அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா - மு.கருணாநிதி

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   20 , 2012  01:16:43 IST

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் " மறைந்தவர்களான முரசொலி மாறனும், கே.ஜி.ராதாமணாளனும், க.திருநாவுக்கரசும் எழுதிய திராவிட இயக்க வரலாறு எனும் நூலுக்கான முகப்புரையின் முதலாவது அத்தியாயத்தில் மாறன் எழுதியது பின் வருமாறு:-

1912-ஆம் ஆண்டு. சென்னை நகரில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் சிலர், தாங்கள் பிராமணர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்தாலேயே உத்தியோகத் துறையில் புறக்கணிக்கப் பட்டதையும், பதவி உயர்வு போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையும் உணர்ந்து, மனம் புழுங்கிக் கலந்துரையாடவும், இணைந்து செயல்படவும், ஒன்றுபட்டுத் தங்கள் குறைகளை எடுத்துரைக்கவும் 1912ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

அந்த அமைப்பிற்கு வழிகாட்டியாகவும், துணையாகவும் இருந்தவர் அப்போது சென்னையில் சிறந்த டாக்டர்களில் ஒருவராக விளங்கிய நடேசனார் ஆவார். அவர்தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். அவரே அந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்து அரும்பணியாற்றினார்.

முதன்முதலாக அவர்கள் ஏற்றுக் கொண்ட சமுதாயப் பணி முதியோர் கல்வியாகும். அதன் உறுப்பினர்களாக இருந்த அரசு ஊழியர்களே தங்களது மாலை நேர ஓய்வு காலத்தை இந்தப் பணிக்குச் செலவிட்டனர். ஆண்டுதோறும் பல்கலைக்கழகப் பட்டம் பெறும் பிராமணரல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு நடத்தி, அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி, அவர்களது சமுதாயக் கடமையை நினைவுறுத்துவதும் அந்த அமைப்பின் பணிகளில் ஒன்றாக இருந்தது.

1913ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் கின் முதலாவது ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் டாக்டர் நடேசனாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்னும் பெயரை "திராவிடர் சங்கம்" என்று மாற்றுவதென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் அந்தச் சங்கம் இயக்கிவிட்ட உணர்வுகள் திராவிட இயக்கம் என்று பெயர் பெறலாயின. 1914ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி உயர்நிலைப்பள்ளி ஒன்றின் மாடியில் உள்ள கூடத்தில் திராவிட சங்கத்தின் முதலாண்டு நிறைவுவிழா நடைபெற்றது.

சுமால்காஸ் கோர்ட்டுகளின் பிரதம நீதிபதியாக இருந்த சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் டி.எம். நாயர் சிறப்புரையாற்றினார். கூடியிருந்த மாணவர்களும், அரசு ஊழியர்களும் என்றும் நினைவுகூரத்தக்க அரியதோர் உரையை அவர் ஆற்றினார். இளைஞர்கள் துணிவு பெற வேண்டுமென்றும், தங்கள் குறைபாடுகளைத் தைரியத்துடன் எடுத்து வைக்க வேண்டுமென்றும், அந்த அமைப்பின் தேவையைப் பொதுமக்கள் உணருமளவிற்கு அதை வலுவுள்ளதாக்கப் பாடுபட வேண்டுமென்றும் அவர் வற்புறுத்தினார்.

பிராமணரல்லாத சமூகத்தினர் சென்னை மாகாணப் பொது வாழ்வில் தங்களுக்குரிய இடத்தைப் பெற வேண்டுமானால் திராவிடர்கள் அனைவரையும் அமைப்பு ரீதியில் ஒன்று சேர்க்க வேண்டும்; திராவிடத் தாய் மொழிகளில் கற்பிக்கும் தேசியக் கல்லூரியைத் துவக்க வேண்டும். இத்தகைய உண்மைப் படப்பிடிப்பைக் கொண்ட பிரசுரங்கள், படித்த பிராமணரல்லாதாரிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்தன.

தம்பி முரசொலி மாறனின் இந்தப் புத்தகத்திலிருந்தும், தம்பி சுப. வீரபாண்டியன் ஆற்றிய தொலைக்காட்சி உரையிலிருந்தும் நடேசனார் தொடங்கிய அந்த திராவிடர் சங்கம் தான் இன்றைக்கு வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதிக்கெல்லாம் அடித்தளம் போன்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அந்த உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய நமது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு முழுவதும் தமிழர்களாகிய, திராவிடர்களாகிய நாமனைவரும் கொண்டாட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

எனவே, திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டுவிழா தி.மு.க. சார்பில் இந்த ஆண்டு தொடங்கி 2013-ஆம் ஆண்டு வரையில் சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். திராவிட இயக்கம் வளர்த்த பெரியவர்களின் பெருமைகளை எல்லாம் அந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் நாம் பேசவேண்டும். இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...