அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சிறுகதை: கட்டை வரி - எஸ்.செந்தில்குமார்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   07 , 2014  11:15:05 IST

தொப்பையா ஆசாரிக்குக் குழி வெட்டுவதற்கு ஆள் தேடிய போது ஒருவரும் கிடைக்கவில்லை. குழி வெட்டுபவனைத் தேடி அழைத்துக்கொண்டுவர இரண்டு பேர் சைக்கிளில் சென்றிருந்தனர். அவரது படுக்கையில் மலமும் சிறுநீரும் திராவகத் தண்ணீர் சிந்தி நஞ்சிருப்பது போன்ற நிறத்தில் கிடந்தது. முகஞ்சுளிக்காமல் அவர்கள் படுக்கையைச்  சுருட்டியெடுத்துப் போட்டார்கள். சென்றயால், “தலைகானி இருக்கட்டும். தேரிலே வைச்சுக் கட்டுவோம். அப்பத்தான் தலை கோண-மாணலாகம இருக்கும்” என்று மூலையில் தலையணையை வைத்தான். அவர் படுத்திருந்த படுக்கைகளைத் தெருவில் கொண்டு வந்து போட்டார்கள்.

வாசலில் பெட்ரோமாக்ஸ் விளக்கு எரியத்தொடங்கியதும் தெரு முழுக்க வெளிச்சம் பரவியது. தெருவில் தூங்கிக்-கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து வாசலுக்கு வந்தார்கள். சென்றயாலுடன் வந்த முத்தையா, “ஊர் சொல்வதற்கும் தேர் இழுப்பதற்கும் நேரத்தோடு ஆட்களை  ஏவி விட்டால்தான்  மயானத்திற்கு கிளம்புவதற்கு தோதாகயிருக்கும்” என்று சொன்னான். பெட்ரோமாக்ஸ் வைத்திருந்தவனும், “ஆமாம் அதுக்குத்தான் ஆளை அனுப்பியிருக்கோம். விடிஞ்சதும் மயானத்திற்குக் கிளம்பிற வேண்டியதுதான்” என்று பதில் சொன்னான். விடிவதற்கு இன்னமும் நேரமிருந்தது. வானத்தில் நட்சத்திரங்களும் நிலவும் தெரிந்தது. பெட்ரோமாக்ஸ் வைத்திருந்தவன் பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான். அவன் சங்கு ஊதுவதற்கென வந்திருந்தான். அவனை கண்டுபிடித்து அழைத்துக்கொண்டு வருவதற்கு பெரும்-பாடாகயிருந்தது. இரவுக்காட்சிக்கு சினிமா தியேட்டரில் அமர்ந்திருந்தவனைத் தேடிப்பிடித்து வந்தார்கள். அவன் வரும்போதே பெட்ரோமாக்ஸ் விளக்கையும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டான்.

தொப்பையா இறந்ததை அறிந்து பக்கத்து தெருவிலிருந்து வந்தவர்கள் வாசலிலிருந்த மற்றவர்களிடம் “குளிக்க வைச்சிட்டோமுன்னா வேற துணிமாத்திட்டு உட்கார வைச்சிட்டு நாம் மத்த வேலைகளைப் பார்க்கலாம்” என்று சொன்னார்கள். அடுத்த தெருவிலிருந்த பாண்டி ஆசாரியை அழைத்துக்கொண்டுவர ஒருத்தர் சென்றிருந்தார். தொப்பையா கடைசியாக அவரது பட்டறை-யில்-தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். முதலில் சின்னத்தாய் அவரைத்தான் ஆள் விட்டு அழைத்துவரச்சொல்லியிருந்தாள். அவர் ‘இந்தா வர்றேன்’ ‘அந்தா வர்றேன்’ என்று கதவைத்திறக்காமல் பதில்

சொல்லியனுப்பிக்கொண்டிருந்தார். அவர் வந்தால் மற்ற காரியங்கள் ஜரூராக நடக்கும்.

“நீளமான பெஞ்சு ஏதாவது இருந்தா பாருங்க அப்பச்சி. இல்லை, உங்க சங்கத்திலே போயி இரண்டு பெஞ்சும் கூடவே வர்றவங்க உட்காருறதுக்கு சேரும் வாங்கிப்போடுங்க அப்பச்சி” என்று பெட்ரோமாக்ஸ் லைட் வைத்திருந்தவன் சொன்னான். பந்தல் போடுவதற்கும், தேர் இழுப்பதற்கும் ஆளை அழைத்துக்கொண்டு வர இன்னமும் ஏற்பாடு செய்யவில்லை. சென்றாயலும், முத்தையாவும் குளிப்பாட்டுவதற்கென பிரேதத்தை வைத்துவிட்டு தெருவுக்கு வந்தார்கள். அவர்களிடம் கையில் பணமில்லை. வாரக்கடைசியாக இருந்தது. வேலையும் இப்போது மத்துவம். தொப்பையாவிற்கு பத்திக்குச்சிக் காட்டுவதற்கு கூட யாரிடமாவது கடனுக்கு வாங்கவேண்டுமென்று நினைத்தனர். வாசலில் அமர்ந்து கொள்வதற்கு ஏதுவாக இடம் எதுவும் இல்லை.

