இலெபனானை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என்பதை அந்த இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த திங்கள் முதல் இலெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்க செல்வாக்குப் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவருகின்றன. இதில் பல டஜன் குழந்தைகள் உட்பட 720-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலெபனான் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, அந்நாட்டு நேரப்படி நேற்று வெள்ளி மாலை தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் படைகள் 140 நிலைகளை ஹிஸ்புல்லா இடங்களெனக் கூறி, மூர்க்கமான தாக்குதலை மேற்கொண்டது. அங்குள்ள தாகியே எனும் இடத்தில் உள்ள ஆறு மாடிக் கட்டடம் தாக்கப்பட்டதில் தென்பகுதி கட்டளைத் தளபதி அலி கார்க்கியும் கூடுதல் தளபதிகளும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 91 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக, பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனே அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் படைகள் அறிவித்தபடி இருந்தன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பெய்ரூட்டின் வீதிகளில் அகதிகளாகத் திரண்டு உயிரைக் காக்க ஓடினார்கள்.
பெய்ரூட்டில் உள்ள ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இல்லாத அளவுக்கு பெய்ரூட்டில் ஆயிரக்கணக்கானவர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்; நிலைமை மோசமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.