அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிறுகதை: உச்சிக்காற்று- பெருமாள் முருகன்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   04 , 2014  14:17:38 IST

வளத்தித் தென்னை தங்களுக்குப் பிரிந்ததும் குமரேசன் குதியாளம் போட்டான். அவன் மனசுக்குள் பெரியகாண்டியை நிறுத்தி வளத்தித் தென்ன எங்களுக்கு வரணும், எங்களுக்கு வரணும்’ என்று இடைவிடாமல் வேண்டிக்கொண்டதற்குப் பலன் கிடைத்துவிட்டது. அப்போதே ஓடிப்போய்த் தென்னையைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றிய ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டான். வானளாவிய தென்னையின் முகத்தை அண்ணாந்து பார்த்து கண் சூட்டைச் சுழித்துத் தன் திருப்தியைத் தெரிவித்தான். அப்புறம் பார்க்கலாம் என்று அர்த்தப்படும்படி கைச்சாடை காட்டினான். அந்தத்  தென்னை அவனுக்கு அவ்வளவு பழக்கம்.  அவனைத் தவிர வேறொருவர் நாட முடியாது. அவன் அண்ணன் முருகேசனோடு சண்டை வரும்போதெல்லாம் கடைசியாக வளத்தித் தென்னையில் உன்னால ஏற முடியுமாடா?’ என்று கேட்பான் குமரேசன். வாயைக் கோணித் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்குவான் அண்ணன்.

 

இத்தனை காலம் காட்டைப் பாகம் பிரிக்கவில்லை. குமரேசன் வீட்டுக்கும் சித்தப்பாக்களுக்கும் பொதுவாகவே எல்லாம் இருந்தன. தாத்தாவும் பாட்டியும் சொன்னபடி ஆளுக்கொரு பகுதியை உழுது கொண்டிருந்தார்கள். இனியும் அப்படி முடியாது என்று பங்கு வைத்துக் கறார் செய்து பிரித்தாகிவிட்டது. அவரவர் பங்கில் வரும் பனை தென்னை உள்ளிட்ட மரங்களும் அவரவர்க்கு. அதில் கூடுதல் குறைச்சல் என்று பிரச்சினை வரக்கூடாது.  கிணறு மட்டும் பொது. அதைச் சுற்றி ஐந்தடி தூரம் கிணற்றுக்குச் சேரும். அந்த ஐந்தடிக்குள் இருந்த ஐந்து தென்னைகளைப் பிரிக்கும்போது தங்களுக்கு என்று இரண்டு தென்னைகளை வைத்துக்கொண்டு மூன்றை மகன்களுக்கு விட்டுவிடுவது என்று பாட்டி சொன்னதை எல்லாரும் ஏற்றுக்கொண்டார்கள். யாருக்கு எந்தத் தென்னை என்று பிரச்சினை வந்தபோது பாட்டியே கைகாட்டட்டும் என்றார்கள். வளத்தித் தென்னைப் பெரியவனுக்கு’ என்றாள் பாட்டி. அவள் நாக்கில் பெரிய காண்டியே வந்து உட்கார்ந்திருக்க வேண்டும்.

 

வளத்தித் தென்னையின்மீது அவ்வளவு பிரியம் குமரே சனுக்கு. எங்கும் பனைகளே நிறைந்திருக்கும் ஊரில், அவர்கள் காட்டில் மட்டும் பதினைந்து தென்னைகள் இருந்தன. அதனால் தேங்காய் வாங்க ஊர் ஆட்கள் வந்தபடி இருப்பார்கள். கிணற்றின் மேல்மூலையோரம் இந்த வளத்தித் தென்னை நின்றிருந்தது. அதை எப்போது வைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பாட்டனைக் கேட்டால் எங்க பாட்டங்காலத்துலயோ அவுங்கப்பன் காலத்துலயோ வெச்சிருப்பாங்க. எனக்கு நெனப்புத் தெரிய இந்தத் தென்ன கொமரியா இருந்தது பாத்துக்க’ என்பார். அதனோடு இருந்தவை எல்லாம் ஒவ்வொன்றாக எப்போதோ போய்விட்டன. இதுமட்டும் இன்னும் உயிர் வைத்துக்கொண்டிருக்கிறது.  பாளை விட்டுக்கொண்டும் தேங்காய் காய்த்துக்கொண்டும் இருக்கிறது. அடிப்பகுதி அகண்டு நடுவில் பருத்து அதற்குமேல் மெலிந்த உடலுடன் நெளிந்து நெளிந்து காற்றில் வரைந்த ஒற்றையடித் தடம் போலச் செல்லும் அதன் உருவத்தைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும் குமரேசனுக்கு.

