வங்காள தேசத்தில் முப்பது சதவீத இட ஒதுக்கீடுதொடர்பாகத்தொடங்கிய மாணவர்கள் போராட்டம் கடந்த மாதம் நாட்டையே உலுக்கியெடுத்தது. மாணவர், இளைஞர் என பொதுமக்களும் காவல்துறை, இராணுவத்தினர் என ஆயுதப்படையினரும் 300-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறையில் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவின் ஆதரவுடன் பிரிந்த கிழக்கு பாக்கிஸ்தான் பகுதியான வங்கதேசம் தனி நாடாகப் பாடுபட்ட போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட்டது. தொடரும் இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட எண்ணிக்கை மாணவர்கள் அவ்வப்போது பிரச்னை எழுப்பிவந்தனர். அண்மையாகதொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். வன்முறைகள் வெடித்ததில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். நெருக்கடியால் அந்நாட்டு நீதிமன்றம் தலையிட்டு ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்தது.
ஆனாலும் பிரச்னை தீராமல், பிரதமர் சேக் ஹசீனாவைப் பதவிவிலகுமாறு கோரிக்கை வைத்து முன்னைவிடப் போராட்டம் வலுத்தது. இன்று காலையில் பிரதமர் மாளிகை முன்பாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால், தன் தங்கையுடன் பிரதமர் ஹசீனா இராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவுக்குத் தப்பி அடைக்கலம் கோரியுள்ளார் என்று ராய்ட்டர் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, வங்கதேச நாடாளுமன்றத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.