ஏ.ஐ. வேட்பாளர்
ஏ.ஐ. வேட்பாளர்

எம்பி தேர்தலில் ஏ.ஐ. வேட்பாளர்! எதிர்காலத்தில் என்ன நடக்குமோ?

Published on

ஏ.ஐ. செய்தி வாசிப்பாளர், மெய்நிகர் ஆசிரியர், உதவியாளர் கூட பார்த்திருப்பீர்கள்… ஆனால், ஏ.ஐ. அரசியல்வாதியை பார்த்திருக்கிறீர்களா…?

இல்லையென்றால், இனி பார்ப்பீர்கள்…

அடுத்த மாதம் பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. உலக நாடுகளே, அந்த தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஏ.ஐ. ஸ்டீவ் எனும் ஏ.ஐ. அவதார், எம்.பி. பொறுப்புக்கு போட்டியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியொரு காரியத்தைச் செய்தவர், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீவ் எண்டாகோட் என்பர்தான். காரணம், அவருக்கு நடப்பு அரசியலில் ஏற்பட்ட விரக்தியே என்கிறார்கள்.

நடைபெற உள்ள இந்த பிரிட்டன் தேர்தலில், ஏ.ஐ. ஸ்டீவ் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்துக்கு 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட்தான் செல்வார்.

பிரிட்டனில் உள்ள பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் சுயேச்சையாக ஏ.ஐ. ஸ்டீவ் களம் கண்டுள்ளது. இது 24 மணிநேரமும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தளவிற்கு அது டிசைன் செய்யப்பட்டுள்ளது.

‘இது வெறும் ஆரம்பம்தான். விரைவில் நாங்கள் அரசியல் கட்சி தொடங்க உள்ளோம். அப்போது இதேபோல மேலும் பல ஏ.ஐ. அவதார்கள் களமிறக்கப்படுவார்கள். இது ஜனநாயகத்துக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்வு” என்கிறார் ஸ்டீவ் எண்டாகோட்.

அவர், ‘ஸ்மார்ட்டர் யூகே’ எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார். இருந்தும் அதனை இன்னும் முறைப்படி பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.

ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேருடன், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசும் வல்லமை கொண்டுள்ள இந்த ஏ.ஐ. ஸ்டீவ், சமகாலத்தின் அனைத்து பிரச்னைகளையும் பேசிவருகிறது. இதை, ஸ்டீவ் எண்டாகோட் தலைவராக உள்ள நியூரல் வாய்ஸ் என்ற நிறுவனம்தான் வடிவமைத்துள்ளது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் வயோமிங் மேயர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தனக்காக ஏ.ஐ. அவதார் ஒன்றை பயன்படுத்தி இருந்தார். இப்படி தேர்தலில் கால் பதிக்கும் ஏ.ஐ. எதிர்கால அரசியலில் என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்று தெரியவில்லை.

இதெல்லாம் ஓகேதான் ஏ.ஐ. சார், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க...?

logo
Andhimazhai
www.andhimazhai.com