டு.. வெடித்துள்ளது.

ஹிஸ்புல்லாக்காரர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். இதற்குப் பழிக்கு பழி வாங்குவார்கள். ஆனால் தங்கள் நெட்வொர்க்கில் மொசாட் கைவரிசை காட்ட அனுமதிக்கும் அளவுக்கு அவர்களின் கண்காணிப்பு பலவீனமாக இருந்துள்ளது என்று லெபனானான் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேல் காரர்கள் இந்த பேஜர் வெடிப்புகள் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com