அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிறுகதை: ஷெர்லி அப்படித்தான்- எஸ் ராமகிருஷ்ணன்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   04 , 2014  14:39:43 IST


Andhimazhai Image

காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருக்கிறாள் போலும், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வருவதற்கு முன்னதாகவே வீட்டிற்குள் நுழைந்திருந்தது. இவ்வளவு அடர்த்தியான வாசனை திரவியத்தை பூசிக் கொள்கிற ஒரே பெண் அவளாக தானிருக்ககூடும்.

 

ஷெர்லி பிராங் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அன்று ஏழாம் தேதி என்று அர்த்தம், ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அன்று மாலை நான்கு மணிக்கு ஷெர்லி அப்பாவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவது வழக்கம், இது இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது

 

அப்பா கடந்த ஒருவருசமாகவே நோய்முற்றி படுக்கையில் கிடக்கிறார், பேச்சும் ஒடுங்கிவிட்டது, கழிப்பறைக்கு தூக்கி போய்விடுவதற்கு கூட ஆள் வைத்தாகிவிட்டது, யார் அறைக்குள் போனாலும் அவருக்கு முகம் தெரியவில்லை, காதும் மங்கிவிட்டதால் சப்தமாகப் பேசிய போதும் அவர் கேட்டுக் கொண்டதாகவேயில்லை, அப்பாவை தேடி வருபவர்கள் குறைந்து போய்விட்டார்கள், ஆனால் ஷெர்லி வரத் தவறுவதேயில்லை.

 

எங்கள் ஊரில் இருந்த ஒரே ஆங்கிலோ இந்தியப்பெண் ஷெர்லி மட்டும் தான், அவள்  எப்போதும் பூப்போட்ட கவுன்களை தான் அணிகிறாள், பாரதி நகரில் புதுவீடு கட்டிக் கொண்டு குடியேறிய போதும் ஒரு காலத்தில் தனக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர் என்ற முறையில் அப்பாவை காண வருவதை ஷெர்லி வழக்கமாக கொண்டிருந்தாள்.

 

சென்ற மாதம் வந்த போது கூட அம்மா சொன்னாள்.

 

ஏன் ஷெர்லி உன்னை இப்படி வருத்திக்கிடுறே, அவருக்கு நீ வந்து போவது கூட தெரியாது, உனக்கு தான் வீண் அலைச்சல்.

 

அப்படியில்லை மீனாம்மா, நான் உயிருடன் இருக்கிற வரைக்கு அவர் செய்த நன்றியை மறக்க கூடாது, இது என் கடமை, என்று அப்பாவின் அறைக்குள் போய் அவர் கைகளை எடுத்து தன்னுடன் வைத்து கண்ணை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு பத்து நிமிசம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள், பிறகு விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாள்.

 

இன்றைக்கும் அதற்காக தான் வந்திருக்கிறாள், என்ன மனுஷி அவள், எப்போதோ தனக்கு குடியிருக்க வாடகை கொடுத்த ஒருவரை இத்தனை ஆண்டுகளாக தேடிவந்து நன்றி சொல்லி கொண்டேயிருக்கிறாளே, நன்றியுணர்ச்சி என்பது இவ்வளவு ஆழமானதா என்று தோன்றியது,

 

பல ஆண்டுகளாக பழகிப்பழகி ஷெர்லி எங்கள் வீட்டுப்பெண்களில் ஒருத்தியாகவே மாறியிருந்தாள், எனது தங்கையின் திருமணத்தின் போது ஷெர்லிக்கும் பட்டுபுடவை எடுத்து தந்தார்கள், அதை ஏற்றுக் கொண்டு  திருமணத்தின் போது மணமகனுக்கு ஒரு மோதிரம் அணிவித்ததோடு தனது வீட்டில் புது மண தம்பதிகளுக்கு விருந்தும் அளித்தாள்.

