சரக்கு கப்பல்: மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இரண்டு இளைஞர்கள்!
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள்

சரக்கு கப்பல்: மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இரண்டு இளைஞர்கள்!

Published on

தமிழ்நாடு, கேராளாவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், மாலத்தீவில் உள்ள சரக்குக் கப்பல் ஒன்றில், கடந்த 13 மாதங்களாக சிக்கித்தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரியை சேர்ந்த விக்டர் அனிஷ், கேரளாவை சேர்ந்த நந்தகுமார் இருவரும் புரவலன் 1 என்ற சரக்கு கப்பலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு சேர்ந்து உள்ளனர். அந்த சரக்கு கப்பல் மாலத்தீவு துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

மாலத்தீவு துறைமுகத்துக்கு வெளியே, சில கிலோமீட்டர் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இந்த சரக்கு கப்பல், கடந்த 13 மாதங்களாக அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் அந்த கப்பலிலேயே சிக்கி தவித்து வருகின்றனர். கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம், அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கேரளாவை சேர்ந்த நந்தகுமார் கூறுகையில், “நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த கப்பலில் பணிக்கு சேர்ந்தபோது கப்பல் தூத்துக்குடிக்கு செல்ல திட்டமிடப்பட்டது. மேலும் சில மாலுமிகள் பணியில் சேருவார்கள் என்றும் பின்னர் கப்பல் இந்தியாவுக்கு செல்லும் என்றும் கூறினார்கள். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் யாரும் பணிக்கு சேரவில்லை. எனவே என்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் கூறினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் இலங்கையை சேர்ந்த 4 பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.

இப்போது மொத்தம் 7 பணியாளர்கள் உள்ளோம். ஆனால் கப்பல் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் படகுகளை நம்பியே வாழ்கிறோம்.

கடந்த 13 மாதங்களாக சம்பளமும், சரியான உணவும் தராமல் அலைக்கழிக்கிறார்கள். தற்போது டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.” என்கிறார் வேதனையுடன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com