பதினான்கே வயதான சிறுமி ஒருவர் தனியாக விமானத்தை ஓட்டி அசத்தியிருக்கிறார், கனடாவில்!
கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் பிராம்டன் பகுதியைச் சேர்ந்தவர், இந்த மாணவி அனாயா சொகைல்.
கடந்த மாதக் கடைசியில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
ஜூலை 25ஆம் தேதி செஸ்னா எனப்படும் சிறு இரக விமானத்தில் அவர் டொரண்டோ நகரத்தின் மீது தனியாகப் பறந்து காட்டியிருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே உறவினர் ஒருவர் இவரை, விமானப் பயிற்சி மையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார். விமானங்களில் மற்றவர்கள் பயிற்சி எடுப்பதைப் பார்த்துப் பார்த்து அனாயாவுக்கு நாமும் விமானத்தில் பறந்தாகவேண்டும் எனும் வேட்கையே உருவாகிவிட்டது.
சரியாக 12 வயது ஆனதும் அனாயாவின் மாமா ராசி அகமது, இவரையும் விமானப் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டார்.
பல முறை பயிற்சியாளருடன் இணைந்து விமானத்தில் பறந்துள்ளார். அவரை வைத்துக்கொண்டு தானாகவும் இயக்கியுள்ளார்.
ஆனால், தனியாக விமானத்தை ஓட்டியதுதான் அனாயாவின் சாதனை. இது அந்த நாட்டில் இதுவரை குறைந்த வயதில் விமானத்தை ஓட்டியவர் என்கிற பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
ஊடகங்களிடம் பேசுகையில், தனியாகப் பறந்த பரவசம் அடங்காதவராக, “ கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் என்னால் இதைச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கை உறுதியும் இருந்தது. வானத்தில் தனியாக விமானத்தில் பறப்பது... தனியான அனுபவம். மலைகள், ஏரிகள், கீழே உள்ள எல்லாவற்றையும் விமானத்தில் பறந்தபடி பார்ப்பது, விமானம் முழுவதையும் நீங்களே கட்டுப்படுத்துவது என்றால் என்ன சொல்ல...!” என உணர்ச்சிமேலிட்டார், சிறுமி அனாயா சொகைல்.
இவரின் மாமா ராசி அகமதுவோ, இதை இவள் முன்னரே செய்திருக்கமுடியும்; ஆனாலும் வயது என இருக்கிறதில்லையா என்கிறார்.
வர்த்தக விமானத்தை ஓட்டவேண்டும்; அதுவும் ஏ 380 வகை விமானத்துக்கு கேப்டன் ஆகவேண்டும் என இலக்கு வைத்திருக்கிறார், இந்தச் சாதனைச் சிறுமி.
ஒண்டாரியோ மாநிலத்தில் இப்படி பொழுதுபோக்கு விமானி உரிமம் பெற வயது தடை இல்லை. ஆனால், மாணவர்கள் குறைந்தது 14 வயது நிரம்பினால்தான் தனியாக விமானம் ஓட்டமுடியும். ஒரு முறை தனியாக விமானத்தை ஒட்டியதும், கூடுதலாக சில செயல்பாடுகளையும் முடிக்கவேண்டும். அதன்பிறகுதான் அவர்கள் மாணவர் விமானி உரிமம் பெறமுடியும். 17 வயது நிரம்பினால்தான் தனியார் விமானி உரிமம் பெறமுடியும் என்பது அங்குள்ள விதிமுறை.