44 வயது பெண்ணுக்கு இப்படி ஓர் ஆசை... விளைவு காட்டுத் தீ!
இப்படியும் ஒருவர் இருக்கமுடியுமா என வாயைப் பிளக்கவைத்துள்ளார், கிரேக்க நாட்டைச் சேர்ந்த 44 வயது பெண்.
கிரீசின் திரிபோலி நகர்ப் பகுதியில் அண்மையில் இரண்டு காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்தன. அவற்றின் பின்னணியில் இந்தப் பெண் இருந்தது கண்டறியப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தொன்மையான கிரேக்கம் எனப் புகழ்பெற்ற கிரீஸ் நாட்டில், அண்மைக் காலமாக வறட்சியாலும் அதிக வெப்பத்தாலும் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. தலைநகர் ஏதென்சில் சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ந்த காட்டுத் தீ சம்பவங்களால் சுற்றுலா பயணிகளும் பகுதிவாசிகளும் அந்தந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த அளவுக்கு அங்கு தீப்பிடிக்கும் சம்பவங்கள் பேரழிவாக மாறிவருகின்றன.
இந்த நிலையில் இப்படியான சம்பவங்களில் மனிதர்களே ஈடுபடும் அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகின. இதை அந்நாட்டு அரசு இதில் கவனம்செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில், கடந்த மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் கெரசிட்சா எனும் பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் காட்டுத் தீ ஏற்பட்டது. அதற்குக் காரணமானவர் குறிப்பிட்ட அந்தப் பெண்தான் என தெரியவந்துள்ளது.
இரண்டு இடங்களிலும் அந்தப் பெண் இருந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையொட்டி நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண், தீயணைப்பு வீரர்களைச் சந்திக்கவும் அவர்களுடன் தீயணைப்பதில் உடனிருக்கவும் அவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிந்தது. ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று கைதுசெய்யப்பட்ட அவருக்கு, 36 மாதங்கள் சிறைத்தண்டனையும் ஆயிரம் யூரோ தண்டத் தொகையும் விதிக்கப்பட்டது.
அவருடைய தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் காலகட்டத்தில் வேறு ஏதேனும் குற்றத்தில் அவர் ஈடுபட்டால் புதிய குற்றத்துக்காக கூடுதல் காலம் அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட இரண்டு தீ சம்பவங்களிலும் நல்வாய்ப்பாக தீயணைப்பு வீரர் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. பண்ணைத் தோட்டத்தின் சிறு பகுதியில் மட்டும் சேதம் ஏற்பட்டது.
இதேபோல, இன்னொரு இடத்தில் நிகழ்ந்த மூன்று தீ சம்பவங்களில் சந்தேகத்துக்கு உரிய 51 வயது ஆண் ஒருவரும் பிடிபட்டார். அவருக்கு 1,550 டாலர் தண்டத்தொகை விதிக்கப்பட்டது.