 

 அவனுக்கு மரம் ஏறுவதில் கொள்ளை ஆசை. தென்னை தான் அவனுக்குப் பிடித்தது. நெஞ்சை மரத்துக்குக் கொடுத்து ஏறுவது அவன் வழக்கம். பனைக்கு அது சரிப்படாது. பனைக்கு நெஞ்சைக் கொடுத்தால் சிராய்த்து ரத்தம் கசிய வைத்துவிடும். தென்னை அப்படி அல்ல. நெஞ்சைக் கொடுத்தால் மென்மையாய் அணைத்துக் கொள்ளும். எத்தனை பெரிய மரமானாலும் அவன் ஏறிவிடுவான். அதுவும் மரம் உயரமாகப் போகப்போக அவனுக்கு உற்சாகம் கூடும். நூலேணி ஒன்றில் சரசரவென்று காற்றில் ஏறிச் செல்வது போல இருக்கும்.

 

வளத்தித் தென்னையில் ஏறுவதை மிகவும் விரும்புவான். அப்போது தனக்கு நிகர் யாருமில்லை என்னும் கர்வம் மிகும். பெருந்தலையை அசைத்துக்கொண்டு வெற்றுடம் புடன் அவன் ஏறுவதைப் பார்த்தால், கரும்பல்லி தென்னையில் ஒட்டிக்கொண்டு மேலேறுவதைப் போலத் தோன்றும். கிணற்றைச் சுற்றி இருந்த மரங்கள் எல்லாம் பாட்டிக்கு என்று இருந்தபோது வளத்தித் தென்னையில் தேங்காய் பறிக்கக் குமரேசனைத்தான் பாட்டி அழைப் பாள். அத்தனை உயரம் பயமில்லாமல் ஏற அவனைத் தவிர யாருமில்லை. எந்த மரமேறியும் அதில் ஏற மறுத்துவிடு வார்கள். நடுப்பகுதி தாண்டி மரத்தின் கழுத்துக்குப் போகும்போது மனிதக் கனம் தாங்காமல்  அசையும். ஒடிந்து விழுந்துவிடுமோ என்னும் பயம் யாருக்கும் சட்டென வந்துவிடும். அதுவும் அங்கிருந்து கீழே பார்த்துவிட்டால் அவ்வளவுதான். கிணறு ஆவென்று விழுங்கத் தயாராய் வாயைத் திறந்து கொண்டு இருப்பது கண்ணில் பட்டபின்மேற்கொண்டு யாராவது மரத்தில் ஏறுவார்களா?

 

கிணறும் சாதாரணமானதல்ல. வெகு ஆழம். எட்டு முட்டு. எட்டிப் பார்த்துத் தண்ணீரைக் கண்டு பிடிக்க முடியாது. ஆழத்தில் கருங்குழம்பாய்க் கிடக்கும் நீரைக் காண ஏற்ற மேட்டுக்குப் போய் ஏற்றக் கால் ஓரத்தில் கால் வைத்து நிற்க வேண்டும். படிகள் தூர்ந்து கிடக்கும் கிணற்றுக்குள் இறங்குவதும் அவ்வளவு சுலபமல்ல.வளத்தித் தென்னையில் தேங்காய் காய்ந்து விழுந் தால் பெரும்பாலும் கிணற்றுக்குள்தான் விழும். அது கைக்கு வந்து சேராது. பெரும்பூத வயிறு விழுங்கியது போலத்தான். கிணற்றுக்குள் ஊறிக் கிடக்கும் தேங்காய்கள் எப்போதாவது ஏற்றப் பறி ஏறி ஒன்றிரண்டு மேலே வரும். அவற்றை எடுத்தாலும் ஒரு பயனும் இல்லை. நீருக்குள் ஊறி நசநசவென்று போயிருக்கும்.

 

வளத்தித் தென்னை வயதானதாக இருந்தாலும் தேங்காய் நன்றாக இருக்கும். குரும்பை அளவுக்குத்தான் முற்றல் தேங்காயே. ஆனால் மட்டையும் ஓடும் லேசாகவும்  பருப்பு மொத்தமாகவும் இருக்கும். அதன் தேங்காயை உடைக்கும் ஒவ்வொரு முறையும் பருப்பைக் கையில் வைத்துக்கொண்டு பாட்டி வியந்து சொல்வாள். ஒரு துண்டை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டு அட்டா தேனைக் குடிச்சாப்பல இருக்குதடா’ என்பாள். உண் மையோ இல்லையோ பாட்டி சொல்வதைக் கேட்டாலே அதைத் தின்ன வேண்டும் போலிருக்கும். அருகிலிருக்கும் பிள்ளைகளுக்குச் சிறுசிறு துண்டுகளைக் கம்பரக் கத்தியால் தோண்டித் தருவாள். இன்னொரு துண்டு தர மாட்டாளா என்று எல்லார் கண்களும் பாட்டியையே பார்க்கும். அதற்குள் தேங்காய் தீர்ந்து போயிருக்கும். அத்தனை சிறிய தேங்காய்.