 

ஷெர்லி பேசுவது ஒரு பறவை சப்தமிடுவதை போல தானிருக்கும், ஒவ்வொருமுறை அப்பாவை காணவரும் போதும் வீட்டில் தயாரித்த முந்திரி கேக் ஒன்றினை அழகான காகிதம் சுற்றி எடுத்துக் கொண்டுவருவாள்,

 

ரயில்வே பீடர் ரோட்டில் எங்களுக்கு ஆறு வீடுகள் இருந்தன, அதை வீடு என்று சொல்லமுடியாது, புறாக்கூடு போன்ற சிறிய இருட்டறை, லயன்வீடு என்று சொல்வார்கள், அதில் ஒன்றில் தான் ஷெர்லி ஆரம்ப காலத்தில் குடியிருந்தாள், 

 

அவளது கணவன் பிராங்க் எங்கள் ஊரில் இருந்த கேத்தி மில்லில் வேலை செய்து கொண்டிருந்தவன், அவனது புகைப்படத்தை பார்த்திருக்கிறேன், கிரிக்கெட் விளையாட்டுகாரன் ரோஜர் பின்னியை போன்ற முகஅமைப்பு அவனுக்கு இருந்தது,

 

பிராங் பர்கான்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது ஷெர்லியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது, ஷெர்லியின் கணவன் ஹெர்பட் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தான், அவனுடன் வாழ்ந்து ஷெர்லி ஸ்டீவ் என்ற ஆண் குழந்தையை பெற்றிருந்தாள், அந்த நாட்களில் தன் கணவனை காண வந்த பிராங்கோடு டென்னிஸ் விளையாட துவங்கியதில் ஏற்பட்ட பழக்கம் அவன் மீதான  காதலாக உருமாறியது.

 

அதை ஷெர்லி ஸ்ரேஞ்ச் லவ் என்று சொல்வாள், ஸ்ரேஞ்ச் என்ற சொல்லை அவள் உச்சரிக்கும் போது தான் அதன் உண்மையான அர்த்தம் வெளிப்படுவது போலவே இருக்கும், காதலின் தீவிரத்தில் ஹெர்பட்டை விட்டுவிட்டு பிராங்கோடு அவள் மைசூருக்கு கிளம்பிப் போனாள், அங்கிருந்து கோரக்பூர், பின்பு புதுச்சேரி, அதன்பிறகு எங்கள் ஊரில் ஆரம்பிக்கபட்ட கேத்தி மில்லின் பொறியாளராக பிராங்க் வந்து சேர்ந்திருந்தான்.

 

ஷெர்லிக்கு நினைவாற்றல் மிகவும் அதிகம், தான் எந்த நாளில் எந்த பேருந்தில் வந்து இறங்கினோம், அன்றைக்கு ஊரில் வெயில் எப்படியிருந்தது, யார் யாரை எல்லாம் சந்தித்தோம் என்பதை இப்போதும் துல்லியமாக சொல்வாள்,

 

எங்கள் ஊருக்கு வந்த போது ஷெர்லிக்கு பிராங் வழியாக மூன்று குழந்தைகள் இருந்தன, அதில் மூத்தவன் மார்டி, இளையவன் ஹெப்பா, மூன்றாவது பெண் டோல், வந்த புதிதில் மில்லின் உள்ளேயே இருந்த குடியிருப்பில் அவர்கள் வசித்தார்கள்,

 

கிராப் தலையுடன் ஒரு வெள்ளைக்காரி சைக்கிள் ஒட்டிக் கொண்டு ஊரைச்சுற்றுகிறாள் என்று அன்று ஊரே அவளைப்பற்றி கேலி பேசிக் கொண்டிருந்தது,

 

ஷெர்லியின் அடையாளம் அவளது பொன்னிறமான தலைமயிர், மற்றும் சிவப்பு நிற ராலீஸ் சைக்கிள், ஷெர்லி சிகரெட் பிடிக்கிறாள் என்பதை பற்றி ஆண்கள் வியந்து பேசிக் கொள்வார்கள், ஷெர்லிக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம், மில்லில் நடந்த விளையாட்டு போட்டிகளின் போது அவள் அருணா ஸ்டுடியோ போட்டோகிராபரிடம் இருந்து கேமிராவை வாங்கி விதவிதமாக போட்டோ எடுத்தாள் என்பது பலராலும் பேசப்பட்டது,

 

ஷெர்லியின் கணவன் பிராங் மஞ்சள் காமாலை கண்டு இறந்து போகும்வரை அவளுக்கு அந்த ஊரில் அதிகம் ஆட்களை தெரியாது, காய்கறி மற்றும் பழங்கள் வாங்குவதற்கு மார்க்கெட் போய்வருவதும், ஞாயிறுகிழமைகளில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புனிதமேரி தேவாலயத்திற்கு பிரார்த்தனை செய்ய போவதும், அன்றாடம் வீட்டில் இசை கேட்பதும் தான் அவள் உலகமாக இருந்தது, ஆனால் பிராங்கின் மறைவு அவளது உலகை அப்படியே கலைத்துப் போட்டது,

 

மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் குடியிருக்க வீடு கிடைக்காமல் தேடி அலைந்த நாட்களில் தான் அப்பாவை சந்தித்திருக்கிறாள், மழைக்காலத்தின் ஒரு அதிகாலையது, அப்பா மில்லின் உள்ளிருந்த மைதானத்தில் நடைபயிற்சிக்கு போவது வழக்கம், நிறைய மரங்கள் அடர்ந்திருந்த மில்லின் உட்புறச்சாலைகள் மிகவும் அழகானவை, அதுவும் காலைவேளையில் பறவைகளின் சப்தமும், இலைகளின் பசுமையும் பார்த்துக் கொண்டு நடப்பதற்கு ரம்மியாக இருக்கும்,

 

அப்பா இது போன்ற விஷயங்களில் தேர்ந்த ரசனை கொண்டவர், மயில்சப்தம் கேட்காமல் என்பதற்காக தேனூத்து பாலம் வரை நடந்து போகிறவர் அவர், தினமும் வீட்டில் இருந்து மில் வரை சைக்கிளில் போய் இறங்கி இரண்டாவது கேட்டின் முன்பாக சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு அப்பா இறங்கி உள்ளே நடக்க ஆரம்ப்பிப்பார், முக்கால் மணி நேர நடைக்கு பிறகு மகிழமரத்தடியில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்வார், கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிசம் இந்த உலகையே மறந்து அமர்ந்திருப்பார், அந்த பெஞ்ச் மழைக்காலத்தில் ஈரமாகி குளிர்ந்திருக்கும், அந்த குளிர்ச்சியோடு உட்காருவது ஒரு சுகம்,

 

அன்றைக்கும் காலையில் அவர் அப்படி தான் நடைபயிற்சியை முடித்துவிட்டு அந்த பெஞ்சினை தேடி வரும்போது அதில் ஷெர்லி உட்கார்ந்திருப்பதை கண்டார், அவள் புகை பிடித்துக் கொண்டிருந்தாள், தனிமையில் ஒரு பெண் கவலை தோய்ந்த முகத்துடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்த காட்சி அப்பாவின் மனதை ஏதோ செய்திருக்க வேண்டும்,

 

அவர் தயக்கதுடன் அதே பெஞ்சில் தான் உட்காருவதா வேண்டாமா என்ற நின்ற போது அவள் கண்ஜாடையில் உட்காருங்கள் என்று சொல்லியிருக்கிறாள், அப்பா பெஞ்சின் ஒரு நுனியில் உட்கார்ந்து கொண்ட போது ஷெர்லி அவரிடம் தயக்கத்துடன் எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா என்று கேட்டாள்,

 

அப்பா அவளிடம் மை டியர் பிரண்ட், வாட் கேன் ஐ டூ பார் யூ என்று கேட்டிருக்கிறார், அறிமுகமே ஆகாத  தன்னை தோழி என்று அவர் அழைத்த விதம் அவளை நெகிழச்செய்திருக்க வேண்டும், அவள் தனது நிர்கதியை சொல்லி அழுதிருக்கிறாள்,

 

அப்பா அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு குழந்தைகளை அழைத்துக் கொண்டு உனது பொருட்களை எடுத்துக் கொள், வீடு நான் தருகிறேன் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

 

அன்று மாலை எங்களது லயன் வீடுகளில் காலியாக இருந்த ஒன்றில் ஷெர்லியை அப்பாவே குடிஅமர்த்தியதோடு அவள் கையில் நூறு ரூபாய் பணம் கொடுத்து இதை வைத்துக் கொண்டு  ஒரு தையல் மிஷினை வாங்கி பிழைத்துக் கொள், இந்த வீட்டிற்கு வாடகை எதையும் தர வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

 

ஷெர்லி தையல்மிஷினை வாங்கவில்லை, அவள் மதுரைக்கு போய் ஒரு கேமிராவை வாங்கி வந்தாள், திருமணவீடு, பள்ளி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு புகைப்படங்களை எடுத்து தர துவங்கினாள், வீட்டிலே ஒரு அறையை புகைப்படப் பணிகளுக்கு ஒதுக்கி கொண்டாள், அவளது பிள்ளைகள் அரசுபள்ளியில் தான் படித்தன, அப்பா அவளிடம் வாடகை கேட்கவேயில்லை,

 