பாண்டிஆசாரி பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு தெரு முக்கிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்ததை சென்றாயல் பார்த்தான். உறுமால் கட்டிக்கொண்டு வந்தவரை முதலில் அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அவரது கிந்திக்கிந்தி நடக்கும் நடையை வைத்துத்தான் வருவது பாண்டி என்று அடையாளங்காண முடிந்தது. பாண்டி வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்க்காமல் நேராக தொப்பையாவின்  வீட்டிற்குள் சென்றார். அவர் வீட்டிற்குள் சென்றதும் கிழவியின் அழுகை ‘அய்யா கொடுகா, அய்யோ கொடுகா’ என்று சத்தமாக வாசல் வரை கேட்டது.

சென்றாயலும், முத்தையாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். முத்தையா கண் ஜாடை செய்தார். பிறகு அவர்கள் இருவரும் வீட்டிற்குள்ளாக சென்றனர். தொப்பையாவை தரையில் படுக்க வைத்திருந்தனர். வேட்டியோடு அவர் உறங்குவது போல் இருந்தார். பாண்டி, கிழவியின்  அருகில் அமர்ந்திருந்தார். கிழவி தனது சேலையை வாயில் பொத்தியபடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். வாசலில் எரிந்து கொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் லைட்டின் வெளிச்சம் கதவின் வழியாக விசிறியடித்து நுழைந்திருந்தது. வெளிச்சத்தில் கிழவியின் முகம் துணுக்காகத் தெரிந்தது.

“ராத்திரியெல்லாம் மனுஷன்  எங்கூட  ஜாமகோடாங்கி மாதிரி தொனதொனன்னு பேசிக்கிட்டு இருப்பாரு. ஒரு தூக்கம் கூட தூங்கலை முழிச்சு பார்த்து எழுப்பிப்பார்த்தேன். ஒரு சத்தமில்லை. ஒரு ஜாடையில்லை. இப்படியாகிப்போச்சு மகனே” என்று கிழவி பாண்டிஆசாரியைப் பார்த்து அழு-தாள். பாண்டி, “சரி, சரி இப்போ ஆகவேண்டியதைப் பார்ப்-போம். யாருக்காவது சொல்லிவிடணுமா” என்று கேட்டார்.

“எங்களுக்கு யாரு இருக்கா மகனே. கோயமுத்தூரிலே இருக்கிற களவாணிப்பயலைக் கூப்பிட்டா வருவானா மகனே. எங்களுக்கு நீ தாண்டா மண்ணள்ளிப்போடனும்” அழுதபடி புலம்பினாள்.

நடுஜாமம் என்றாலும் தொப்பையாஆசாரியை எழுப்புவது அவ்வளவு சிரமமில்லை. கிடுகுக் கொட்டகை-யிலிருக்கும் மூங்கில்தட்டுக் கதவை கோழி கால்களில் பிரண்டுகிற சத்தம் கேட்டாலும் கூட எழுந்து கொட்டாவி விட்டுக்கொண்டு அமர்ந்து கொள்வார். மனுஷனுக்குத் தூக்கம் வருமா, வராதா என்று தெரி-யாது. எத்தனையோ நாட்கள் பாண்டிஆசாரி

வந்து அவரை நடுஜாமத்திற்கு ராத்திரி வேலை செய்ய ஒத்தாசையாக அழைத்து சென்றிருக்கிறார்.  ஒரு சத்தம்

கேட்டதும் எழுந்து-விடுவார். தொப்பையா பேசத் தொடங்கினால் அடைமழை போலப் பிடித்து சாத்திவிட்டுத்தான் ஓய்வார் என்றுச பட்டறை வீதியில் இளந்தாரிப் பிள்ளைகள் குறை

சொல்லு---வார்கள். பட்டறை வீதியிலிருந்து வந்ததும் சூடாக சோறும் ரசமும் கானத்துவையலும் தயாராகயிருக்கும். சின்னத்தாய் கிழவி அவருக்கு சுடுதண்ணீர் அடுப்பில் காயவைத்திருப்பாள்.  தண்ணியை சட்டியை இறக்கி வைத்து துண்டெடுத்துப்போடுவாள்.  அவரது தெருவிலிருந்தவர்கள் பலரும் தினமும் இரவில் அவரவர்கள் வீட்டின் வாசலுக்கு முன்பாக பாய் விரித்துப்படுத்துக்கொள்வார்கள். தொப்-பை-யாவும் அவரது வீட்டின் முன்பாக பாய் விரித்துப்-படுத்துத்தான் படுப்பார்.

