அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சத்யஜித்ராயின் காதல்.. - கவிஞர் சுகுமாரன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2010  12:11:34 IST

தமிழ்நதியின் குறுநாவல் 'கானல்வரி'யை வாசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இன்னொரு புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றை யொன்று நினைவுபடுத்தும் வாசிப்பு. வங்காள சினிமாவில் பிரபலமாக இருந்த ஒரு நடிகையின் குறிப்பு அது.


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அந்த நடிகை. நாடகங்களிலும் நடித்து வந்தவர்.பின்னர் வங்காள சினிமாவின் மறுமலர்ச்சி இயக்குநர்களில் ஒருவரான மிருணாள் சென்னின் படத்தில் நடித்தார். தொடர்ந்து இன்னொரு சாதனையாளரான ரித்விக் கட்டக்கின் படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டு முக்கியமான படங்கள். இரண்டு முக்கியமான இயக்குநர்கள். இந்த வாய்ப்பு அவரை உலகத்தை மாற்றுப் பார்வையில் பார்க்கச் செய்தது. குறிப்பாகப் பெண்களின் நிலைமை பற்றி யோசிக்க வைத்தது. மூன்றாவதாக அவருக்குக் கிடைத்தது சினிமாவின் ஆகப் பெரிய கலைஞரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு. படப்பிடிப்புத் தொடங்குவற்கு முன்பே படத்தின் திரைக்கதைப் பிரதியை நடிகையிடம் படித்துக் காட்டினார் இயக்குநர். He read me the entire story. I was stunned. This was the first woman-centered screenplay I had encountered. I was not going to play second fiddle to the main male character as in all plays and films I had acted in or was familiar with. (p.20)