அழகான ஒரு இளம்பெண் உள்ளுரில் புகைப்படம் எடுத்து வாழ்வது எளிதானதில்லை, ஷெர்லியை சந்திக்கிற ஆண்கள் ஒவ்வொருவரும் அவளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்பட்டார்கள், அவள் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மிகுந்த கோபக்காரி என்ற தோற்றத்தை உருவாக்கி கொண்டாள், அவளது பேச்சில், நடையில் அகம்பாவம் கொண்டவள் போலவே இருப்பாள், பொது இடங்களில் அவள் சிகரெட் புகைப்பதை பலரும் திட்டியிருக்கிறாள்,

 

அவள் தன்னை அவமானமாகப் பேசி ஆட்களை குடையால் அடித்திருக்கிறாள்,  ஷெர்லி குடிகாரி, போதைமருந்து சாப்பிடுகிறவள், சிறுவர்களை மயக்கி அனுபவிக்கின்றவள் என்று வதந்திகள் அவளை பற்றி பரவின,

 

அப்பா ஒரு போதும் அது எதையும் பற்றி அவளிடம் கேட்டுக் கொண்டதேயில்லை, அப்பா சில வேளைகளில் அவளுக்கு கடனுதவி செய்திருக்கிறார், சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார், அப்பாவிற்கு இப்படி ஒரு பெண் தோழி இருப்பதை பற்றி  உறவினர் பலரும் அவதூறு பேசிய போது அம்மா அது அவரது விருப்பம், அவர் மேல் எனக்கு நம்பிக்கையிருக்கிறது என்று உறுதியாக சொல்லிவிட்டாள்,

 

எங்கள் வீட்டில் நடக்கிற எல்லா முக்கிய நிகழ்வுகளையும் ஷெர்லி தான் புகைப்படம் எடுத்திருக்கிறாள், அப்பாவை மரநிழலில் நிற்க வைத்து அவள் எடுத்த புகைப்படம் தான் இப்போது ஹாலில் மாட்டப்பட்டிருக்கிறது, அவளுடன் நட்பாக பழகிய போதும் ஒரு தடவை கூட அவள் வீட்டிற்கு அப்பா போனதேயில்லை,

 

ஷெர்லி அப்பாவை தங்கரத்னம் என்று பெயரைச் சொல்லி தான் கூப்பிடுவாள், ரெட்டினம் என்று அவள் உச்சரிப்பதை நாங்கள் கேலி செய்வது வழக்கம், , அப்பா அவளுட்ன் ஆங்கிலம் பேசும் போது கச்சிதமான வார்த்தைகளை தேர்வு செய்து கவிதையை போல எப்படி பேசுகிறார் என்று எங்களுக்கு எல்லாம் வியப்பாக இருக்கும்,

 

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கவனமாக கேட்டுக் கொண்டிருப்போம், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய சொல்லை அவர்கள் பயன்படுத்துவார்கள், அப்படிதான் abli என்ற சொல்லை கேள்விப்பட்டேன், ஷெர்லி போன பிறகு அப்பாவிடம் அதற்கு என்ன  அர்த்தம் என்று கேட்டபோது ஐ பிலீவ் என்பதை தான் அப்படி சொல்கிறாள் என்றார்,

 

உன் கணவர் ஒரு ஜெம்,  அவரை கவனமாக பாதுகாத்து வைத்துக் கொள், கடவுள் உங்களுடன் எப்போதும் துணை இருப்ப்பார் என்று ஷெர்லி அம்மாவிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள்,

 

ஒருமுறை அம்மா உடல் நலமற்று மருத்துவமனையில் இருந்த போது யாரோ சொன்னார்கள் என்று ஷெர்லி அம்மா நலம் பெறுவதற்காக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நின்றாள், அவள் கையில் திருநீறு பொட்டலம் இருந்த்து, அதை கண்ட அம்மா தன்னை மீறி வெடித்து அழுதுவிட்டாள், அந்த ஒரு செய்கை அவளை ஒரு உடன்பிறந்த தங்கையை போல அம்மாவை நினைக்க செய்துவிட்டது.

 

ஒருநாள் அம்மா என்னிடம் சொன்னாள்.

 

எங்கேயோ பிறந்து எங்கயோ வளர்ந்து நம்ம ஊர்ல வந்து புருஷனை பறிகொடுத்து மூணுபிள்ளைகளை வச்சிகிட்டு கஷ்டப்படுறா பாரு, அவளுக்கு நம்மளை விட்டா யாருடா இருக்கா, அவள் தலைஎழுத்து இங்கே வந்து கஷ்டப்படணும்னு எழுதியிருக்கு, அவ இடத்தில் நான் இருந்திருந்தா வேதனையில் இந்நேரம் செத்துப்போயிருப்பேன்,  அவளை பாத்து தான் நானே வாழ கத்துகிட்டேன்.