 

வளத்தித் தென்னையில் தேங்காய் பறிக்கச் செவ்வாய்க் கிழமையைப் பாட்டி எதிர்பார்த்திருப்பாள். குமரேசனின் அம்மா சந்தைக்குப் போகக் கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பிக் காட்டுத்தடம் பிடித்து நடக்கத் தொடங்கியதும் குமரேசனைப் பாட்டி கூப்பிடுவாள். சின்னவனே’ என்று அவள் அழைக்கும் குரல் கேட்டதும் துள்ளி வரும் அவனிடம் வளத்தித் தென்னையைக் கைகாட்டுவாள். மரத்தின் மேலேறினால் அம்மாவின் கண்ணில்படுமா என்பதைப் பார்த்தபடி அவன் ஏறுவான்.

 

அம்மாவுக்கு அந்த மரத்தில் அவன் ஏறுவது துளியும் பிடிக்காது. லேசாகக் காற்று அடித்தாலே ஒடிந்துவிழும் போலிருக்கும் மரத்தில் சின்னப்பையனை ஏறச் சொல்லலாமா என்று சண்டைக்கு வருவாள். குமரேசனும் அவன் அண்ணன் முருகேசனும் என்று இரண்டு பையன்கள் அவளுக்கு. கொழுந்தனார் வீடுகளில் பிள்ளைகள்தான் அதிகம். அதனால் எல்லார் கண்ணும் தன் பையன்கள் மேல் இருப்பதாகவும் யாருக்காவது ஏதாவது நேர்ந்தால் எல்லாரும் சந்தோசப்படுவார்கள் என்றும் அவள் நினைப்பு. பாட்டியை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. வளத்தித் தென்னையில் ஏற வைத்துச் சின்னவனைத் தொலைப்பது தான் பாட்டியின் எண்ணம் என்பாள். ‘கொழந்தப் பையன மரமேற வெச்சுத் தேங்கா புட்டுத் திங்கறாளே, இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று சாடை பேசும் அம்மாவுக்கு பன்னண்டு வயசுப் பையன் இவளுக்குக் கொழந்தயா? இன்னம் பால் குடியா மறக்காத இருக்கறான்? உட்டுப் பாரு உம் பையன என்ன வேல செய்யறான்னு’ எனச் சிரித்தபடி பதில் பேசுவாள் பாட்டி. ’இந்த வயசுல பேசற பேச்சப் பாரு. வாய் புழுத்துத்தான் சாவுவா கெழவி’ என்று சாபமிடுவாள் அம்மா.

 

‘சின்னவனே’ என்று குமரேசனை அழைப்பது எல்லாம் வேசம் என்றும் அப்படிப் பிரியம் இருந்தால் வளத்தித் தென்னையில் அவனை ஏற விடுவாளா என்றும் கேட்பாள். பெரிய ஆட்களே ஏறத் தயங்கும் மரத்தில் சின்னப் பையனை ஏறச் சொல்கிறாளே இவளெல்லாம் பெற்று வளர்த்தவள்தானா என்று ஏசுவாள். பாட்டி அது எதற்கும் மசிபவள் அல்ல. வளத்தித் தென்னையின் காய்களை இழக்க அவள் விரும்புவதில்லை. காற்றடிக்காத மத்தியான நேரத்தில் குமரேசனை ஏறச் சொல்வாள். இப்போது வளத்தித் தென்னையைத் தங்களுக்கு ஒதுக்கியதுகூடப் பாட்டியின் சதிதான் என்றாள் அம்மா. 

 

பாட்டி எது செய்தாலும் அது தனக்கு எதிரானதாகவே இருக்கும் என்பது குமரேசன் அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. வளத்தித் தென்னை தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லச் சொல்லி குமரேசனின் அப்பனைப் பின்னிருந்து வற்புறுத்தினாள். ஆனால் அவர் கேட்கவில்லை.

 

ஒரு காத்து ஏறி அடிச்சா ஒடிஞ்சு உழுந்திரும் அந்த மரம். அதப் போயி நம்மளுக்குக் கைகாட்டுனான்னா பாத்துக்க உங்கொம்மாவோட வஞ்சனைய’ என்றும் அந்த மரத்துல எம்பையனத் தவிர ஒராளும் ஏற முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அவனத் தொலைக்கவே இந்த வேலயச் செஞ்சிருக்கறா கெழவி’ என்றும் பலவிதமாகப் பேசினாள்.

 

அடிப் போடி. நூறு வெருசத்துக்கு மேல இருக்கற தென்னயப் பத்தி உனக்கு என்ன தெரியும். வெட்டிப் போட்டமுன்னா ரண்டு கட்டலுக்குக் குத்துக்காலும் சட்டமும் வந்திரும். சேவேறி வௌஞ்ச தென்னயில செஞ்ச கட்டலு பத்துத் தலமொறையின்னாலும் தாங்கும். அதுக்குத்தான் செரின்னு சொன்னன்’ என்று குமரேசனின் அப்பன் விளக்கம் கொடுத்தும் அம்மாவுக்கு ஆறவில்லை.