தெருவில் அவருடன் படுத்திருந்தவர்கள் பாண்டியைப் பார்த்து, “மனுஷனுக்கு தூக்கமே வராது போல. எப்போ முச்சுப் பார்த்தாலும் கிழவியோட பழமை பேசிக்கிட்டு மூக்குப் பொடி போட்டுக்கிட்டு முழிச்சுக்கிட்டு இருப்பாரு” என்றார்கள். வாசலில் விரித்துப்படுத்திருந்தவர்கள் தொப்பையா இறந்து போய் விட்டார் என்று நினைக்க-வில்லை. உறங்கிக்கொண்டுதானிருக்கிறார் என்று நம்பிக்--கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் தொப்பையா உறங்குவதை இந்நாள் வரை கண்டதில்லை. தனியாகக் கிடக்கும் தொப்பையாவைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். “மனுஷனுக்குத் தூக்கத்திலே இல்லே எமன் வந்து அழைச்சிட்டுப் போயிருக்கான். நல்ல

சாவு சின்னம்மா. படுத்துக்கிட்டு உன்னையை தொந்தரவு செய்யாமல் போய் சேர்ந்துட்டாருன்னு சந்தோசப்படுவியா, அதைவிட்டு அழுகிறேயே. அழுகாதே சின்னம்மா” என்று பாண்டிஆசாரி கிழவியை சமாதானப்படுத்தினார்.

சின்னத்தாய் கிழவி, “பாவி மகனே என்னையை தனியா விட்டுட்டுப்போயிட்டேயே. தனியா விட்டுட்டுப்-போயிட்டேயே” என்று திடீரென்று நெஞ்சில் அடித்துக்-கொண்டு அழத்தொடங்கினாள். அவளை அங்கிருந்த-வர்களால் சாமதானப்படுத்த முடியவில்லை. பாண்டிக்கு சங்கட-மாகப் போய்விட்டது. கிழவிக்கு ஒன்றுகிடக்க ஒன்றாக ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். கிழவியின் வகையறாவில் யாராவது தாய்-பிள்ளைகள் இருக்கிறார்களா என்று யோசித்தார். ஒன்றும் புலப்படவில்லை. தொப்பையாவுக்கு அண்ணன் மகன் ஒருவன் கோயமுத்தூரில் வேலை செய்கிறான். அவனுக்குத் தகவல் சொன்னால் வருவானா... அவனை யார் அழைத்து வருவது?  அவன் வரும் வரை இங்கிருக்கிருப்பவர்கள் அடக்கம் செய்யாமல் காத்திருப்பார்களா என்று யோசித்த-படி வாசலுக்கு வந்தார். அவனுக்குத் தந்தி கொடுத்து வரவழைக்கலாமா இல்லை, இங்கிருப்ப-வர்களையே வைத்து காரியத்தை முடித்துக்கொள்ளலாமா என்று யோசித்தார்.

பெஞ்ச் எடுக்கப்போனவர்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள். சற்றுமுன்பாக இறந்து போன கட்டாணி முத்துவேல் ஆசாரிக்கு பெஞ்சும் பெட்ரோமாக்ஸ் விளக்கும் பிரேதத்தைக் குளிப்பாட்டி உட்கார வைப்பதற்கு நாற்காலியும் கொடுத்துவிட்டதாக சங்கத்தில் ஆட்கள்

சொன்னார்-கள். தேர் கூட முதலில் அவரது பெயருக்கு ரசீது எழுதியிருப்பதாக தகவல் சொன்னார்கள். பாண்டி ஆசாரி-யிடம் அவர்கள் சொன்னதும் அவர், “முதலிலே பிரேதத்தை குளிப்பாட்டி உட்கார வைக்கனும். மத்த விசயத்தை-யெல்லாம் பின்னாடி விடிஞ்சதும்

யோசிச்சு செய்யலாம்” என்று சொன்னார். மேலத்தெருவில் இருக்கும் செட்டியார் சமுதாய கூடத்தில் பெஞ்சும் நாற்-காலியும் சேரும் இருக்கிறது என்று பெட்ரோமாக்ஸ் வைத்-திருந்தவன் சொன்னான். லைட்டை வைக்கச்

சொல்லி-விட்டு அவனை அழைத்துக்கொண்டு இரண்டு பேர் நடந்தார்கள்.  அவன் கொண்டு வந்திருந்த சங்கை துணியால் சுற்றி மடியில் கட்டி வைத்திருந்தது புடைத்துக்கொண்டுத் தெரிந்தது.