 

தனது கஷ்டங்களை பற்றி ஷெர்லி யாரிடமும் புலம்பியதில்லை, தனது சந்தோஷங்களை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறாள், லயன் வீட்டினை ஒட்டிய சாந்தி டீச்சரின் வீட்டில் இருந்த எலுமிச்சை செடி ஒன்று ஒரு முறை சூறைக்காற்றில் விழுந்துவிட்டதை அறிந்த ஷெர்லி தானே வீடு தேடிப் போய் எலுமிச்சை செடியை முட்டுக் கொடுத்து நிறுத்தி கயிறு கொடுத்து கட்டி மறுபடி மண்ணில் வேர் ஊன்ற செய்துவிட்டாள், அது முதல் எங்கே மரம் முறிந்துவிட்டாலும் அவளை சொஸ்தப்படுத்த கூப்பிடுவார்கள், அவளும் போய் அதை சரிசெய்துவருகிறாள்,

 

ஷெர்லியிட்ம் சில அபூர்வமான குணங்கள் இருந்தன, அதில் ஒன்று தெருநாய்களுக்கு சாப்பாடு போடுவது, இதற்காகவே அவள் மாட்டுஇறைச்சியை விலை கொடுத்து வாங்குவாள், தனது சைக்கிளில் வீதிவீதியாக போய் தெருநாய்களை அழைப்பாள், அவளை கண்டதும் நாய்கள் தானே ஒன்று கூடிவிடுகின்றன, நாய்களின் முதுகை தடவிவிட்டு கொண்டுவந்திருந்த உணவை நாய்களுக்கு கொடுப்பாள், பிறகு அந்த நாய்களுடன் உடலில் உள்ள உண்ணிகளை எடுத்துப் போட்டுவிட்டு சண்டைபோடாமல் இருங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சைக்கிளில் புறப்பட்டு போய்விடுவாள்,

 

அவள் ஆட்டுகுட்டி ஒன்றை தனது கடைக்கு அழைத்து வந்து சாப்பிடுவதற்கு கத்திரிக்காய் வாங்கி தந்ததாக பெட்டிக்கடை கிருஷ்ணன் சொன்ன போது அது ஒன்றும் பெரிய ஆச்சரியமாக எனக்கு இருக்கவேயில்லை, ஷெர்லி அப்படித்தான்,

 

பள்ளி நாட்களில்  அப்பா எங்களை ஆங்கிலம் படிப்பதற்காக ஷெர்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அவள் எங்களுக்கு ஆங்கிலம் கற்று தந்ததை விடவும் விதவிதமான இனிப்பு பணடங்களை செய்து தந்து சாப்பிட வைத்து சந்தோஷப்படுத்தியது தான் அதிகம்.

 

அவளது மூத்தமகன் மார்டி பள்ளியின் ஹாக்கி டீமில் இருந்தான், அவன் மிகச்சிறந்த விளையாட்டுகாரன், ஆனால் கடுமையான முன்கோபி, போட்டி விளையாட்டுகளின் போது எதிரில் விளையாடுபவர்களை மட்டையால் அடித்து மண்டையை உடைத்துவிடுகிறான் என்று அவனை பலமுறை நீக்கம் செய்திருக்கிறார்கள்.

 

மார்டி என்னுடன் ஸ்நேகமாக இருப்பான், அவன் தீவிர எம்ஜிஆர் ரசிகனாக இருந்தான், எந்த புதுப்படம் வந்தாலும் முதற்காட்சிக்கே போய்விடுவான், எம்ஜிஆரைப்போலவே இமிடேட் செய்து காட்டுவதும் அவனது வழக்கம், அவனை எப்படியாவது கப்பற்படைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஷெர்லியின் விருப்பமாக இருந்தது, ஆனால் அவன் அவளது ஆசையை நிறைவேற்றவில்லை, தூத்துக்குடியை சேர்ந்த ஒரு மீனவப்பெண்ணை காதலித்து மணந்து கொண்டு கருவாட்டு வியாபாரி ஆகிப்போனான், அதில் ஷெர்லிக்கு பயங்கரமான மனவருத்தம், அவள் கவலையுற்ற நாட்களில் அதிகம் வேலை செய்வாள், மனதை துயரத்திலிருந்து விடுபட செய்வதற்கு கடினமான வேலைகளை செய்ய வேண்டும் என்று அவளது அம்மா கற்று தந்திருப்பதாக செர்ல்வாள்,

 

அடுத்தவன் ஹெப்பா, இடது கை பழக்கம் கொண்டவன், அவன் தான் அந்த வீட்டிலே பூஞ்சை, சில சமயம் எங்கள் வீட்டிற்கு அவனையும் ஷெர்லி அழைத்து வருவாள்.