 

பங்கு வைத்து ஐந்தாறு நாட்கள் இருக்கும். வளத்தித் தென்னையின் அடியில் நின்று அண்ணாந்து பார்த்தாள் அம்மா. குமரேசனும் ஆவலாய் அவளுக்கு அருகில் போய் நின்றான். வயதானதால் சிறுத்த மட்டைகள் கீழிருந்து பார்க்க மேலும் சிறுத்து  சிறுபிள்ளை கைவிரித்து நிற் பதைப் போலத் தோன்றிற்று. அடி மட்டைகள் இரண்டு காய்ந்து விழத் தயாராகத் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு மேல் நுங்குக் குலைகள் போல இரண்டு குலைத் தேங்காய்கள் தெரிந்தன. இரண்டு குலைகளுமே அனேகமாக நன்கு முற்றியவையாகவே இருக்கவேண்டும். மரத்தில் ஏறி இரண்டு மாதங்களுக்கு மேலிருக்கும் என்று குமரேசனுக்குத் தெரியும். அந்தக் கொல ரண்டும் முத்தத் தேங்காதாம்மா’ என்று அம்மா வுக்குச் சொன்னான். 

 

இரண்டு குலைகளிலும் சேர்த்து எப்படியும் பதினைந்து காய்கள் இருக்கும். காய் நாலணா என்று வைத்துக் கொண்டாலும் சுளையாக மூன்று ரூபாய் வரும். ஒருவாரச் சந்தைச் செலவை ஈடுகட்டிவிடலாம். அம்மாவின் மனதில் ஓடியவற்றைப் படித்தவனாய்க் குமரேசன் மெதுவா ஏறிப் புட்டுப் போட்டரம்மா’ என்றான். அம்மா தயக்கமாய் அவனைப் பார்த்தாள். மட்ட மத்தியானம். எங்கும் வெயில் பரவித் தகித்துக்கொண்டிருந்தது. காற்று உறைந்து போய் மூச்சுக்குக் கூட இல்லாததுபோலத் தோன்றிற்று. எந்த நேரத்திலும் தென்னையில் ஏறுவது அவனுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் இந்தச் சூழல் சாதகமாக அம்மாவுக்குத் தோன்றும் என்று அவளைத் தூண்டுவது போலக் குமரேசன் பேசினான். ’காத்தே இல்லம்மா. கண் மூடித் தொறக்கறதுக்குள்ள எறங்கீருவம்மா’ என்றான்.

 

அம்மா எல்லாப்புறமும் பார்த்தாள். ஒருவரையும் காணோம். முக்கியமாகப் பாட்டியின் தலை எங்கும் தெரியவில்லை. தெளிவில்லாத மனசோடும் கூம்பிய முகத்தோடும் செரி பாத்து ஏறு’ என்று அனுமதி கொடுத்தாள். சட்டென மரத்தடிக்குச் சென்றான் குமரேசன். அடிமரத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் சரசரவென ஏறத் தொடங்கினான். மரத்தைத் தாவிப் பிடித்துக்கொண்டு நெஞ்சைப் பதியவைத்து அவன் ஏறுவதைப் பார்க்க வவ்வால் கீழிருந்து மேலே பறப்பதைப் போலிருந்தது. ‘மெதுவாடா’ என்று அம்மா சொல்லச் சொல்ல அவன் பாதி மரம் ஏறிவிட்டான். அதற்கும் மேல் ஏற அவன் உள்ளம் உற்சாகம் பொங்கிப் பரபரத்தது.

 

அம்மாவின் குரல் மெலிந்துகொண்டே வந்தது. அம்மா என்ன சொன்னாலும் இனி அவன் விருப்பம்தான்.

ஆனால் இன்னொரு முறை ஏற அவள் அனுமதி கொடுக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணம் மட்டும் அவனுக்கிருந்தது.

 

