அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலக்கிய எழுத்துகளுக்குச் சுவாரசியம் எதிரானது?! - கவிஞர் சுகுமாரன்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   02 , 2010  00:05:10 IST

அண்மையில் வாசித்த புத்தகங்களில் என்னை மறந்து வாசித்த புத்தகம் க. சீ.சிவகுமாரின் உப்புக் கடலைக் குடிக்கும் பூனை. இந்தத்
தொகுப்பில் நாற்பத்தொரு கதைகள் இருக்கின்றன. இதில் இருபத்தியோரு கதைகளை வாய் விட்டுச் சிரித்துக்
கொண்டும் பதினொரு கதைகளை சத்தம் வராமல் சிரித்துக்கொண்டும் பத்துக் கதைகளைப் புன்னகைத்துக் கொண்டும் வாசித்து முடித்தேன். குறைந்தபட்சம் ஒரு சின்னப் புன்னகையை வரவழைக்காத ஒரு வரி கூட இல்லாமல் இந்தத் தொகுப்பில் ஒரு கதையும் இல்லை. அந்த அளவுக்குச் சுவாரசியமானது இந்தத் தொகுப்பு. அந்த அடிப்படையில் க. சீ.சிவக்குமாரை இன்றைய இலக்கிய அர்த்தத்தில் பின் நவீனத்துவர் என்று சொல்லலாம்.
இலக்கிய எழுத்துகளுக்குச் சுவாரசியம் எதிரானது என்ற கருத்து தீவிர இலக்கிய வட்டங்களில் நிலவி வந்தது. இலக்கியத்தின்
மீதாகக் கொண்டிருந்த ஒரு புனிதப்படுத்தலின் சார்பாக உருவான அபிப்பிராயம் இது. ஆனால் அதைத் தாண்டி தீவிரமான
படைப்புகள் பலவும் சுவாரசியமானவையாகவும் நகைச்சுவையோ அங்கதமோ தொனிப்பதாகவும் இருந்திருக்கின்றன. புதுமைப்
பித்தன், சுந்தர ராமசாமி முதல் அ.முத்துலிங்கம் வரையான முக்கியமான படைப்பாளிகளின் எழுத்துக்களில் சுவாரசியம் ஓர் அம்சம். ஆனால் அந்த எழுத்துக்கள் ஆழமானவை. இதன் மறு பதிப்பாக ஆழமில்லாமல் வெறும் சுவாரசியத்தை மட்டுமே முன்னிருத்திய
எழுத்துகளும் இருந்திருக்கின்றன. அவை வணிக இதழ்களின் கேளிக்கைத் தேவையை நிறைவேற்றியிருக்கின்றன.இன்று தீவிர இலக்கியமும் முன்னை விட அதிகமான வாசகப் பரப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவை தானாகவே உருவாகியிருக்கிறது.
பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் மட்டுமல்லாமல் இ¨ணைய தளங்களிலும் இலக்கியம் விவாதிக்கப்படுகிறது. படிக்கப்
படுகிறது. அதனால் ஒரு படைப்பு சுவாரசியமான வாசிப்புக்குரியதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைப்
பின் நவீனத்துவப் போக்கு என்று சொல்லலாம். அந்த அர்த்தத்தில் சிவக்குமாரை பின் நவீனத்துவர் என்று அழைக்கலாம் என்று
தோன்றுகிறது.

சிவக்குமாரின் எழுத்தின் முதன்மையான அம்சம் அதன் சுவாரசியம். நகைச்சுவையான நடையாலும் எதார்த்தத்தின் மீது உருவாக்கும்
அங்கதத்தாலும் மனிதர்களின் நடவடிக்கைகளைப் பகடி செய்வதன் மூலமும் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறார். இந்த சுவாரசியம்
காரணமாகவே அவருடைய எழுத்துகள் வெகுசன இதழ்களிலும் உவப்புடன் வரவேற்கப்படுகின்றன. இதில் சிவக்குமாரைக்
காத்திருக்கும் ஆபத்து எப்போதும் சுவாரசியத்தை மட்டுமே தரக் கூடியவராக தன்னை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது
என்பது. இருபத்தி நான்கு மணிநேரமும் ஒப்பனையுடன் இருக்க வேண்டிய கோமாளியாகத் தன்னை ஆக்கிக் கொள்வது
என்ற நிர்ப்பந்தம். இதையும் சிவக்குமார் சுய எள்ளலுடன் செய்து விடுவார் என்றே நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் சிவக்குமார் சிரிக்க வைக்கிற சீரியசான கதைகளையும் சீரியசான சிரிப்புக் கதைகளையும் சீரியசான கதைகளையும் எழுதியிருக்கிறார். சிரிக்க மட்டுமே வைக்கிற கதைகளை அவர் அநேகமாக எழுதவில்லை.

ஒருநாள் என்ற கதை சிரிக்க வைக்கிற சீரியசான கதை. முதல் தேதி சம்பளம் வாங்கி வீட்டுக்கு வரும் வழியிலேயே கடன்களைப் பட்டுவாடாச் செய்கிறான் சுந்தரம். வீடு வந்து மிச்ச சம்பளத்தை மனைவியிடம் கொடுக்கிறான். மளிகைக் கடை பாக்கியைத் தீர்த்து விட்டதாகச் சொல்கிறான். மனைவிக்குக் கோபம் பொத்துக்கொள்கிறது. என்ன சமாதானம் பண்ணினாலும் அடங்காத கோபம்.
விசாரித்தால் காரணம் சொல்கிறாள். 'நீங்களா தினமும் கடைக்குப் போறீங்க. முப்பது நாளும் அவரு தர்றத கையேந்தி வாங்கறோம். ஒருநாள் அவரு கை கீழேயிருந்து நான் காசுதரக் கூடாதா?' இதைப் படித்து விட்டு எப்படி சிரிக்காமலிருக்க?

