லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில், 36 பேர் உயிரிழந்து உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27 ஆம் தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. அடுத்தடுத்து பல தலைவர்களையும் படுகொலை செய்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் கடந்த 24 மணிநேரத்தில், லெபனானில் 36 பேர் உயிரிழந்து உள்ளனர். 150 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் இதுவரை நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 2,119 பேர் பலியாகி உள்ளனர். 10,019 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.