தொப்பையா ஆசாரிக்கு குழந்தையில்லை. குழந்தை-யில்லா-ததற்காக கவலை கொண்டு கோயில் கோயிலாக அலைந்த காலமும், அழுது பரிகாரம் தேடியதும் முடிந்து--போய்விட்டது. அவருக்கு மிஞ்சிய காலத்தை நோய் நொடியில்லாமல் நகர்த்தி கொண்டு போய் சேர-வேண்டியது மட்டும்தான் எண்ணமாக இருந்தது.

சின்னத்-தாய் ஏலக்காய் கடைக்கு வேலைக்குப்போகிறாள். பக்கத்து வீட்டுப்பெண்களுடன் வேலைக்குப்போகவும், அவர்களுடன் பழமை பேசவுமாக காலத்தை கழித்து-விட்டாள். காலம் போகப்-போகத்தான் தனக்குப் பிள்ளை பாக்கியமில்லையென்பதை நினைத்து வருத்தமுற்றுக்கொண்டாள். அதவைப்பயலுக்கெல்லாம் இரண்டு மூன்று என்று வரிசையாகப் பிள்ளை பிறந்திருக்-கிறது. தனக்கு எதுவும் வாய்க்கவில்லையே என்று வருத்த-முற்றாள். சில நாட்களில் பிள்ளையில்லாததும் ஒருவகைக்கு நல்லது என்று தான் அவளது மனதில்-பட்டது. இந்த மனுஷனைக் கட்டிக்கொண்டு எதையும் தன்னால் அனுபவிக்கமுடியவில்லை. ஒருவேளை சோத்தைக் கூட நிம்மதியாகவும் ருசியாகவும் திங்கமுடியவில்லை. ஒண்ணுக்கு இருக்கவும் இரண்டுக்கு இருக்கவும் இடமில்லாமல் அல்லாடுவதை நினைத்து அவளுக்கு சல்லையாக இருக்கும். அவளுக்கு இதையெல்லாம் நினைக்கும் போது ஆங்கார ஆங்காரமாக வரும். அப்படியான நாட்களில் காரஞ்சாரமாக புளிக்குழம்பு வைத்து உருண்டைசோறாக்கி இரண்டு நாட்கள் குழம்பை சுண்ட வைத்து சுண்டவைத்து பழைசோற்றிற்கு ஊற்றி சாப்பிட்டுக்கொள்வாள். புருஷன் மேலிருக்கும் கோபம் தீர்ந்துவிடும். பிறகு பொன்னு கொட்டகையில் இண்டாம் ஆட்டம் படம் பார்க்க இருவரும் கிளம்பிவிடுவார்கள்.

தொப்பையா முதலில் ஊர்ஊராகப்போய் திருகாணியும் இரும்புத்தடையும் விற்றுக்கொண்டு வருவார். சில சமயத்தில் ஊரிலிருந்து வருவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும். குண்டலப்பட்டியில் போய் முதலில் திருகாணி பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்வார். அங்கிருந்து அவரது சுற்றுப்பிரயாணம் தொடங்கிவிடும். கைச்செலவுக்கு வீட்டில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டுவிடுவார்.

பிறகு ஊருக்குப் போய் வியாபாரம் செய்வதையெல்லாம் விட்டுவிட்டார். உள்ளுரிலேயே தோதிற்குத் தகுந்தாற்போல பட்டறைக்குப் பட்டறைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்.

சின்னத்-தாய் கிழவி பிறகு தெரு முக்கில் விற்கும் பனியாரத்-தையும் இட்டிலியையும் வாங்கிக்கொண்டு வந்து வேகுவேகுவென்று தின்று வேலைக்குப் புறப்படுவாள். தொப்பையாஆசாரி, “ஒரியே ஏட்டியிம்மா வேகுவேகுன்னு நோட்டை வேசேவு” என்று அவளை சாந்தப்படுத்துவார். “ம் உனக்கென்ன, எவன் பட்டறையிலேயாவது போயி காலை நீட்டிட்டு உட்கார்ந்துக்கிருவே. நானில்லை ஏலக்காய் மூட்டையைத் தூக்கவும், சலிக்கவும் போய் வரிசையிலே நிக்கணும். கொஞ்சம் பின்தங்கிப்போனாலும் நாளைக்கு வான்னு திரும்பி அனுப்பிச்

சிடுறான் இப்போ” என்று அள்ளிப்போட்டுக்கொண்டு எழுந்து-விடுவாள். அவள் அவசரம் அவளுக்கு. ஆனால் தொப்பையாவுக்கு எந்த அவசரமும் இல்லை. பதறாமல் நீட்டி நிதானமாக எழுந்து பட்டறைக்குப் புறப்படுவார். தொப்பையா வருவதற்காக ஒரு கூட்டம் பட்டறை வீதியில் காத்திருந்தது. அவரது பேச்சுக்கும், நக்கலான ஜாடைமாடைகளுக்கும் இன்னொரு ஆள் பிறந்து தான் வரவேண்டும்.

