அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடும் டொனால்ட் டிரம் – கமலா ஹாரிஸ் இடையே நடைபெற்ற விவாதத்தில் கருகலைப்பு, பொருளாதாரம், சட்டவிரோத குடியேற்றம், மூன்றாம் உலகப்போர் போன்ற விஷங்கள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்த விவாத்தில் கமலா ஹாரிஸின் குரலே ஓங்கி இருந்ததாகவும் டிரம்ப் கொஞ்சம் அடக்கி வாசித்ததாகவும் கூறுகின்றனர்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்ப் 5ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இருவரும் முதன்முறையாக இன்று பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏபிசி செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது இருவரும் தனது கருத்துகளை அள்ளி வீசினர். அப்போது கமலா ஹாரிஸ் பேசியதாவது:
“நடுத்தர மக்களின் பொருளாதார மேம்பாடு எனது லட்சியம். மக்களுக்கான எந்த திட்டமும் டிரம்பிடம் இல்லை. டிரம்ப் அரசு பணக்காரர்களுக்கே வரி சலுகை கொடுத்தது. நடுத்தர மக்களை முன்னேற்றவில்லை.
சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்ட டிரம்ப், அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினார். டிரம்ப் ஆட்சி காலத்தில் சுகாதாரமும் பொருளாதாரமும் மிக மோசமாக இருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை சீரழித்தவர் டிரம்ப். அவரால்தான் வர்த்தக போர் ஏற்பட்டது.
டிரம்பால் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்புக்கு எதிராக, 20 மாகாணங்களில் சட்டங்கள் உள்ளன. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறக்கூடாது. ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை அரசு நிர்ணயிக்கக் கூடாது. டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையை கொண்டு வந்து விடுவார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம்.
நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறது. மக்களின் பிரச்னைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளி தான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனால் அவர் மீது வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார்.
டிரம்ப் மீண்டும் மீண்டும் சட்டவிரோத குடியேற்றத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். வேறு எதையும் பேசுவதில்லை. நாட்டின் சுயசார்பு பொருளாதாரத்தை உயர்த்துதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.” இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.
இதைத் தொடர்ந்து டிரம்ப் பேசியதாவது:
“கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம்.
பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்.
சட்டவிரோத குடியேற்றம் அதிகரிக்க பைடன் ஆட்சி தான் காரணம். குற்றவாளிகள், தீவிரவாதிகள், கடத்தல்காரர்களை குடியேறிகளாக பைடன் ஆட்சி அனுமதிக்கிறது. நீதித்துறையை தனக்கு எதிராக ஏவி விட்டு அதிபர் தேர்தலில் வெல்ல நினைக்கிறார் அதிபர் ஜோ பைடன்.
கருக்கலைப்பு தொடர்பாக மிக ஆபத்தான கருத்துக்களை ஜனநாயக கட்சியினர் கூறினர். பைடன் ஆட்சியில் 9 மாதங்களிலும் கருக்கலைப்பு செய்ய அனுமதித்தனர். கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாகாணங்களில் இருக்க வேண்டும். கடந்த 52 ஆண்டுகளாகவே கருக்கலைப்பு பிரச்சினை ஒரு சிக்கலாக உள்ளது. செயற்கை கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. கருக்கலைப்புக்கு எதிரானது எனது நிலைப்பாடாக இருந்தாலும் மக்களின் கருத்துப்படியே செயல்படுவேன்.
கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்.
நான் வித்தியாசமான ஆள். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை, படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்.” இவ்வாறு டிரம்ப் பேசினார்.