அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

குடும்ப நாடகங்கள் - வண்ண நிலவன்

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   17 , 2013  16:27:14 IST


Andhimazhai Image

யதார்த்தத்தை போல் உணர்ச்சிகரமும் கலையின் மிக முக்கியமான கூறுதான். யதார்த்தம் அல்லது நடப்பியல் சினிமாவைத் திரைப்படத் துறையினரும் ரசிகர்களும் கலைப்படம் என்று அழைக்கிறார்கள். உணர்ச்சிகரமான மெலோடிராமா எனப்படும் மிகையுணர்ச்சி ததும்பி வழியும் சினிமாப் படங்களையே கமர்சியல் படங்கள் என்று அழைக்கிறார்கள். ஆக்ஷன் படங்களிலும் இடையிடையே உணர்ச்சிகரமான மெலோடிராமாக் கட்சிகள் இடம்பெறுகின்றன். மிகையுணர்ச்சி என்பது வெகுஜன சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் அம்சம்.

 

1950களிலும் 60களிலும் ரசிகர்களின் மிகையுணர்ச்சியைத் தூண்டி விடுகின்ற எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தன. பல படங்கள் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் சம்பாதித்துத் தந்தன. நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் ஜெமினியின் தயாரிப்பான சம்சாரம். சோகம் தளும்பி வடியும் படமான இது நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. ‘சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்’, அம்மா பசிக்குதே போன்ற பாடல்கள் ஜனரஞ்சகமாக இருந்தன. அம்மாபசிக்குதே பாடலைக் கேட்டு மனம் உருகாத ரசிகர்களே இல்லை.

 

அக்கால திரைப்பட ரசிகர்கள் சோகமயமான திரைப்படங்களை விரும்பிப் பார்த்தனர் . 1951-ல் வெளிவந்த சம்சாரத்துக்குப் பின் 1952-ல் வெளிவந்த பராசக்தி ஒரு அபாரமான வெற்றிப் படம். செல்வச் சிறப்போடு இருந்த சகோதரர்கள் பிரிவது, சகோதரியும் சகோதரர்களும் வறுமையில் வாடுவது போன்ற காட்சிகள் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன.

 

அந்நாட்களில் பல வங்க மொழிக் கதைகள் தமிழ்த் திரைப்படங்களாகின. அம்மொழியின் தலை சிறந்த நாவலாசிரியரான சரத் சந்திரரின் ஒரு நாவல் தான் தேவதாஸ் தேவதாஸ் கதை பல இந்திய மொழிகளில் திரைப்படமாகியது. தமிழிலும் வெளிவந்து வெற்றிப்படமாகப் பட்டித் தொட்டியெங்கும் ஓடியது. நாகேஸ்வரராவும் சாவித்திரியும் இணைந்து நடித்தனர். தேவதாஸ் பார்வதியின் நிறைவேறாத காதல் சோகம் தமிழர்களின் மனதைக் கவர்ந்தது. உலகே மாயம் ஓ தேவதாஸ் போன்ற பல பாடல்கள் தேவதாஸில் இடம் பெற்றன.

 

எவ்வளவு பெரிய நகராட்சியாக இருந்தாலும் ஒரு திரைப்படத்தை அந்த ஊரிலுள்ள ரசிகர்கள் எல்லோரும் தினசரி மூன்று காட்சிகளிலும் பார்த்தாலும் இரண்டு வாரங்களுக்குள் பார்த்து விட முடியும். அதிக பட்சமாகப் போனால் மூன்று வாரங்கள். ஆனால், 100 நாட்களுக்கு மேல் அதுவும் பிழியப் பிழிய அழவைக்கும் சோகமயமான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள் இத்தனை நாட்கள் ஓட வேண்டுமென்றால் ரிபீட்டட் ஆடியன்ஸ் தான் காரணம். அதே படத்தை இரண்டு முறை மூன்று முறை என்று திரும்பத் திரும்ப பல ரசிகர்கள் பார்த்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அப்படங்களின் மெலோடிராமா காட்சிகளில் ரசிகர்கள் மனம் தோய்ந்து கிடந்தனர். மெலோடிராமா என்பது என்ன?  காதலிப்பதும் காதல் நிறைவேறாமல் போவதும் சகஜம் தான். ஆனால் காதலியை நினைத்து தேவதாஸ் குடிக்கிறார். முழு நேரக் குடிகாரராகிவிடுகிறார். ஷயரோகம் வந்து சதா இருமுகிறார். இருமிக் கொண்டே உலகே மாயம் வாழ்வே மாயம் என்று பாடுகிறார். உடல் நலிவுற்ற நிலையிலும் காதலியைத் தேடி துர்கா பூருக்கு ரயிலிலும் மாட்டு வண்டியிலும் இருமிக் கொண்டே பயணிக்கிறார். பார்வதி வாழும் ஜமீன் மாளிகையின் கதவு தேவதாஸ் வருவதைப் பார்த்து மூடப்படுகிறது. கதவில் மோதி தேவதாஸ் மரணமடைகிறார். தேவதாஸின் காதல் மிகைப்படுத்தப் பட்டகாதல். நடைமுறை வாழ்க்கையில் எந்தக் காதலனும் காதலியை நினைத்து மருகி குடித்து தன்னை அழித்துக் கொள்வதில்லை. இந்த மிகையுணர்ச்சி தான் தேவதாஸின் வெற்றிக்குக் காரணம்.

