அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஈழத் தமிழருக்காக இனி நாங்கள் செய்யப் போவது....- திருமாவின் பிரத்யேக பேட்டி

Posted : சனிக்கிழமை,   மே   23 , 2009  23:33:25 IST

*தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் இயக்கத்தின் இலக்கும் அழிக்கப்பட்டுவிடவில்லை..

*ஈழ பிரச்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு ..


இரண்டு முறை பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு,வெற்றி பெற்று தலைநகர் செல்ல இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் களப்பணியாளர்.மத்திய அரசின் பதவியேற்பு விழாவிற்கு டெல்லி செல்ல வேண்டிய வியாழனன்று(21/05/2009) காலை வேளைச்சேரியிலுள்ள 'தாய்மண்' அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம்,மதியம் சில சந்திப்புகள் என சக்கரமாக சுற்றிக்கொண்டிருந்தவர்,வேளச்சேரியிலிருந்து அடுத்த சந்திப்புக்கு இடையிலான கார் பயணத்தின் போது அந்திமழைக்காக அளித்த பிரத்யேக நேர்காணல்....


* மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு முதல் முறையாக இப்போது வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? மூன்று தேர்தல்களும் உங்களுக்கு எப்படி இருக்கிறது?

முதல் முறையாக சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 99ம் ஆண்டு தேர்தலில் மூப்பனார் தலைமையிலான மூன்றாவது அணி சார்பில் போட்டியிட்டேன்.அப்போது, 2.25 லட்சம் வாக்குகள் பெற்றேன். 2004 தேர்தலில் சிறு கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்தன. அப்போது, 2.57 லட்சம் வாக்குகள் பெற்றேன். இந்தத் தேர்தலில், முதல் முறையாக ஆளும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு வைத்து, போட்டியிட்டேன். இதில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 516வாக்குகள் பெற்றிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருக்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ள தலித் வாக்கு வங்கி அப்படியே எங்களுக்கு கிடைத்துள்ளது. எனினும் தலித் அல்லாத ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளும் எனக்குக் கிடைத்துள்ளன. இவை கூட்டணி பலத்தால் கிடைத்தவை. கட்சி பலத்துடன் கூட்டணி பலமும் இணைந்ததால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக, இசுலாமியர், கிறிஸ்தவர், தலித் அல்லாதவர்கள் இந்த முறை ஏராளமாக வாக்களித்துள்ளனர்.

பிரச்சாரத்தின்போது, பாமகவினர் சாதி உணர்வைத் தூண்டிப் பார்த்தனர். வன்முறை செய்ய முயற்சித்தனர். திருமாவளவன் வெற்றிபெற்றால், பிசிஆர் வழக்குகளைச் சந்திக்க வேண்டிவரும், சாதிக் கலவரம் வரும் என்றெல்லாம் பாமகவினர் அவதூறு செய்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி வன்னியர் சமூகத்தினர் எனக்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் உருவாக்கம் முதல் தீவிரமாகச் செயல்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, திடீரென ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளதே?இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து வெளியேறிவிட்டீர்களா?


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறியதாகவோ வெளியேற்றப்பட்டதாகவோ எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால்,இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் செயல்பட்ட பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டன. தற்போதுள்ள அரசியல் சூழலில் அவர்களுடன் இணைந்து செயல்படுவது இயலாத நிலை ஆகிவிட்டது. எனவே, திராவிடர் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகியவற்றுடன் இணைந்து ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தை உருவாக்கி இருக்கிறோம்.


* இந்த புதிய இயக்கத்துக்கான உருவாக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் முன்மொழிந்ததா?


இல்லை. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிதான் முன்மொழிந்தார். ஈழத் தமிழர் என்பதற்கு இங்கு முக்கியத்துவம் உண்டு. ஈழ விடுதலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயரிடப்பட்டது. இப்போது, எங்களிடையே அத்தகைய முரண்பாடு எதுவும் இல்லை. எனவே, ஈழத் தமிழர் என்ற பெயரில் சிக்கல் இல்லை.


* தமிழீழ விடுதலைப் புலிகள் ராணுவரீதியான தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற நிலையில், ஈழத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலம், சிங்களப் படையினரால் பறிக்கப்பட்டுவிட்டது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இயக்கமும் இயக்கத்தின் இலக்கும் அழிக்கப்பட்டுவிடவில்லை. அந்த விடுதலை இயக்கம் மீண்டும் வீரியத்தோடு எழுச்சி பெறும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் துணையுடன், உலக அளவிலான போர் மரபையும் மீறி சிங்களப் படையினர் நடத்திய தாக்குதலால், இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் விடுதலை வேட்கை கொண்ட விடுதலைப்புலிகள், புதிய வியூகத்துடன் போரைத் தொடருவார்கள் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது.


* பிரபாகரனைச் சந்தித்து அவருடன் உரையாடியவர் நீங்கள்.இப்போது அவரைப் பற்றி வரும் செய்திகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

உலகில் எவரோடும் ஒப்பிடமுடியாத அறிவும் ஆற்றலும் நிறைந்த மாவீரர். ஒருபோதும் எதிரிகளிடம் மண்டியிட்டுவிடக் கூடாது என்பதிலும் கடைசிவரை போராடியே உயிர்விட வேண்டும் என்பதிலும் அவர் மிகவும் உறுதியானவர். இதேபோல, எதிரிகளுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையும் அறவே இல்லாதவர். அவரோடு நெருங்கிப் பழகியதில் நான் அறிந்துகொண்ட அவரின் தனிப்பண்புகள் இவை.