மேலத்தெரு செட்டியார் சமுதாய கூடத்திலிருந்து ஆறு பெஞ்சும், நாற்காலியும் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். தெருவுக்குள் தள்ளுவண்டி நுழையவில்லை. முக்கில் நிறுத்திவிட்டு ஒவ்வொரு பெஞ்சாக இறக்கித்தூக்கிக்கொண்டு வந்தார்கள். பெஞ்சு போட்டதும் வாசல் நிறைந்தது. “பந்தல்காரன் வந்தான்னா தெரு அடைச்சு பந்தல் போட்டு தொப்பையாவுக்கு மாலை மரியாதை செய்து வழி அனுப்பிவைத்துவிடலாம்” என்று முத்தையா கேலியாக சென்றாயலிடம் பேசிக்- கொண்டான். அங்கிருந்தவர்கள் சிரித்துக்கொண்டார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த நாற்காலியின் ஒருகால் கொச்சைக்கயிற்றில் கட்டப்பட்டிருந்தது. இரண்டாக உடைந்திருந்ததை ஆணி வைத்து அடித்து கட்டியிருந்தது தெரிந்தது.  தரையில் வைத்ததும் நாற்காலி நிற்காமல் ஆடியது. அனப்பாக சப்பட்டை கல்லை அண்டக்கொடுத்து நிற்க வைக்கவேண்டுமென்று பாண்டி நினைத்துக்கொண்டார்.

சிமிண்ட் தொட்டியில் தண்ணீர் நிறைந்திருந்தது. தொப்பையாவின் சட்டையை அவிழ்த்துப் போட்டுவிட்டு

நீளமான பெஞ்சில் படுக்க வைத்தார்கள். உடல்  ஜில்லென்றி-ருந்தது. முத்தையா, “வேட்டியையும் கழட்டிறலாம். குளிப்-பாட்டிட்டு மாத்துவேட்டிக் கட்டனுமில்லை” என்று

சொன்-னார். அதுவும் சரி தான் என்று சென்றாயலும், பாண்டியும் அபிப்ராயப்பட்டார்கள். வேட்டியைக் கழற்றி-யெடுத்து இறுக்கமாக கட்டியிருந்த அண்ட்ராயரின்

முடிச்சை அவிழ்த்தார்கள். கழற்றமுடியவில்லை.

சென்றால் பிடித்து இழுத்தான். முடிச்சு அவிழவில்லை. மனுஷன் இதைப் போய் ஏன் இத்தனை இறுக்கமாகக் கட்டியிருக்கிறார் என்று சல்லையாக பிளேடை தேடினார்

கள். மூலை வீட்டில் இருப்பதாக கிழவி சொன்னதும் தேடினார்கள். வீட்டில் மின்சாரம் இல்லை. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பிளேடை தேடி முடியவில்லை. பெட்ரோமாக்ஸ் வைத்திருந்தவன் வீட்டிற்குள் வந்து விசாரித்தான். தனது இடுப்பில் கட்டியிருந்த மடக்கு கத்தியை எடுத்து அறுத்துவிட்டான்.

பழைய வேட்டியை மறைத்து வைத்து நான்கு பேர் நின்று கொண்டனர். முத்தையா பெஞ்சின் மேலேறி நின்று கொண்டான். குத்துச்சட்டியில் தண்ணியை மோந்து தந்தார்கள். தலையிலிருந்து நீரை  ஊற்றிவிட்டான். பாண்டி, “தொடையை அகட்டிவிட்டு தண்ணியை ஊத்தி அலசிவிடுறா” என்றார். சென்றாயல், “சொல்லுற ஆளு செய்யவேண்டியது தானே. ஏவிவிடுறதிலேயே குறியாக இருக்கிறான்” என்று முத்தையாவைப் பார்த்து ஜாடை பேசினான்.