 

எனது அம்மா தரும் காபியை ஹெப்பா ஒரு போதும் குடித்ததேயில்லை, அவனால் சூடான எதையும் ஒரு மடக்கு கூட குடிக்க முடியாது, அவள் ஒரு குளிர்பிராணி, ஐஸ்கட்டிகளை வாங்கி வாயில் போட்டு தின்கிறான், எங்கள் ஊரின் பனி இவன் ஒருவனுக்குள் தான் மிச்சமிருக்கிறது என்பாள், ஹெப்பா நன்றாக மவுத் ஆர்கான் வாசிப்பான், அதற்காகவே அவனை தேடி நான் போயிருக்கிறேன், அதிலும் ஹிந்திபாடல்களை அவன் வாசிக்க கேட்பது மயக்கம் தருவதாக இருக்கும்,

 

ஹெப்பா ஒருவன் தான் தனது தந்தையை அடிக்கடி நினைத்துக் கொள்கின்றவன், அப்பாவின் மரணத்தை பற்றி அவன் நினைக்க ஆரம்பித்த நாட்களில் சாப்பிடவே மாட்டான், யாருடனும் பேசவும் மாட்டான், மவுத் ஆர்கான் வாசித்துக் கொண்டே இருப்பான், அந்த இசையில் பீறிடும் துயரத்தை கேட்டு ஷெர்லி அழுவாள்,

 

அவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்த கைகளால் அப்பாவை தொட்டு இருக்கிறீர்கள் தானே, அதை எனக்கு தாருங்கள், உங்கள் வழியாக நான் அப்பாவை தொட்டுக் கொள்கிறேன் என்று கேட்பான், இருவரும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டு அழுவார்கள்,

 

அவன் தான் முதன்முதலாக என்னை கோனியாக் குடிப்பதற்கு பழக்கியவன், யாரோ நண்பன் கொடுத்தது என்று ரகசியமாக ஒரு மூடி கோனியாக் பிராண்டியை எனக்கு குடிக்க தந்து நண்பனே ஒரு பெண்ணை முத்த்மிடுவதை போல ரசித்து குடிக்க வேண்டும், என்னை பார் என்று ஒவ்வொரு சொட்டாக அவன் சுவைத்து குடித்தான்,

 

ஹெப்பா கிறிஸ்துமஸ் காலங்களில் எங்கள் வீட்டிற்கும் ஒரு நட்சத்திரம் கொண்டுவந்து கட்டிவிட்டு போவான், மேடைநாடகங்களில் நடிப்பான், யாருடனாவது பைக்கில் ஏறிக் கொண்டு ஊரை சுற்றிக் கொண்டேயிருப்பான், ஒரு நாள் இல்லட்ஸ்ரேடட் வீக்லியில் அவனது கவிதை வெளியாகி இருப்பதை எடுத்துக் கொண்டு வந்து காட்டினான்,

 

ஷெர்லி அந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக வான்கோழி பிரியாணி செய்தாள், ஹெப்பா தனது நண்பன் ஒருவனின் கல்யாணத்திற்காக சோழவந்தான் போய்விட்டு இரவில் திரும்பி வரும் போது சாலை விபத்தில் லாரியில் மோதி இறந்து போனான், அவன் உடலை பெற்றுக் கொள்வதற்காக ஷெர்லியை அழைத்துக் கொண்டு அப்பா தான் போயிருந்தார்,

 

ஷெர்லி மகனின் சாவில் உடைந்து போயிருந்தாள், ஆறுமாதம் காலம் அவள் படுக்கையிலே கிடந்தாள், நாள் முழுவதும் மகனை நினைத்து அழுவதும் நினைத்தாற் போல எழுந்து பிரார்த்தனை செய்து கொள்வதுமாக நாட்களை ஒட்டினாள், அப்போது எனது அம்மா தினசரி அவளை போய் பார்த்து வருவது வழக்கம்,

 

பின்பு ஒருநாள் ஷெர்லி உடலும் மனமும் தேறி வந்து புகைப்படம் எடுக்க துவங்கினாள், அந்த வீட்டிலே ஷெர்லியோடு சதா சண்டையிடுகின்றவளும் இந்தியாவை சுத்தமாக பிடிக்க்காதவளுமான வளர்ந்தவள் டோல், எப்படி அது போல ஒருத்தி தனக்கு மகளாக பிறந்தாள் என்று ஷெர்லி திட்டியிருக்கிறாள்,