மரத்தின் உச்சிக்குப் போகப் போக லேசாக அதன் தலை அசைந்தது. இப்போது அம்மாவின் குரல் தூரத்து மைனாவின் கீச்சுக்குரலாய் மெலிந்து மேலேறி வந்தது. பாத்துப் பாத்து’ என்றோ மெதுவாடா’ என்றோ அந்தக் குரலுக்கு அர்த்தமிருக்கும். ஒருவேளை பயந்து போய் வேண்டாம். ‘எறங்கு’ என்றுகூடச் சொல்லலாம். இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. அவன் வெற்றுடம்பில் சுளீரிட்ட வெயில் மேலே போகப் போக இதமாய் மாறிக் கொண்டிருந்தது. அவன் வழக்கப்படி அங்கிருந்து லேசாகக் குனிந்து கிணற்றைப் பார்த்தான். கிணற்றின் அடிப்பகுதி வெயில் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. நீர் குறைவாக இருந்ததால் நீரை ஊடுருவிச் சென்ற கதிர் கிணற்றுத் தரையைத் தெளிவாகக் காட்டியது. அவன் குனிந்து பார்ப்பதைக் கண்ட அம்மா கத்தினாள். அவளின் அபாயக் குரல் கேட்டதும் சிரித்தபடி மேலேறினான். தென்னையின் கழுத்துப் பகுதி ஒற்றைக் கைக்கு அடங்கும் அளவில் சிறுத்திருந்தது. அங்கிருந்து கையை அப்படியே விட்டுவிட்டுக் காற்றிலே பறந்துவிடலாம் எனத் தோன்றிற்று. அந்த எண்ணத்தை அனுபவிக்கக்கூடஅம்மாவின் குரல் விடவில்லை.

 

தொங்கிக்கொண்டிருந்த அடிமட்டைகளை ஒரு கையால் இழுத்துக் கீழே விட்டான். பறவையின் வெட்டிச் சரித்த இறக்கைகள் போல இரண்டும் தரையைச் சென்று அடைவதைக் கண்டான். பன்னாடைகள் சிலவற்றை இழுத்து எறிந்தான். காற்று இல்லை என்றாலும் பன்னாடைகள் மட்டைகளைப்போல வேகமாகச் செல்லவில்லை. உதிரும் இறகுகளாய் அவை பயணம் செய்தன. மேல் மட்டையைப் பற்றிக் குருத்துக்குச் செல்லலாமா என்று நினைத்தான். ஆனால் அம்மா பதறிப் போவாள். அதனால் குரல்வளையை நெரித்தேறிக் குலைகளைப் பார்த்தான். காய்கள் பச்சை மாறி மஞ்சள் பூக்கத் தொடங்கி யிருந்தன. காயைத் தொட்டதும் உடல் முழுக்கக் குளிர்ச்சி பரவியது. லேசாகத் தடவிப் பார்த்தான். உருண்டையாகத் திரண்டிருந்த காய் பரவசம் ஊட்டிற்று. இதுதான் சரியான பதம். ‘தாத்தா காலத்துல இருந்து இப்ப வரைக்கும் நீ கொமரிதான் போ’ என்று அதனிடம் சொல்லிச் சிரித்தான்.

 

அடிக்காயின் தலையில் கைவைத்து அழுத்தியதும் அது பூப்போலப் பாளை விட்டு நீங்கிக் கீழிறங்கியது. அடுத்தடுத்த காய்களைப் பரவசத்தோடு தொட்டு அப்படியே உதிர்த்தான். காய்கள் ஒன்றுகூடக் கிணற்றுப் பக்கம் போகாமல் காட்டுப்பக்கம் விழும்படி தள்ளினான். ஒன்றன்பின் ஒன்றாக அவை வந்து தரை சேரும் வேகம் பார்த்து அம்மாகூட அதிசயப்பட்டுத் தூரத்தில் ஒதுங்கி நின்றாள். இரண்டு குலைகளையும் உதிர்த்ததும் மனமேயில்லாமல் இறங்கினான். ஏறும் நேரத்தில் கால்வாசிகூட இறங்க ஆகாது.

 

கால்களை நீள வைத்து அவன் இறங்குவதற்குள் அம்மா காய்களை ஒருபக்கமாகப் போட்டுக்கொண்டிருந்தாள். காய்கள் விழுந்த சத்தம் கேட்டு வெயில்நேரக் கண்ணசரல் கலைந்து பாட்டி மரத்தடிக்கு வந்திருந்தாள். காய்களைப் பொறுக்கிக் கொண்டிருந்த முசுவில் பாட்டியை அம்மா பார்க்கவில்லை. இறங்கி மரத்தைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு நகர்ந்த குமரேசனைப் பார்த்துச் சிரித்தபடி பாட்டி சொன்னாள்.

 

‘உங்களுக்குன்னு வந்தொடன எப்பிடி இப்ப உங்கொம்மா பயப்படாத ஏறச் சொன்னா? எல்லாம் தனக்கு தனக்குன்னா தம்புடுக்கும் கள வெட்டும் டோய்.’

 

சட்டெனத் திரும்பிய அம்மா ‘அறியாப் பையன் ஏறிப் புடறன் புடறன்னு வக்குபருத்தரான்னு தொணைக்கு வந்தன். வளத்தி மரத்துல ஏறப் பழக்குனது நானா? தாயி பேச்சக் கேக்குதா இந்த நாயி?’ என்றாள் அம்மா.