தொப்பையாவிற்கு நெற்றி நிறைய்ய விபூதி பூசிவிட்டார்கள். தண்ணி சத்து வடியட்டுமென்று காத்-திருந்தார்கள். வீட்டிற்குள்ளிருந்து சலவை செய்த வேட்டியும் சட்டையும் கிழவி எடுத்துக்கொண்டு வந்து தந்தாள். பெட்டியில் வைத்திருந்த வாசனை கம்மென்றிருந்தது. உடுத்திவிட்டார்கள். பாண்டி நாற்-காலியைத் தூக்கிக்கொண்டு வந்தார். வீட்டிற்குள்ளாக வைக்கவேண்டாம். இடைஞ்சலாக இருக்கும். வாசலில் வைத்துக்கொள்வோம் என்றார்.

தொப்பையாவை குளித்து முடித்து அவரது மூக்குக்-கண்ணாடியை மாட்டி நெற்றியில் கால்ரூபாயை ஒட்டி வைத்த-தும் ஆள் ஜம்மென்றிருந்தார். நாடியைத்தூக்கி கட்டவேண்டுமென்பதற்காக வாசல் சுவரில் ஆணி அடித்தார்கள். நாற்காலியில் தூக்கி உட்கார வைத்தார்கள். உட்கார வைத்ததும் கொச்சைக் கயிற்றில் கட்டியிருந்த இடம் முறிந்தது. மூன்று கால்களில் மட்டுமே நாற்காலி அவரை சுமந்து கொண்டு நின்றது. நின்றவர்கள் பிடித்துக்-கொண்டார்கள்.  உடைந்து போன   காலை  பழையபடி 

வைத்து கயிற்றில் கட்டினார்கள். நிற்க வில்லை ஆட்டம் கண்டது. பாண்டி தலையிலடித்துக் கொண்டார். அடுத்தத் தெருவிலிருந்த பரமனை சுத்தியலும் ஆணியுமாக வரச்

சொன்னார்கள்.

தூங்கிக்கொண்டிருந்த பரமனை எழுப்பி அழைத்து வருவதற்குள் கிழக்கு வெளுக்கத்தொடங்கியிருந்தது. காகங்கள் கரையும் சத்தம் கேட்கத்தொடங்கியது. பெட்ரோ-மாக்ஸ் விளக்கு வைத்திருந்தவன் அணைத்துவிட்டு ஓரத்தில் வைத்தான். பாண்டியிடம் வந்து, “அப்பச்சி கைச்-செலவுக்குப் பணம் கொடுங்க. போயி காப்பித்தண்ணி குடிச்சிட்டு வர்றேன்” என்றான். பாண்டிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சென்றாயலையும் முத்தையாவையும் அழைத்து கட்டை வரி எழுதச்

சொன்-னார். வெள்ளைக்காகிதம் வாங்கிக்கொண்டு வந்து எழுதுவதாகச் சொன்னான் முத்தையா. கடைகள் திறக்கின்ற நேரம்தான். அவர்கள் இருவரும் தாங்களும் சென்று காப்பி சாப்பிட்டு விட்டு அப்படியே பட்டறை வீதியில் கண்ணில் படுகின்றவர்களிடம் சொல்லிவிட்டு வருவதாகக் கிளம்பினார்கள்.  அவர்கள் பின்பாக சங்கு ஊதுபவனும் நடந்தான்.

 “எல்லாரும் போயிட்டா இங்க யாருப்பா இருக்கிறது. கூடமாடே யாரவது ஒத்தாசைக்கு இருங்கப்பா” என்று பாண்டி சத்தம் போட்டார். யாரும் கேட்கவில்லை. பிரேதத்தை குளிப்பாட்டி நாற்காலியில் வைத்ததும் ஆள் காலி படுதா காலி என்கிற மாதிரி கிளம்பிவிட்டார்கள். பாண்டியும் தொப்பையாவும் கிழவியும் அமர்ந்திருந்தனர். நாற்காலியின் உடைந்த காலை பாண்டி தனது கையை முட்டுக்கொடுத்துத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தார். பரமன் வந்தால் தான் நாற்காலியை சரி செய்யமுடியும். அவன்  வரும்வரை பிடித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று தெருவைப் பார்த்தார். தெருக்காரர்கள் யாரும் வாசல் தெளிக்கவில்லை. கதவை திறந்து வைத்து பேசிக்கொண்டிருந்ததை அவர் பார்த்தார். சின்னத்தாயிடம் துக்கம் விசாரிப்பதற்கு சில பெண்கள் வரத்தொடங்கினர்.