'சங்கிலி' சீரியசான சிரிப்புக் கதை. கல்லூரித் தோழியின் தங்கச் சங்கிலையை அடகு வைக்கிறான் சக தோழன். அதை மீட்க முடியாமலே போகிறது. கடைசியில் அதை எப்படியோ மீட்டுத் திருப்பிக்கொடுத்து விடுகிறான். எப்படி? இன்னொரு தோழியின்
சங்கிலியை வாங்கி அடகு வைத்துத்தான். இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டிருக்க வைத்து விட்டு கடைசியில் 'அடப்பாவி' என்று சிரிக்கவைக்கிறது.

'வீடு' என்ற கதை சீரியசான கதை. சரியப் போகிற வீட்டை அப்பாவும் பிள்ளையும் சரிப்படுத்தப் பார்க்கிறார்கள். அதற்கான
பணத்துக்காக அல்லாடுகிறார்கள். அப்பாவின் தந்திரம் அல்லது உலக ஞானம் மகனைப் பணயமாக்குகிறது. அவனையே கடன்
வாங்கச் செய்கிறார். அவனையே பாங்கில் லோன் போடச் செய்கிறார். இந்த இக்கட்டை அல்லது உறவின் முரணை எந்தவித
அலட்டலும் இல்லாமல் சொல்கிறார் சிவக்குமார்.

சிவக்குமாரின் எழுத்துச் சுவாரசியத்துக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகின்றன. ஒன்று - பொதுமனப் பாங்கு
காபந்து பண்ணி வைத்திருக்கும் கருத்துக்களையும் பழக்கங்களையும் சிரித்துக்கொண்டே தகர்க்கிற விளையாட்டுத்தனம்.
'வெள்ளிக் கருக்கமேடு' போன்ற கதைகளில் இதைக் காணலாம். இரண்டாவது - அவருடைய நடை. கொஞ்சம் நகைச்சுவை,
கொஞ்சம் பகடி, என்று இயங்குகிற நடை. இந்த நடைக்குள் சமகாலத் தமிழ் வாழ்க்கையில் இடம் பெறும் சகலத்தையும்
சொருகிவிட முடிகிறது. புலமை சார்ந்த வழக்குகள், நாட்டார் பிரயோகங்கள், ஊடக மொழி, ஏன், ஆட்டோ ரிக்ஷாவின் முதுகில்
எழுதப்படும் வாசகமும் கூட சிவக்குமாரின் நடைக்குக் கச்சாப் பொருளாகின்றன.

எந்தெந்த மனிதர்கள் எப்படியெப்படியிருக்கிறார்களோ அப்படியப்படியே சித்தரிக்க விழைகிறார் சிவக்குமார். அவர்களுடைய
எல்லாச் செய்ல்களுக்குப் பின்னாலும் இருக்கும் மானிடக் கிறுக்கை வெளிப்பட்டுத்துவதில்தான் அவர் அக்கறை காட்டுகிறார்.

இந்தத் தொகுதியிலுள்ள நாற்பது கதைகளையும் படித்து முடித்திருக்கிறேன். முன்பே சொன்னதுபோல தன்னை மறந்து சிரிக்கவும்
புன்னகைக்கவுமான சந்தர்ப்பங்களை இவை தந்திருக்கின்றன. ஆனால் அந்த வாசிப்புக் கணத்துக்குப் பிறகு இவை மனதில்
எந்த அழுத்தமான உணர்வையும் மிச்சம் வைப்பதில்லை. ஒருவேளை இதுவும் பின் நவீனத்துவ இயல்பாக இருக்கலாம். மனித
இயல்பில் நகைச்சுவை அற்ப ஆயுள் கொண்டது என்பதும் காரணமாக இருக்கலாம். உங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த
ஒரு துணுக்கு இரண்டாவது முறை உங்களுக்கு அதே உணர்ச்சியைக் கொடுப்பதில்லை. ஏனெனில் அந்தத் துணுக்கின் ஆழம்
உங்களுக்கு ஏற்கனவே தெரிந்து விட்டதுத்தான். சிவக்குமாரின் இந்தக் கதைகளில் சிலவற்றில் அந்த ஆழம் உள்ளது. 'குளிரெழுத்தின்
வண்ணங்கள்' அப்படியான கதை. மேலும் மேலும் விரியும் ஆழத்தைக் கொண்ட கதை. ஆனால் பல கதைகளில் அந்த ஆழத்தை
எட்டுவதற்குள் சிவக்குமார் கதையை முடித்து விடுகிறார். இதை அவருடைய குறையாகச் சொல்லலாம். அல்லது அவருடைய
தன்னியல்பாகவும் இருக்கலாம். கதைகளுக்கு அப்பால் எனக்கு அறிமுகமாகியுள்ள சிவக்குமாரும் சுவாரசியமானவர்தான்.
சித்தம்போக்காகச் செயல்படுகிற சிவன். அந்த சிவனுக்கு வாழ்த்துகள். வாய்ப்பளித்த வம்சி பதிப்பகத்துக்கும் உங்களுக்கும்
நன்றிகள்.

க. சீ.சிவகுமாரின் 'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை' புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் சுகுமாரன் வாசித்த கட்டுரை


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...