ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியான வெலன்சியா மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
ஸ்பெயினில் 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 87 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.