பரமன் வந்து நாற்காலியைப் பார்த்துவிட்டுப் போனான். வீட்டிலிருந்து மரச்சக்கைகளையும், முக்கால் இஞ்ச் ஆணியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு வந்தான். உடைந்து தனியாக இருக்கும் காலையும், நாற்காலியில் தொடுத்திக்கொண்டிருந்த காலையும் பொருத்தினான். கொண்டு வந்த சக்கைகளை இரண்டு பக்கமும் கொடுத்து ஆணி அடித்தான். நாற்காலி நின்று கொண்டது. ஆணி அடித்த பக்கம் தூக்கிக்கொண்டும் மற்ற மூன்று பக்கங்களும் இறங்கிக்கொண்டிருந்தது. நாற்காலி சாய்மானமாக ஆடத்தொடங்கியது. பரமன்  சக்கைகளையும் ஆணியையும் பிடுங்கி விட்டு காலை மறுபக்கம் திருப்பி வைத்தான்.

சக்கையை வைத்து அடித்தான். முட்டு கொடுக்காமல் நிற்காது என்று செங்கக்கல்லையும் இரண்டு சல்லி கல்லையும் எடுத்துக்கொண்டு வந்து ஆப்புக்கொடுத்து நாற்காலியை நிறுத்தினான். ஒரு வழியாக நின்றது.

தொப்பையா ஆசாரிக்கு மாலை எதுவும் போட்டிருக்க-வில்லை. பத்தி சூடம் காட்டி

சாமி கூட இன்னமும் கும்-பிட்டிருக்க-வில்லை. சின்னத்-தாய் கிழவி யாராவது ஏதாவது செய்வார்கள் என்று கவலையாக அமர்ந்திருந்தாள். அவளுடன் ஏலக்காய் கடையில் வேலை செய்யும் பெண்கள் பலரும் துக்கம் விசாரிக்கவென வந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண் கடையிலிருந்து காப்பி எதுவும் வாங்கிக்கொண்டு வந்து தரவா என்று கேட்டாள். அவளுக்கு அதிகாலை ஈரக்காற்றிற்கு ஏதுவாக சூடாக காப்பி குடிக்கவேண்டுமென்று தோன்றியது. அவளும் சரி என்று சொன்னாள். அவள் காப்பி வாங்கிக்கொண்டு வர கடைக்குப்போனாள்.

சென்றாயனும், முத்தையாவும் வெள்ளை காகிதத்தோடு கேதம் வீட்டிற்கு வந்தார்கள். ஆண்கள் அமர்ந்து கொள்வதற்கென பெஞ்சு போட்டிருந்த இடத்தில் அவர்கள் அமர்ந்து கட்டை வரி வசூலிக்க ஆரம்பித்தனர். பிள்ளையார் சுழி போட்டு முதலில் பாண்டிஆசாரி ஐந்து ரூபாய் எழுத ஆரம்பித்தார். பிறகு ஒவ்வொருவராக எழுதினார்கள்.

தகவல் தெரிந்து விசாரிக்க வந்தவர்கள் தொப்பையாவின் முகத்தைப் பார்த்துவிட்டு கட்டை வரி எழுதினார்கள். மாலை வாங்கவும் பன்னீர் பாட்டில் வாங்கவும் பணம் சேர்ந்ததும் ஆளை அனுப்பினார்கள். தேருக்கு பணம் சேர்ந்த-தும் ரசீது எழுத ஆள் அனுப்பலாம் என்று பாண்டி சொன்னார். ஏற்கனவே கட்டாணி முத்துவேல் ஆசாரிக்கு ரசீது எழுதியிருப்பதாக சங்கத்தில் சொன்னதை அவர் மறக்கவில்லை. ஆட்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள்.

மேலத்தெருவிலிருந்து வந்தவர்கள், “முத்துவேலு வீட்டிற்குப் போயிருந்தோம். அங்கே தான் தொப்பையா இறந்து போனதை சொன்னாங்க. அதுதான் ஒருஎட்டு விசாரி-ச்சிட்டுப்போவோம்முன்னு வந்தோம்” என்றார்கள். அவர்கள் யாரும் கட்டைவரி தரவில்லை. இத்தனைக்கும் வெள்ளைக் காகிதத்தை இரண்டு தடவை ஆட்டி ஆட்டி வேறு முத்தையா காட்டினான். அவர்களில் ஒருவர், “முத்து-வேலுக்கு கொண்டு வந்த பணத்தை தந்துட்டோம். இங்கேயும் கட்டைவரி வசூலிப்பாங்கன்னு தெரியலை. மயானத்திற்கு வரும் போது வரி தர்றோம்” என்று

சொன்னார். பாண்டியும் அதுக்கென்ன பரவாயில்லை என்றார்.