முன்னுக்குப் பின் முரணான தகவல்களை சிங்களப் படையினர் தெரிவிக்கின்றன. அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்தகட்டப் பாய்ச்சலுக்காக் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.

100 மீ இடைவெளிவரையில் எதிரிகள் நெருங்கிவரும் வரையிலும் எதிர்த்துப் போராடி இருக்கிறார் என்பது உலகம் அறிந்த உண்மை. மண்ணைவிட்டும் மக்களைவிட்டும் வெளியேறும் மனநிலை இல்லாதவர். இதன் அடிப்படையில்தான் 25 ஆண்டுகளாக களத்திலேயே நின்று போராடி வருகிறார். ஆகவே, அவர் உயிருக்கு அஞ்சி எங்கும் வெளியேறியிருக்க வாய்ப்பு இல்லை.


* ஈழத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலுக்கு மத்திய காங். கூட்டணி அரசு உதவுவதாகக் கூறுகிறீர்கள். மத்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள நீங்கள், அரசின் அணுகுமுறையில் எந்தவித மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டுத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்திய அரசுக்கும் உலக நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துவந்தனர். போராடிப் பார்த்தனர். கெஞ்சிப் பார்த்தார்கள், மன்றாடினார்கள். ஆனால், மனிதாபிமான அடிப்படையில்கூட இந்திய அரசும் உலக நாடுகளும் போரை நிறுத்த முன்வரவில்லை. இது சகித்துக்கொள்ள முடியாத வேதனையாகும். இந்திய வெளியுறவுத் துறையில் உள்ள அதிகாரிகள்தான் இந்த அணுகுமுறைக்குக் காரணம். இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வரவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டுசெல்வேன்.


* ராணுவரீதியில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ள ஒரு நிலையில், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றி உலக அளவில் பேசப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஈழத் தமிழருக்கு சம உரிமை என்பது சிங்கள இனவெறியர்களின் ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்படும் உரிமையாகும். அது உண்மையான நியாயமான தீர்வாக இருக்கமுடியாது. தனித் தமிழ் ஈழம்தான் நிலையான அமைதியான தீர்வாக இருக்கமுடியும். ஆகவே, இந்தப் பிரச்னையில் தலையிடும் நாடுகள், தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபடவேண்டுமே தவிர, சம உரிமை என்னும் பெயரில் தமிழ்ச் சமூகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு பின்னோக்கி இட்டுச் செல்லக்கூடாது. இதை ஏற்கமுடியாது.


* போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசு ரூ. 600 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது முறையாக ஈழத் தமிழர்களுக்கு போய்ச்சேரும் என நினைக்கிறீர்களா?


ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுக்குரிய நிதியுதவியை சிங்கள ஆட்சியாளர்கள் மூலம் வழங்கினால், அது முறையாகவும் சரியாகவும் அவர்களைச் சென்றடையாது. ஐநா அவை போன்ற சர்வதேச அமைப்புகள் மூலமாக மறுவாழ்வுக்கான நிதியுதவியை வழங்கவேண்டும்.


* இனிமேல் இந்திய அரசை நோக்கி எந்தக் கோரிக்கையையும் வைக்கப்போவதில்லை; ஐநா அவையிடம்தான் கோரிக்கைவைப்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. நீங்களும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?


நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழச் சிக்கலில் இந்திய அரசின் தலையீடு தவிர்க்கமுடியாததாக உள்ளது. எனவே, இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கவேண்டியது நம்முன்னால் இருக்கும் சிக்கலாக உள்ளது. இந்த நிலையில், இந்திய அரசைப் பகைத்துக்கொண்டு, எதிர்ப்பதாலோ விமர்சிப்பதாலோ எந்தப் பயனும் இல்லை. மாறாக, எமது நிலைப்பாட்டை இந்திய அரசுக்கு எடுத்துச்சொல்ல ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசைச் செயல்படவைப்பதுதான் பயனுள்ளதாக அமையும். இதை ஒரு நடைமுறை உத்தியாகவும் கருதுகிறேன். வேறு வழியில்லை.

நேர்காணல் :கதிர் & கௌதமன்
புகைப்படம் :கௌதமன்

(எம்.பி.யான பின் திருமாவின் முதல் பேட்டி இது.)


திருமா பயோடேட்டா : அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் 1962ம் ஆண்டில் பிறந்த திருமாவளவனுக்கு இப்போது 47 வயது. வேதியியலில் இளநிலைப்பட்டம், குற்றவியலில் முதுநிலைப் பட்டம், சட்டத்தில் இளநிலைப் பட்டம் முடித்தவர். தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் அறிவியல் உதவியாளராக 88ல் பணியில் சேர்ந்தவர், சிதம்பரம் நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுவதற்காக, 99ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விலகினார். 80களில் மாணவர் பருவத்தில் பொது வாழ்க்கையைத் தொடங்கியவர். 2001-ல் திமுக அணியில் மங்களூர் சட்டமன்ற உறுப்பினரானவர், அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் தன்மதிப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி, அந்தப் பதவியிலிருந்து விலகினார். 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர், இந்த தேர்தலின் மூலம், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...