அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை எலான் மஸ்க் இன்று நேர்காணல் செய்தார். அதில், கடவுள் நம்பிக்கை முதல் கமலா ஹாரிஸ்வரையிலான பல்வேறு கேள்விகளுக்கு டிரம்ப் தன்னுடைய பாணியில் பதில் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த நேர்காணல் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணியளவில் நடைபெறவிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது.
ஆனாலும் நேர்காணல் தொடங்கிய உடனேயே லட்சக் கணக்கானோர் அதைக் கேட்கத் தொடங்கினர்.
டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான கேள்வியுடன் தொடங்கிய இந்த நேர்காணல் இரண்டு மணி நேரம் நீடித்தது.
துப்பாக்கிச் சூடு தொடர்பான கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்:
“அது துப்பாக்கி குண்டு தான் என்றும், அது என் காதில் பட்டுவிட்டது என்றும் உடனே தெரிந்துவிட்டது. நான் சற்று தலை சாய்ந்து நின்றதால் தான், குண்டு காதில் பாய்ந்திருக்கிறது. இல்லையெனில் நிலைமை மோசமாகி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் துணிச்சலாக இருப்பது போல் நடிக்க முடியாது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து நான் நலமுடன் இருப்பதை தெரிவிக்கவே, உடனடியாக எழுந்து நின்றேன். கடவுள் மறுப்பாளர்கள் கடவுளின் இருப்பைப் பற்றி பரிசீலிக்கலாம். நான் இப்போது கடவுளை நம்புகிறேன்.” என்றார்.
கமலா ஹாரிஸ் குறித்து...
கமலா ஹாரிஸ் அமெரிக்காவை அழித்துவிடுவார். அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள் நாட்டுக்குக் கேடு விளைவிக்கும். ஏற்கெனவே பணவீக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்கர்கள் மத்தியில் சேமிப்பு குறைந்துவிட்டது. மேலும் அமெரிக்கர்கள் கடன் வாங்கி செலவழிக்க ஆரம்பித்துவிட்டனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் இது மேலும் மோசமாகும். கமலா ஹாரிசை வரவேற்றுள்ள சட்டவிரோத நபர்களின் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகம். அவரைத் தேர்ந்தெடுத்தால் நாட்டில் வணிகம் இல்லாமல் போய்விடும்.
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக...
உலகம் முழுவதுமிருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் அதிகரித்துள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜோ பைடன் காரணம்.” என்று டிரம்ப் கூறினார்.
தொடர்ந்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த டிரம்ப், தான் அதிபராக இருந்திருந்தால் இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்றும் ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்றிருக்காது என்றும் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார்.
அதிபர் தேர்தலில், டிரம்பை ஆதரிப்பதாக அறிவித்த உலகின் முன்னணி தொழிலதிபர் எலன் மஸ்க், டிரம்பின் தேர்தல் நிதியாக 375.80 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.