 

இக்காலத்தில் விவாகரத்துக்கள் அதிகரித்து விட்டன.  40, 50 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் மனதுக்குப் பிடிக்காத கணவர்களுடன் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினர். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற வழக்கு மொழியே அது போன்ற அந்நாளைய பெண்களுக்காகக் கூறப்பட்டது தான். பெண்களின் இந்த மனநிலையைச் சித்திரித்து பல தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. கணவனே கண் கண்ட தெய்வம் என்ற படத்தில் சாபத்தினால் குரூபியான கணவனுடன் மனைவி வாழ்கிறாள். அவளே முயன்று அவனது குரூப வடிவத்தையும் மாற்றி, பழைய வடிவுக்குக் கொண்டு வருகிறாள்.

 

தங்கப் பதுமையில் பெண்ணாசையினால் மனைவியைப் பிரிந்த கணவன் அரசினால் கண்களை இழக்கும் தண்டனைக்குள்ளாகி மனைவியின் பதிவிரதா தன்மையால் அவளுடன் கடைசியில் இணைகிறான். நடைமுறை வாழ்வில் முகக் குரூரத்தை யோதீக்கோலினால் இழந்த கண்களையோ திரும்பப்பெற்று முகம் சீரமைக்கப்படுகிற விஞ்ஞான வளர்ச்சியெல்லாம் இக்கதைகள் நடைபெறும் காலகட்டத்தில் இல்லை. ஆனால் கணவனே கண் கண்ட தெய்வத்திலும் தங்கப் பதுமையிலும் இது சாத்தியமாகியிருக்கிறது. மனைவியரின் கற்பும் அவர்களது முயற்சிகளும் பெரும் சோகத்துடன் இப்படங்களில் சித்திரிக்கப்பட்டு அவை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன. இப்படங்களின் மிகைப்படுத்தப்பட்ட மெலோடிராமாக் காட்சிகள் தான் இவை நூறு நாட்கள் ஓடியதற்குக் காரணம்.

 

மெலோடிராமா திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் என்றதும் உடனே நினைவிக்கு வருகிறவர்கள் டைரக்டர் பீம்சிங்கும் ,கே.எஸ் .கோபால கிருஷ்ணனும்.  பீம்சிங் ‘ப”வரிசைப் படங்களை இயக்கியவர் என்று அக்காலத்தில் பத்திரிகைகளால் பாராட்டப்பட்டவர். பதிபக்தி, பாகப் பிரிவினை, பாவ மன்னிப்பு, பாச மலர், பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும் ,பாத காணிக்கை, பச்சை விளக்கு, பழனி என்று ‘ப ’என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் ‘பீம்பாய்’என்ற பீம்சிங்.

 

இவரது திரைப்படங்களில் குடும்ப வாழ்வுதான் சித்திரிக்கப்பட்டது என்றாலும் யதார்த்தத்தை மீறிய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ‘பதிபக்தி’யில் இராணுவத்திலிருந்து வீடுதிரும்பும் ராணுவ வீரர் தன் குடும்பத்தை தேடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தன்னுடன் இராணுவத்தில் பணி புரிந்த நண்பனையே சுட முயல்கிறார். பாகப் பிரிவினையில் சிவாஜி கணேசனுக்குப் பக்கவாதம். ஆனாலும் அவரை மணந்து கொள்கிறார் சரோஜாதேவி. அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையை மூட்டி விட்டு சொத்தை பிரிக்கக் காரணமான வில்லனாக எம்.ஆர்.ராதா. சர்க்கஸ் பார்க்கச் சென்ற சிவாஜியின் முடமானகால் ,கைகள் மின்சார ஒயரைத் தொட்டதால் சுகமாவதாக கதை முடிகிறது.

