ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சத்தால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவே இல்லாத பெரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நமீபியாவில் பல இடங்களில் உணவுக்காக காட்டு விலங்குகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்களும் நிகழ்வதால், அந்நாட்டு அரசு அதிரடியாக ஒரு முடிவை எடுத்தது. காட்டு விலங்குகளைக் கொன்று பசியால் அல்லாடும் மக்களுக்கு உணவு அளிப்பது என்பதுதான் அது!
அரசின் இந்த முடிவின்படி 83 யானைகள் உட்பட 723 விலங்குகள் இறைச்சியாக ஆக்கப்பட உள்ளன. 300 வரிக்குதிரைகள், 100 காட்டெருமைகள், 50 இம்பாலா வகை மான்கள், 100 எலாண்ட் வகை மான்கள், 30 நீர் யானைகள் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதில், இதுவரை 150 விலங்குகள் மூலம் 63 டன் இறைச்சி கிடைத்துள்ளது என்று நமீபிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வரும் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும்வகையில், நாட்டு மக்களைப் பாதுகாக்க, உணவளிக்க காட்டு விலங்குகளைக் கொல்ல நாட்டின் சட்டம் இடமளிக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருக்கும் மிகப் பெரிய சவானா வகை யானைகள் அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் உள்ள நிலையில், உணவுக்காக யானைகள் கொல்லப்படுவது காட்டுயிர் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதேசமயம், தெற்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி 3 கோடி பேர் உணவு இல்லாமல் பட்டினி கிடப்பதாக ஐநா உணவு அமைப்புத் திட்டம் கணக்கு ஒன்றை வெளியிட்டது.
கடந்த 2018 முதல் 2021வரை இதே பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோதும், இப்போது முன்னைவிட நிலைமை மோசமாகியுள்ளதாக ஐநா சார்ந்த அமைப்புகளே தெரிவிக்கின்றன. நமீபியாவின் மொத்த 14 இலட்சம் மக்கள்தொகையில் பாதி பேர் பட்டினியால் அவதிப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.