 

இருவரும் இப்படி மூன்றாம் மனிதரை வைத்துச் சாடையாகப் பேசுவதுதான் வழக்கம். காய்களை ஒருபக்கமாகக் குவித்து வைத்துவிட்டு அவனைப் பார்த்துப் போயிக் கூடைய எடுத்தாடா’ என்று அவனை ஏவினாள் அம்மா. அவனை விட்டுவிட்டுப் போனால் பாட்டிக்கு ஒன்றிரண்டு காய்களைக் கொடுத்துவிடக் கூடும் என்னும் பயம். இனி அவ்வளவுதான். இரண்டு மூன்று மாதம் கழிந்தால் இதுபோல ஒன்றிரண்டு குலை கிடைக்கலாம். அதன்பின் மரம் ஏறுவதைப் பற்றி அவனை ஒன்றும் சொல்வதில்லை அம்மா. என்றாலும் பாட்டியைத் திட்ட வேண்டும் என்றால் பட்டியலில் வளத்தித் தென்னையை ஒதுக்கிய விஷ௸யமும் சேர்ந்தே இருக்கும்.

 

காட்டுப்பக்கம் போகும் போதெல்லாம் குமரேசன் வளத்தித் தென்னையை ஒருமுறை அண்ணாந்து பார்ப்பான். அதன் உயரமும் மட்டை உதிர்ந்த தழும்புகள் மறைந்து வழவழத்த உடலும் அவனை வசீகரமூட்டி அழைத்தன. யாரும் இல்லாத போதில் சும்மா ஏறிப் பார்க்கலாம் என்று தோன்றுவதுண்டு. எவராவது வந்துவிடக் கூடும் என்னும் பயத்தில் கட்டுப்படுத்திக்கொண்டு நகர்ந்துவிடுவான். அன்றாடம் மரத்தைக் கவனிக்கத் தவறியதே இல்லை. அருகிலே சென்று அடிமரத்தில் கைவைத்துத் தழுவியபடி அதனிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசாமல் வர மாட்டான். ‘அப்பறம் வர்றன்’, நல்லா நெறையாக் கொல உடு. அப்பத்தான் நான் ஏறி வர முடியும்’, நான் இருக்கறன். ஒன்னுக்கும் கவலப்படாத’ என்று எதையாவது உளறிக் கொட்டுவான்.

 

சில நாட்களாகப் பருந்து ஒன்று மரத்தில் வந்து அமர்ந்திருப்பதைக் கண்டான். குருத்தோலைக்குக் கீழிருந்தமட்டையில் வெகுநேரம் அது உட்கார்ந்திருக்கும். பின் நினைவு வந்ததுபோல வானில் பறந்து மறையும். பருந்தை அப்படியே விட்டால் அது தன் இடமாக்கிக் கொள்ளக் கூடும் என்னும் பயம் வந்தது. இளைப்பாறும் பருந்து பிறகு கூடு வைக்கலாம். வைத்துவிட்டால் அது குஞ்சு பொரித்து வெளியேறும் வரை மரத்தின் பக்கம் அணுகமுடியாது. நிரந்தரமாகப் பருந்து மரத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்ளலாம். கீழிருந்து கத்திப் பார்த்தான். கையை உயர்த்தி விரட்டினான். கல்லெடுத்து எறிந்தான். கல் மரத்தின் பாதியைக்கூட எட்டவில்லை. பருந்து அவன் செயல்களை வேடிக்கை பார்த்தபடி அசைவில்லாம மட்டையில் உட்கார்ந் திருந்தது.

 

அவனுக்குக் கோபம் தாளவில்லை. பெரிய கல்லொன்றை எடுத்துப் போய் அடிமரத்தில் பட்பட்டென்று கொட்டினான். அது மரம் முழுக்க அதிர்ந்து எதிரொலித்தது. என்னவென்று அறியாமல் பயந்துபோன பருந்து விர்ரெனப் பறந்தது. அடுத்த நாளும் அதே முறையைப் பின்பற்றிப் பருந்தை ஓட்டினான். நான்கைந்து நாட்களுக்குப் பிறகு பருந்து வருவதை நிறுத்திக் கொண்டது. வேறிடம் பார்த்திருக்கும் என நினைத்துக்கொண்டான்.

 

மரம் பாளை விடுவதிலிருந்து அதன் அன்றாட வளர்ச்சியைப் பார்த்து இன்னும் எத்தனை நாளில் மரமேறலாம் என்று கணக்கிட்டான். சாதாரண மரங்களில் ஏறும் வாய்ப்புக்குப் பஞ்சமில்லை என்றாலும் அவற்றில் அவன் மனம் ஈடுபடவில்லை. வளத்தித் தென்னையைப் போல வசீகரமும் சாகசமும் வேறெதிலும் இல்லை.

