அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2019  16:07:20 IST


Andhimazhai Image

கன்னி என்ற நாவலை எழுதியவரும் கவிஞருமான பிரான்சிஸ் கிருபா சமீபத்தில் தவறான காரணத்துக்காக செய்தியில் அடிபட்டார். கோயம்பேடு பேருந்துநிலையத்தில் வடமாநில இளைஞர் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்கையில் அவர் இறந்துவிட்டார். இவர்தான்  கொலை செய்ததாக காவல்துறை பிடித்துக்கொண்டது. பிறகு இவரது மனிதநேயச் செயல் வெளிப்பட்டு,  விடுதலை செய்யப்பட்டார்.  நாகர்கோவிலில் திரைப்படப்பிடிப்பில் இருந்தவருடன் பேசினோம்.

 

“நெல்லை மாவட்டத்தில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக நான் பிறந்தேன். குடும்பச்சூழல் காரணமாக என்னால் 8-ஆம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. பின்னர் மும்பை சென்றுவிட்டேன். அங்கு டீக்கடையிலும், லேத் பட்டறையிலும் வேலை செய்தேன்.

 

பிறகு நானே சொந்தமாக பட்டறை தொடங்கினேன். ஆனால் தொழில் செய்த இடம் ஒரு இசுலாமியருக்கு சொந்தமானது என்பதால், 1993-ல் நடந்த பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகான கலவரத்தில் எனது தொழிலும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் அங்கு வெளியான மராத்திய முரசு, போல்டு இண்டியா,மும்பை தமிழ் டைம்ஸ் போன்ற நாளிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

 

நான் வாசித்த முதல் நல்ல கவிதைப் புத்தகம் கலாப்ரியாவின் ’உலகெல்லாம் சூரியன்’. அவரை நேரில் சென்று சந்தித்ததன் மூலம் கவிதைகளில் உள்ள பல்வேறு பரிமாணங்கள் குறித்து கற்றுக்கொண்டேன். ‘காதல் கோட்டை’ இந்தி ரீமேக் படத்துக்காக தமிழ் - இந்தி தெரிந்த ஒரு உதவி இயக்குநர் தேவைப்பட்டதால் என்னை சேர்த்துக்கொண்டனர். ஆனால், மற்றொரு தயாரிப்பாளர் அதற்குமுன் உரிமம் பெற்று காதல் கோட்டை இந்தி ரீமேக்கை விரைவாக முடிந்துவிட்டதால் நான் பணிபுரிந்த படம் கைவிடப்பட்டது. பிறகு, இந்தி சினிமாத்துறை நமக்கு சரிவராது என உணர்ந்து சென்னைக்கே வந்துவிட்டேன்.

 

இங்கே ‘காமராஜ்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் திரைக்கதை, வசனம் எழுதியதோடு, பழ. நெடுமாறன் கதாபாத்திரத்திலும் நடித்தேன். சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தாலும் எழுத்துப் பணிகளில் எனது கவனம் மிகுதியாக இருந்தது. நான் எழுதிய ‘மல்லிகை கிழமைகள்’ ஆனந்த விகடனில் 52 வாரங்கள் தொடராக வந்தது.

 

வெகுஜன பத்திரிகையில் வந்த தொடர் என்பதால், எனது எழுத்து பரவலாக அறியப்பட்டது. இந்த தொடரை வாசித்த இயக்குநர் மகிழ்திருமேனி தனது முதல் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பினை எனக்கு வழங்கினார். நான் எழுதிய 6 பாடல்களையும் 11 பாடகர்கள் பாட பதிவானது. ஆனால், அந்த படம் கைவிடப்பட்டது. ஒருவேளை அந்த ஆல்பம் வெளியாகியிருந்தால் கவிதை, நாவல் என இயங்காமல் இப்போது முழுநேர பாடலாசிரியராகக்கூட இருந்திருப்பேன் என நினைக்கிறன்.

 

அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த்சக்ரவர்த்தி. அவர் வேறு படத்தை தொடங்கும் முயற்சியில் இருந்தார். எனக்கு சுசீந்திரனின் அறிமுகம் இருந்ததால், தயாரிப்பாளரிடம் ‘வெண்ணிலா கபடி குழு’ கதையைக் கூறுமாறு அவரை அழைத்து சென்றேன். தயாரிப்பாளருக்கு அந்த கதை பிடித்துவிட்டதால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ உருவானது. அந்த படத்தில் நானும் இணைந்து பணியாற்றியதோடு, கபடி பாடலையும் எழுதிக்கொடுத்தேன்.

 

இதன்பிறகு சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படங்களிலும் பாடல் எழுதினேன். மறுபுறம் எனது கவிதைத் தொகுப்புகளான ‘மெசியாவின் காயங்கள்’, ‘வலியோடு முறியும் மின்னல்கள்’, ‘நிழலின்றி ஏதுமற்றவன்’, ‘ஏழுவால் நட்சத்திரம்’ போன்ற நூல்கள் வெளிவந்தன. பின்னர், எனது முதல் நாவலாக ‘கன்னி’ வெளியானது,என்று தன் கதை சொன்னவரிடம் கோயம்பேட்டில் நடந்தது பற்றிக் கேட்டோம்.