 

மின்சாரத்தைத் தொட்டால் மரணம் என்பது நடைமுறை யதார்த்தம். ஆனால் சிவாஜியின் நோய் குணமாவது பீம்சிங்கின் மிகைப்படுத்தல் .ராணுவ வீரர்களைப் பற்றிய கதைதான் பார்த்தால் பசிதீரும். பாகப் பிரிவினையைப் போல் குருடாகி உடல் ஊனத்துடன் சிவாஜி கணேசன் பாலும் பழமும் திரைப்படத்தில் தோன்றுகிறார். பார்த்தால் பசிதீரும் படத்திலும் சாவித்திரிக்குக் கண்பார்வை சரியில்லை. உடல் ஊனம் திரைப்பட ரசிகர்களிலிருந்து கண்ணீரை வரவழைக்க உதவும் ஒரு திரைக்கதை சாதனம்.

 

பாசமலரும், பச்சை விளக்கும் தங்கைக்காக வாழும் அண்ணனின் உருக்கமான திரைக்கதை அமைப்பைக் கொண்ட படங்கள். பாசமலர் சிவாஜி கணேசன் தங்கையைப் பிரிந்து, மனைவியை இழந்து தனியே தன் குழந்தையுடன் வாழ்ந்து இறந்து போகிறார். அண்ணனின் பிணத்தின் மீது விழுந்து தங்கை சாவித்திரியும் உயிரை விடுகிறார். அடுக்கடுக்கான துயரச் சம்பவங்கள், உச்சக் கட்ட காட்சியின் மரணங்கள் இவற்றால் பாதிக்கப்படாத ரசிகர்களே அன்று இல்லை. தியேட்டரை விட்டு படம் முடிந்து வெளியே வரும் போது ரசிகர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். பாசமலரும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

 

கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்குனராவதற்கு முன் ‘தெய்வப்பிறவி’போன்ற படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். ‘சாரதா’ தான் அவர் இயக்கிய முதல் படம் .எஸ்.எஸ்.ராஜேந்திரனும் விஜய குமாரியும் காதலித்துத் திருமணம் செய்தவர்கள். கல்லூரி ஆசிரியரான எஸ்.எஸ்.ஆர். ஒரு விபத்தினால் பாதிக்கப்பட்டு,  மனைவியுடன் தாம்பத்ய சுகத்தை அனுபவிக்க முடியாதவராகிறார். கணவன் மனைவியை நெருங்கும் பொதெல்லாம் விஜய குமாரி விலகி விலகி ஓடுகிறார். மாடியிலிருந்து கீழே விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படலாம். ஆனால் சாரதா கதாநாயகனுக்கு நேர்வதோ தாம்பத்ய உறவு பாதிப்பு. இது தான் திரைக்கதையின் முடிச்சு. படம் வெள்ளி விழா கொண்டாடியது.

 

கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கிய இன்னொரு மாபெரும் வெற்றிப் படம் ‘பணமா பாசமா’. படத்தின் தலைப்பிலேயே கதையின் சாரம்சம் சொல்லப்பட்டு விட்டது. பணத்துக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் போட்டியை வெகுஜன ரசிகர்களின் ரசனைக்காக திரைக்கதை அமைத்து, பக்கம் பக்கமாக கதாபாத்திரங்களை வசனம் பேச வைத்திருந்தார். கே.எஸ்.கோபால கிருஷ்ணன் படங்கள் எல்லாவற்றிலுமே கதாபாத்திரங்கள் மூச்சுத் திணற திணற வசனங்களைப் பேசின.

 

ஏ.பீம்.சிங்கிற்கும், கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கும் குடுப்பப் பாங்கான படங்களை இயக்கியவர்கள் என்று பேர். மிகைப்படுத்தல் என்ற சுவை, தமிழ்திரைப்படங்களில் மட்டுமின்றி இந்திய மொழிப் படங்களுக்கே உரிய தனிச்சுவை.

 

(அந்திமழை ஏப்ரல் 2013 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...