 

டோல் மிகவும் கர்வமான பெண், தான் ஒரு அழகி என்ற பெருமிதம் கொண்டவள், அத்துடன் தான் ஒரு ஆங்கிலோ இந்தியப்பெண் என்பதை  ஒவ்வொரு அசைவிலும் நிரூபணம் செய்து கொண்டேயிருப்பாள், மற்றவர்கள் பேசும் ஆங்கிலத்தை கடுமையான கேலி செய்வது, பையன்களை போல  கிரிக்கெட் விளையாடுவது, பியர் குடிப்பது என டோலி செய்யாத வேலைகளே இல்லை,

 

அவளை காதலித்த உள்ளுர் பையன்களை அவள் தன் பின்னால் சுற்றி அலைய விட்டாள், பின்பு ஒரு நாள் அவளை விட பதினைந்து வயது மூத்த டாக்டர் இமானுவேலை தான் பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொன்ன போது ஷெர்லி அவளை குடையால் அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டாள், அந்த டாக்டரை ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று சாபமிட்டார், அதன்பிறகு ஷெர்லி தனிமையில் வாழத்துவங்கினாள், முன்பு போல அவள் புகைப்படம் எடுப்பதற்கு  ஒத்துக் கொள்ளவில்லை, மனதை அழுத்தும் வலியில் இருந்து விடுபடுவதற்காக பின்னல் வேலை செய்ய துவங்கி நாள் முழுவதும் லேஸ் பின்னிக் கொண்டேயிருந்தாள், அவள் பின்னிய ஒரு வெண்ணிற ஸ்கார்பை அப்பாவிற்கு பரிசாக தந்திருக்கிறாள்,

 

ஷெர்லியின் மூத்தபையன் மார்டி ஒரு நாள் திரும்பிவந்து தன்னோடு வந்துவிடும்படியாக அவளை தூத்துக்குடிக்கு அழைத்துக் கொண்டு போனான், தனது தங்கை டோலி அந்த டாக்டருடன் மும்பையில் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று மார்டி சொன்னதை கூட ஷெர்லி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

தூத்துக்குடியில் இருந்து பத்தே நாட்களில் திரும்பிவந்துவிட்டாள், குழந்தைகள் இல்லாத அந்த வீட்டில் இருப்பது மூச்சுமுட்டுகிறது, தான் ஒரு புதுவீடு கட்டப்போகிறேன், அதில் தான் மட்டுமே வசிக்க போவதாக சொல்லியதோடு வங்கி கணக்கில் இருந்த பணதை எடுத்து பாரதி நகரில் ஒரு வீடு கட்ட துவங்கினாள்.

 

அப்பா தான் அந்த வீட்டினை திறந்து வைத்தார், அழகிய வீடாக இருந்தது, அந்த வீட்டில் அப்பாவின் புகைப்படம் ஒன்றினை ஹாலில் மாட்டி வைத்திருந்தாள், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவள் அப்பாவிற்கு இங்கில்பெர்ட்டின் இசைத்தட்டுகளை பரிசாக கொடுத்தாள், அதை வாங்கிக் கொண்டதும் ப்ரோ, உங்களுக்கு மனக்கஷ்டமாக இருந்தால் இதில் உள்ள லவ் மீ வித் ஆல்  யுவர் ஹார்ட் பாடலை கேளுங்கள், அது ஒரு அருமருந்து என்று சொன்னாள்.

 

அப்பா அதன்பிறகு தான் இங்கில்பெர்ட்டின் இசைக்கு அடிமையாக துவங்கினார், எங்கள் வீட்டில் பக்லும் இரவும் இங்கில்பெர்ட் பாடிக்கொண்டேயிருந்தார், அந்த குரலில் ஏதோவொரு மாயமிருந்தது, தேனை சுவைத்து சாப்பிடுவதை போல அப்பா அதை துளித்துளியாக ருசித்து கேட்டுக் கொண்டிருந்தார்,

ஒருமுறை ஷெர்லி சொன்னாள்

 

மனிதர்களை துயரத்தில் இருந்து மீட்பதற்காகவே பாடகர்களை கடவுள் படைத்திருக்கிறார், இங்கிள்பெர்ட் மதராசில் பிறந்தவன், அவன் குரலில் நம் ஊரின் வாசம் அடிக்கிறது.