“எப்போதும் 500 - 600 மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் கோயம்பேட்டில் அந்த இளைஞர் வலிப்பு ஏற்பட்டு துடித்துக்கொண்டிருக்கும்போது யாரும் அதை கவனிக்கவில்லை. அருகில் சென்று பார்த்தபோது அவர் வட மாநிலத்தவர் என தெரிந்தது. எனக்கு இந்தி தெரியும் என்பதால் பேசிக்கொண்டே அருகில் இருந்த இரும்புக்கம்பியை அவர் கையில் அழுத்தி வலிப்பை நிறுத்த முயற்சித்தேன். ஆனால், இதன் பிறகு அங்கு சூழ்ந்த மக்கள், கம்பியால் நான் அந்த இளைஞரை தாக்கிக்கொன்றதாக நினைத்து என்னை அடித்தனர்.

 

அவர்களே காவல்நிலையத்திலும் ஒப்படைக்க, போலீஸாரும் என்னை தாக்கினார்கள். நான் காப்பாற்ற முயற்சி செய்தவன் என எவ்வளவு கூறியும் காவல்துறையினர் அதை நம்பவில்லை. அப்போது முதல், உடற்கூறாய்வு அறிக்கையில் அந்த இளைஞர் வலிப்பால்தான் இறந்தார் என தெரியவரும் வரை வெளியே என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. பல்வேறு நண்பர்கள் எனக்காக குரல்கொடுத்ததாக பின்பு அறிந்தேன். கருணைக்கும், இரக்கத்துக்கும் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என அவர்கள் காட்டிய அக்கறை எனக்கு உணர்த்தியது.

 

அதேசமயம் இரண்டு முக்கிய எழுத்தாளர்களே நான் அந்த கொலையை செய்திருப்பேன் என குற்றம்சாட்டி பேசியிருந்தார்கள். பல மறக்க முடியாத அனுபவங்களை அந்த சம்பவம் எனக்கு வழங்கியதாகத் தான் எடுத்துக்கொள்கிறேன்,“ மென்மையான குரலில் தொடர்ந்து பேசுகிறார் பிரான்சிஸ் கிருபா.

 

“மனதளவில் அந்த சம்பவத்திலிருந்து மீள்வதே எனக்கு சிரமமாக இருந்தது. எனக்கு எதிராகச் சொல்லப்பட்டதையெல்லாம் நான் பொருட்படுத்தவேயில்லை. அப்படிக் கூறியதாக நான் அறிந்த சிலரிடம் இன்னமும் நட்போடு இருந்து வருகிறேன். முன்பெல்லாம் எனக்கு மது அருந்தும் பழக்கமே கிடையாது. ஒருகட்டத்தில் நாளை நடக்கப்போவதை இன்றே கனவாகக் காண்பது போன்ற நிகழ்வுகள் எனக்கு மிகுதியாக நடந்தன. லாட்டரியில் எந்த எண் ஜெயிக்கபோகிறது என்பதைக்கூட முந்தைய நாள் கனவில் கண்டு சரியாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அப்படியான கனவுகள், நாளைய வாழ்க்கையை வாழ்வதில் எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த சிந்தனையிலிருந்து விடுபடும் முனைப்பில் மது அருந்த தொடங்கினேன்.

 

குடும்பம், அதுசார்ந்த கடமை என நிர்ப்பந்தங்களற்ற மனிதனாக இப்போது ஒட்டுமொத்த வாழ்வையும் அதற்கேற்றவாறு மாற்றியிருக்கிறேன்,” என்கிறார் இவர்.

 

அன்பு எனும் வெளிப்பாடு இவரது படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இதுதான் இவரது பிரச்னையாகவும் இருக்கிறது. “எந்த உயிர் மீதும் இரக்கம் செலுத்துவது அன்பின் அடிப்படை. எனது இந்த இயல்பிலிருந்து விலக முடியவில்லை. விலக தேவையுமில்லையென என நினைக்கிறன். வாழும்வரை ஈரத்தோடு இருந்துவிட்டுப் போகிறேன். ஒருவரின் குணாம்சமே இப்படி இருக்கும்போது, எழுத்திலும் அது நம்மை அறியாமல் வந்துவிடும். எழுதும்போதுதான் உங்களை நீங்கள் முழுதாக அறிந்துகொள்ள முடியும். என்னால் எப்போதும் இயல்பாக எழுதமுடிவதில்லை. அமாவாசை காலத்தில் மூன்று நாட்கள், பௌர்ணமியின்போது மூன்று நாட்கள் என மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே எழுதுகிறேன்.

 

எழுதுவதற்கான கொந்தளிப்பு அப்போது மட்டுமே எனக்கு ஏற்படுகிறது. இப்போது ‘பைரி’ எனும் படத்தில் பணியாற்றி வருகிறேன். இதில் மூன்று பாடல்களை எழுதுவதோடு, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன். நாகர்கோவில் பகுதியில் இருக்கும் புறா பந்தய பண்பாட்டை மையப்படுத்திய படமாக இது உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன், ஏற்கெனவே தயாராக இருக்கும் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதைத் தொகுப்பை வெளியிடும் பணிகளை செய்ய வேண்டும். படிகம் பதிப்பகம் இதை வெளியிடுகிறது. மேலும், ‘ஏறக்குறைய இறைவன்’ எனும் மும்பை வாழ்க்கை சார்ந்த நாவலை எழுதி முடிக்க வேண்டியுள்ளது,” சொல்லி முடிக்கிறார் பிரான்சிஸ் கிருபா என்கிற பேரன்பின் கவிஞன்.

 

-வசந்த் (ஆகஸ்டு 2019 அந்திமழை இதழில் வெளியானது) 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...