 

தேங்காய் முற்றுவதற்கு முன்னரே மரத்தில் ஏறும் வாய்ப்பு அவனுக்கு ஏற்பட்டது. பாட்டிக்கும் அம்மாவுக்கும் ஏதோ ஒரு சிறு பிரச்சினையில் சண்டை வந்துவிட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏராளமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கத்திக் கொண்டனர். வளத்தித் தென்னய எனக்கு ஒதுக்கி எம்பையனக் கொல்லப் பாத்த பாதகத்திதான நீ’ என்று அம்மா பேசிக்கொண்டிருந்தபோது  குமரேசன் அந்த இடத்திற்குப் போனான்.  அம்மா கையை நீட்டிக் கத்துவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. பேசாத வாம்மா’ என்று அடக்கி இழுத்துச் செல்லப் பார்த்தான்.

 

அம்மாவின் கோபம் முழுக்க அவன் மேல் திரும்பி விட்டது. இந்த நாயும் அப்பனாட்டமே அவ முந்தானையப் புடிச்சிக்கிட்டுக் கெடக்கறான். நீயெல்லாம் ஒழுங்காச் சொல் பேச்சுக் கேட்டிருந்தா வளத்தித் தென்னய நம்ம தலயில கட்டி இருப்பாளாடா கெழவி? எனக்குன்னு வந்து பொறந்தயே’ என்று திட்டியபடி அவன் முதுகில் ஓங்கி அடித்தாள். தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துத் தலையைக் கீழே அழுத்தி  இடக்கையால் முதுகில் அறைந்தாள். வெறிநாயிடம் மாட்டிக் கொண்டு விடுபடமுடியாமல் தவித்தான் குமரேசன். தூரத்தில் நின்று சிரித்தபடி இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் அண்ணன்.  அவன் அப்படி ஓர் அடியை எதிர்பார்க்கவில்லை. பாட்டியின் மேலிருந்த கோபம் முழுக்க அவன் முதுகில் இறங்கிவிட்டது. தலையைச் சிலும்பிப் போ’ என்று அவளை உதறித் தன்னை விடுவித்துக்கொண்டு தூர வந்தான். அவனுக்குக் கோபமும் அழுகையும் வந்தன.  அம்மாவின் கத்தலும் பாட்டியின் பதிலும் என அவன் காதில் விழுந்து கொண்டே இருந்தன.

 

விசும்பலுடன் கிணற்றோரம் வந்தவன் கண்ணில் மரம் பட்டது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. அருகிலே போய் நின்று கொண்டு எல்லாம் உன்னாலதான்’ என்று அடிமரத்தை அறைந்தபடி அழுதான். பின் சரசரவென்று மரத்தைப் பற்றி ஏறினான். மாயத்தில் மர உச்சிக்குப் போய்விட்டான். அடி மட்டை ஒன்று லேசாகப் பழுக்கத் தொடங்கியிருந்தது. அதில் கை வைக்காமல் மேல் மட்டையை எட்டிப் பிடித்து எம்பி ஏறிக் குருத்துக்குப் போனான். மரம் உயரம் என்பதால் எலியோ பாம்போ ஏறியிருக்க வாய்ப்பில்லை. என்றாலும் கொஞ்சம் சத்தம் எழுப்பித் தட்டிப் பார்த்துக் கொண்டான். இவையெல்லாம் அனிச்சையாக அவனுக்குக் கைவந்திருந்தன.

 

வளத்தி மரத்தின் குருத்துக்கு ஏறி உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்னும் ஆசை அப்போதுதான் நிறைவேறியது. அம்மாவின் மேலான கோபம் கொஞ்சம் குறைந்த மாதிரி தெரிந்தது. அடிமட்டைக்கும் குருத்துக்கும் இடையில் இரண்டடுக்கு மட்டைகள் இருந்தன. அவற்றில் ஓரடுக்கு விரிந்திருந்தது. குருத்தை ஒட்டிய அடுக்கு தலைக்கு மேல் உயர்த்திய கைகளைப் போல நேராக நிமிர்ந்திருந்தது. குருத்தை ஒட்டிய அடுக்கு மட்டைகள் இரண்டில் கால்களை அகட்டி வைத்துக் குருத்தின் மேல் சாய்ந்து வசதியாக உட்கார்ந்தான். மெலிந்த பாளைகள் நான்கைந்து அங்கங்கே தெரிந்தன. ஒன்றில் மட்டும் குரும்பை பசுமையாகக் கண்ணை ஈர்த்தது.