வெயில் முகத்தில் அடித்தது. கிழவி கிறங்கிப் போயிருந்-தாள். விடிந்திருந்த சமயத்தில் குடித்த காப்பி. உடலில் தெம்பில்லை. நாக்கு வறண்டு உதடு காய்ந்து போயிருந்தது. அதோடு தான் வந்தவர்கள் கேட்பதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒவ்வொருவருக்கும் முதலிலிருந்து தொப்பையா கடையிலிருந்து வந்து குளித்து விட்டு கோமணத்தை கழட்டி காயப் போட்டதில் தொடங்கி, ரசந்துவையல் சோறு சாப்பிட்டு பழமை பேசியதைத் தொட்டு விலாவரியாக பேசிப் பேசி அவளுக்கு மயக்கம் உண்டாகியிருந்தது. மயக்கத்தோடு தான் பேசிக்கொண்டிருந்தாள்.

பாண்டிக்கு கக்கூஸ் போக வேண்டுமென்று தோன்றியது. வெளியே சென்று வருவதற்கு ஒரு மணிநேரமாகும். வெளியே போய்விட்டு அப்படியே பல்லை விளக்கி இரண்டு மூன்று இட்டிலியைப் பிய்த்து வாயில் போட்டுக்-கொண்டு வரலாமென்று நினைத்து எழுந்து நடந்தார். அவருக்கு பின்பாக ஐந்தாறு ஆட்கள் எழுந்து தெருவை கடந்து போனார்கள். பந்தலடியிலிருந்த கூட்டம் கலையத்-தொடங்கியது. சென்றாயல் தேருக்கு பணம் சேர்ந்து விட்டது என்று சொல்லி ரசீது போட சங்கத்திற்கு சென்றான்.

“என்னா சென்றயாலு, தேரு வந்ததும் எடுத்திரலாமில்லே. குளிகை இன்னைக்கு எத்தனை மணிக்கு”

“மாலையே சேரலை அண்ணே. தேருக்கு குறைஞ்சது பத்து மாலையாவது வேணும். கதம்பம் அஞ்சாறு பந்து வேணும். மொட்டையா தேரை எப்படி இழுத்துட்டு போவீங்க.

வயசான ஆளு. ஒரு வெடி வேண்டாமா. முச்சந்தியிலே ஒரு வெடி போடணும்” என்றான்.

“சரிடா அதுக்கு நான் என்ன செய்யுறது. உன்னய மாதிரி தான் நானும். ஏங்கிட்டே எது பணம். கடைசியிலே ஐம்பது ரூபாய் இல்லே நூறு ரூபாய் தரலாமுன்னு வைச்சிருக்கேன். மயானத்திலே கூடியிருக்கிறவங்க முன்னாடி பணத்தை கொடுத்தாதானே என்னையே அவங்க மதிப்பாங்க” என்றார்.

“இப்போ ஆகிறத பாருங்க அண்ணே. செட்டியார்

சங்கத்திலே சொல்லித்தான் அனுப்பியிருக்காங்க. முப்பது ரூபாய் ரசீது போடுவாங்க. பணம் தரணும். சங்கு ஊதுறவன் ராத்திரியிலிருந்து அனத்திட்டு இருக்கான். பணம் தரணும். குழி வெட்டுறவன் இப்போ வந்துருவான். முத்துவேலுக்கு வெட்டப் போகும் போது நாமளும் பணத்தை தரனும். இல்லை இந்த பக்கம் வரவேமாட்டான். சாராயத்தை ஊத்திட்டுப் படுத்திருவான். வெட்டுறதுக்கு வேற ஆளை பாக்கனும். அவன் நீளம் குறைச்சு ஆழம் இல்லாமல் வெட்டுவான். பிறகு தகராறு வரும்”

  “குழி வெட்டுறதுக்கு எவ்வளவு தரனும்”

  “அவன் கேட்குறது தான். பேரமெல்லாம் பேசமுடியாது”

  “சரி வீட்டிலே போய் எடுத்துட்டு வாரேன்”

அவர்கள் எழுந்து நடந்தார்கள். இருவரும் தெரு முக்கிலி-லிருந்து பிரியும் போது முத்தையா சத்தமாக அழைத்-தான். பாண்டியும் சென்றாயலும் திரும்பிப் பார்த்-தார்கள். அவன் சின்னத்தாய் கிழவியின் அருகில் நின்றிருந்தான். கிழவி தொப்பையாவின் கால்மாட்டில் விழுந்து கிடந்ததை அவர்கள் பார்த்ததும் வேகமாக எட்டு வைத்து ஓடிவந்தார்கள். தூரத்திலிருந்து பார்க்கும் போது சின்னத்தாய்கிழவி மரநாற்காலியின் ஒடிந்த கால்களைப் பிடித்தபடி மயங்கி வீழ்ந்து கிடந்தது தெரிந்தது.

(அந்திமழை செப்டம்பர் 2012 இதழில் வெளியான சிறுகதை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...