அங்கேரியைச் சேர்ந்த கட்டலின் கரிக்கோ, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வைஸ்மேன் ஆகியோருக்கு இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இன்று தொடங்கியுள்ளது. அதன்படி, முதல் பரிசாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக எம்.ஆர்.என்ஏ (mRNA) தடுப்பூசி உருவாக்கத்துக்கான பங்களிப்பைச் செய்த அங்கேரியைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசுடன், ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ், இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றன.