இடஒதுக்கீடு ரத்து... அமைதி திரும்புமா வங்கதேசத்தில்?

போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள்
Published on

வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டங்களும் வன்முறை சம்பவத்துக்கும் காரணமான 30 சதவீத இடஒதுக்கீட்டை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

வங்கதேசத்தில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அதனை மீண்டும் அமல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் நாடு முழுவதும் பரவி, வன்முறையாக வெடித்ததில் இதுவரை சுமார் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அந்நாட்டு அரசு வெளியிட மறுத்தோடு, தொலைத் தொடர்பு, இணைய சேவை என அனைத்தும் முடக்கியுள்ளது.

மேலும், கலவரத்தைத் தூண்டியதாக எதிர்க்கட்சி தலைவர்கள், மாணவர் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையெ, கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நாட்களுக்கு வங்கதேசம் முழுவதும் பொது விடுமுறையும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை வங்கதேச உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.

போராட்டக்காரர்கள்
போராட்டக்காரர்கள்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 5 சதவீதமும் மீதமுள்ள இரண்டு சதவீதத்தில் ஒரு சதவிகிதம் பழங்குடியினத்தவருக்கும் மற்றொரு சதவிகிதம் மாற்றுத்திறனாளிக்கும் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒதுக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 93 சதவீத காலியிடங்கள் தகுதியின் அடிப்படையில்தான் நிரப்பப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதாவது, சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் வன்முறைக்குக் காரணமான அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்பட்சத்தில், வங்கதேசத்தில் அமைதி திரும்பலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com