 

அம்மாவின் கை விளாறு வீசிய வலி நினைத்துக் கொஞ்ச நேரம் அழுதான். நேரம் போகப் போக அழுகை அடங் கிற்று. மேலிருந்து பார்க்கவேண்டும் என்னும் ஆசை நினைவுக்கு வந்தது. சாவகாசமாக இப்படி உட்கார்ந்து பார்க்க ஒருபோதும் வாய்த்ததில்லை. வானைப் பார்த்தான். கீழே இருந்தபோது மரத்தின் உச்சிக்கு வந்து விட்டால் வானை எட்டிப் பிடித்துவிடலாம் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று தோன்றியது. இன்னும் பழைய உயரம் அப்படியே இருந்தது. பொழுது மேற்கு வானில் சாய்ந்திருந்தது. லேசான ஈரக் காற்று வந்து முகத்தில் மோதியது. அவன் தலைக்கு நேராய்ப் பறந்து சென்றன காக்கைகள். ஒரு காக்கை தென்னையில் உட்கார வந்து அவனைப் பார்த்து அதிர்ந்து தடுமாறி மீண்டும் பறந்தது. காற்றில் தடுமாறி விரிந்த அதன் இறக்கைகளை  நெருக்கத்தில் கண்டான்.

 

தென்னையின் எதிர்ப்பக்கம் வந்து அதேமாதிரி உட்கார்ந்துகொண்டு கிணற்றைப் பார்த்தான். செவ்வக வாயாய் மேலே திறந்திருந்த கிணறு பெருங்குகையாய்த் தெரிந்தது. எட்டிப் பார்த்தான். கிணற்றில் பாதிக்கு மேல் நீர் இருந்தால் மரத்தின்மேலிருந்து அப்படியே தாவிக் குதிக்கலாம். ஆழம் எந்தச் சேதமும் இன்றி உள்ளிழுத்துக் கொள்ளும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்கள் சொக்கின. குருத்தில் முதுகை நன்றாகச் சாய்த்துக் கொண்டான். கால்களைக் கவையாக்கி மட்டை களில் பற்றிக் கொண்டான். அப்படியே தூங்க ஆரம்பித் தான்.

 

எவ்வளவு நேரம் தூங்கினான் என்பது தெரியவில்லை. காற்றில் மட்டைகள் ஆடும் ஓசை கேட்டு விழித்தான். வளத்தித் தென்னையை காற்று வளைத்திருந்தது. சுற்றிலும் காற்று என்பதால் மரத்தின் தலை ஒருபக்கம் சாய்ந்து பின் எழுந்தது. சாயும்போது குமரேசனும் சாய்ந்தான். கால் கவட்டியை இறுக்கிக்கொண்டான். மரத்திற்குக் கீழே ஒரே செம்புழுதி. வானில் கருமுகில்கள் கலைந்து நகர்ந்தன.

மழை பெய்தால் பரவாயில்லை. காற்றும் புழுதியும் அடங்கிவிடும். ஆனால் முகில்கள் வேகமாகக் கலைந்தன. மரத்தின் தலை ஒவைந்து பேயாட்டம் போட்டது.

 

வசமாகச் சிக்கிக் கொண்டதை உணர்ந்தான்.

 

இந்தச் சமயத்தில் இறங்கமுடியாது. கால் லேசாகப் பிறழ்ந்தால் போதும். தலை குப்புறக் கீழே போக வேண்டியதுதான். காற்றின் வீசலில் தூக்கி எறியப்பட்டுக் கிணற்றுக்குள்ளும் போய் விழலாம். மரத்தின் தலை ஒடிந்து அதோடு சேர்ந்து கீழே போய் விழவும் நேரலாம். என்ன ஆகுமென்று தெரியவில்லை. புழுதி கலைந்தபோது கீழே பார்த்தான். ஏழெட்டு மனிதத் தலைகள் தென்பட்டன. எல்லாரும் அண்ணாந்து மரத்தையே பார்த்தபடி கை நீட்டிக் கத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. சத்தம் எதுவும்  வந்து சேரவில்லை.

 

 அவனுக்குக் காற்றுப் போதவில்லை. கால்களும் கைகளும் குப்பென்று வியர்த்தன. கால் வழுக்கிவிடுமோ என்று பயந்தான். சுழற்றலில் மரம் ஒருபக்கம் சட்டெனச் சாய்ந்து மீண்டது. மட்டைகளின் இடைவிடாத ஓலம். ஏதும் செய்ய இயலவில்லை. மரத்தில் கட்டுண்டு கிடப்பதைத் தவிர வழியில்லை. காற்றின் வாகுக்கு ஏற்ப மெல்லக் கால்களை எடுத்துக் குருத்தைச் சுற்றிக்கொண்டு வந்தான். தளதளவென்றிருந்த குருத்தை இருகைகளாலும் கட்டி அணைத்து இறுகப் பிடித்துக்கொண்டான். உன்னோட சேத்துக்க. என்னய உட்ராத’ என்று முனகினான். கன்னத்தில் மோதிய குருத்து வருடி வருடிச் சென்றது. கண்களை மூடி அப்படியே கிறங்கினான். இதுவரை அவன் அறிந்திராத பெருமழைத் துளி ஒன்று அவன் முகத்தில் வந்து விழுந்தது.

 

(அந்திமழை ஆகஸ்ட் 2012 இதழில் வெளியான சிறுகதை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...