 

ஷெர்லி நம் ஊர் என்று தமிழ்நாட்டினை குறிப்பிட்டதை அப்பா பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார், ஷெர்லி தனது துயரங்களை தனக்குள் ஒடுக்கி கொண்டு சகமனிதர்களை பூரண அன்புடன் நேசிக்க தெரிந்திருந்தாள், அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று தோன்றியது.

 

•••

காலிங் பெல்லின் ஒசை மறுபடி கேட்டது,  மாடியில் இருந்து நான் இறங்கி வருவதற்குள் உறக்கம் கலைந்த அம்மா  வாசல் கதவை திறந்துவிட்டு மிருதுவான குரலில் வெல்கம் ஷெர்லி என்று அழைக்கிற சப்தம் கேட்டது,  

 

இட் இஸ் மை ஸ்மால் கிப்ட் என்றபடியே ஷெர்லி கேக்கை முன்னால் நீட்டினாள், பிறகு என்னை பார்த்து புன்முறுவல் செய்தபடியே

 

ஹெ இஸ் யுவர் லைப் மை சன் என்று கேட்டாள்.

 

கிரேட் என்று சொன்னேன், அவள் தலையசைத்துவிட்டு மெதுவாக அப்பாவின் அறையை நோக்கி நடந்து போனாள், அம்மா கிச்சனுக்கு போய் ஷெர்லிக்காக காபி தயாரிக்க ஆரம்பித்தாள், நான் ஷெர்லியிடம் பேச வேண்டும் என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டேன்,

 

ஷெர்லி அயர்ந்து கிடக்கும் அப்பாவின் அருகில் போய் அவரது கைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள், நீண்ட நேரம் அவருக்காக கண்ணை மூடி பிரார்த்தனை செய்தாள், பிறகு யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று சுற்றிலும் திரும்பி பார்த்துவிட்டு அப்பாவின் காதருகே போய் சொன்னாள்.

 

பிரண்ட், எனது மகள் டோலி கருக்கொண்டிருக்கிறாள், நான் பாட்டி ஆகப்போகிறேன், இந்த சந்தோஷத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன், உனது மனம் இதை கேட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்கு தெரியும், நீ என்னை புரிந்து கொண்ட ஒரு மனிதன்,

 

டோலி நேற்று இரவு என்னிடம் போனில் பேசினாள், பேசினால் என்பது கூட தவறு, அழுதாள், கர்ப்பிணியாக உள்ள தன்னோடு உடன் வந்து இருக்கும்படியாக அழைக்கிறாள், நான் மும்பைக்கு போக இருக்கிறேன், ஒருவேளை இந்த ஊருக்கு நான் இனிமேல் திரும்பி வராமலே போகவும் கூடும், உன்னிடமிருந்து விடைபெறுவதற்காக தான் வந்திருக்கிறேன், மூன்று பிள்ளைகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற நாளில் நீ செய்த உதவி தான் என்னை வாழ வைத்திருக்கிறது, நீ ஒரு உன்னதமான மனிதன், நீ செய்த நன்றியின் அடையாளமாக உன்னை ஒரு முத்தமிட விரும்புகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று குனிந்து உறங்கும் அப்பாவின் தலையில் அவள் முத்தமிட்டுவிட்டு கசியும் கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள், பிறகு விடுவிடுவென படி இறங்கி வெளியே போக துவங்கினாள்,

 

அம்மா காபி கொண்டுவருவதற்குள் ஷெர்லி போயிருந்தாள், எஙகே ஷெர்லி எனக்கேட்ட போது இப்போது தான் போகிறாள், என்றேன்.

 

அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை விசித்திரமான பெண் என்று அம்மா சொன்னாள்.

 

நானும் தலையாட்டிக் கொண்டேன்.

 

அம்மா அவள் கொண்டுவந்த கேக்கை பிரிட்ஜில் எடுத்து வைக்கும்படியாக சொன்னாள்.

 

நான் ஷெர்லியின் கேக்கை பிரித்த போது அதில் Long Goodbye friend என்று அழகாக வெண்ணிற கிரிமீல் எழுதப்பட்டிருந்தது, அதை பார்த்தபோது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது, ஷெர்லி அடிக்கடி சொல்லும் ஸ்ட்ரேஞ் என்ற சொல் ஏனோ மனதில் வந்து போனது.

(அந்திமழை ஜூலை 2013 இதழில் வெளியான சிறுகதை. ஓவியம் டிராட்ஸ்கி மருது)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...