ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகியில் அணுகுண்டு வீச்சிலிருந்து தப்பியவர்களின் அமைப்பான நிகான் ஹிடாங்கியோ இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசைப் பெறுகிறது.
1945இல் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டதை அடுத்து, அங்கு புல்பூண்டுகள்கூட மிஞ்சவில்லை எனும் அளவுக்கு நாசமாக்கப்பட்டன. அதன் அழிவைத் தொடர்ந்து அணு ஆயுதத்துக்கு எதிரான இயக்கம் வளரத் தொடங்கியது. ஜப்பானில் நிகான் ஹிடாங்கியோ - ஹிபாகுசா எனும் அமைப்பு இதில் தீவிரமாக ஈடுபட்டது.
அதன் தொடர் பிரச்சாரத்தால் அணு ஆயுத எதிர்ப்புணர்வு பன்னாட்டு அளவில் பரவலானது. அணு ஆயுதங்களால் பேரளவில் மனித அழிவு ஏற்படுவதைத் தடுக்கவேண்டும் என்பதை உலகம் உணர்ந்து, அதற்கு எதிராகத் தடைவிதிக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டது.
ஜப்பானின் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் சான்றாதாரமான இந்தப் பிரச்சாரம் வீச்சாக அமைந்தது. தனிப்பட்டவர்களின் வாழ்க்கைக் கதைகள், விழிப்பூட்டல் கல்வி, சொந்த அனுபவங்களை எடுத்துச்சொல்வதன் மூலம் ஹிபாகுசா அமைப்பு அணு ஆயுத எதிர்ப்புக்கு வழிவகுத்தது என்று நோபல் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய விவரிக்கமுடியாத, நினைத்துப்பார்க்க முடியாத துன்பத்தையும் வலியையும் விளக்குவதற்கு ஹிபாகுசா உதவியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.