இரண்டு விஷயங்கள் நடிகைக்குப் புலப்பட்டன. சுயமாக யோசித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் பெண்ணின் பாத்திரம். தானும் இந்தப் பாத்திரமும் வேறல்ல என்று தோன்றியது. படத்தில் அந்தத் தன்னம்பிக்கை வெளிப்படவும் செய்தது. இது முதல் விஷயம். இவ்வளவு மரியாதையாகப் பெண்ணை சித்தரிக்கும் இயக்குநர் மீது காதலும் கனிந்தது. இத்தனைக்கும் அவர் நடிகையை விடவயதில் துல்லியமாக இரு மடங்கு மூத்தவர். காதலுக்குதான் வயது கிடையாதே. இயக்குநரும் காதலித்தார். இது இரண்டாவது சங்கதி. இயக்குநர் அடுத்த படத்தின் மையப் பாத்திரமாக அதே நடிகையைத் தேர்ந்தெடுத்தார். அதற்கு நடிகையின் திறமை என்பதோடு அவர் மீதிருந்த காதலும் காரணம். அதிருஷ்வசமாக அந்தப் படத்துக்கான கதையும் காதலை மையப்படுத்தியதுதான். தாகூரின் 'சிதைந்த கூடு' என்ற குறுநாவல். தனிமையிலேயே வாழ விதிக்கப்பட்ட நுண்ணுர்வுள்ள ஒரு பெண் அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிற மைத்துனன் மேல் காதல் கொள்கிறாள். பொதுவாகவே வங்காளப் புனைகதைகளில் வரும் அண்ணிகள் பேரழகிகள். மைத்துனர்களால் காதலிக்கப்படவே ஜென்மமெடுத்தவர்கள். சமூக கட்டுப் பாடுகளும் குற்ற உணர்வும் ஏற்பட அந்தக் காதல் அவசரமாக முடிந்து போகிறது. தாகூர் தன்னுடைய சொந்த அனுபவத்தைச் சொன்ன குறுநாவல். ரவீந்திரருக்கும் அவருடைய அண்ணன் ஜோதீந்திரநாத்தின் மனைவி காதம்பரிக்கும் இடையில் நிலவிய நேசத்தைச் சொன்ன படைப்பு.'சிதைந்த கூடு' குறுநாவலின் திரைவடிவம் மிகப் பெரும் கலைப்படைப்பாகக் கொண்டாடப்பட்டது. கதா பாத்திரங்களுக்கிடையிலான உறவு ஆழமாகவும் உண்மையுணர்வுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. நடிகையும் இயக்குநரும் பரஸ்பர நேசத்துடன் இருக்கும்போது அது அப்படித்தானே இருக்கும். தொடர்ந்து அடுத்த படத்திலும் அந்த நடிகையே முக்கியப் பாத்திரத்தை ஏற்றார். படப்பிடிப்புப் பாதியை எட்டியபோது இந்த நேசம் எல்லாரும் மெல்லுகிற ரகசியமானது. இயக்குநரின் வாழ்வில் சலனத்தை ஏற்படுத்தியது. இந்த உறவை இயக்குநரின் மனைவி ஒப்புக் கொண்டார். ஆனால் அவருடைய பத்து வயது மகன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மகன் மீது பெரும் பாசம் கொண்ட இயக்குநருக்கு காதலிலிருந்து பின் வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. நடிகையிடம் அவர் சொன்னார். ''விலைமதிப்பில்லாத உன்னுடைய நேசத்தை நான் என் பிள்ளைக்காக விட்டுக் கொடுக்கிறேன்''.தமிழ்நதியின் நாவலிலும் அதே போல ஒரு வரி இடம் பெறுகிரது. 'விலைமதிப்பற்ற உன் காதலை நான் என் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வருமோ என்று அஞ்சுகிறேன்' என்று நாவலின் ஆண் சொல்கிறான்.இந்த ஒற்றை வரிதான் இதுவரை சொன்ன வாழ்க்கைக் கதையை இந்தக் குறுநாவலுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் செய்தது. அந்த இயக்குநர் சத்யஜித்ராய்.நடிகை மாதவி முகர்ஜி. இருவரையும் பரஸ்பரம் நெருங்கச் செய்த படம் 'சாருலதா'.உறவின் முறிவும் ராயின் அடுத்த படமான 'கா புருஷ் ஓ மகா புருஷ்' படத்தில் தெரியும். அதிலும் மாதவி முகர்ஜிதான் மையப் பாத்திரம். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தின் முதல் பகுதி கா புருஷ். அதாவது கோழை. காதலித்த பெண்ணைக் கைவிடும் கோழை. இது ராயின் ஒப்புக்கொள்ளல். ஆண் பாத்திரமான அமிதாபா ராய் ஒரு திரைக் கதை ஆசிரியன். படம் தயாரிப்பிலிருக்கும்போதே இது சத்யஜித் ராய் தன்னைப் பற்றிச் செய்துகொள்ளும் என்று விமர்சனம் எழுந்ததாக மாதவி முகர்ஜி தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார். பாத்தின் முடிவில் இன்னொருவனின் மனைவியான கருணாவை - மாதவி முகர்ஜியை - ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொல்லிக் குறிப்பு எழுதுகிறான் அமிதாபா ராய். பழைய காதல் மனதிலிருக்குமானால் தன்னுடன் வந்து விடும்படியும் சொல்லுகிறான்.கருணாவும் வருகிறாள். அவனை வழியனுப்பவோ அவனுடன் ஈனைந்து கொள்ளவோ அல்ல. அவனுடைய கோழைத்தனத்தை எள்ளி ந்கையாடுவதற்காக. பெண் என்றால் ஆணின் விளையாட்டுப் பொம்மையல்ல என்று சொல்வதற்காக. அது ராய் தனக்குத்தானே விதித்து அனுபவித்த தண்டனை என்கிறார் மாதவி. அதன் பிறகு மாதவி ஒருபோது சத்யஜித்ராயின் படத்தில் நடிக்கவில்லை.இந்தக் குறுநாவளை வாசிக்கும்போது மாதவி முகர்ஜியின் 'அமீ மாதபி' என்ற சுயசரிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'மை ஃபில்ம்ஸ் மை லைஃப் கூடவே நினைவில் ஓடிக்கொண்டிருந்தது. இந்தக் குறுநாவலின் பெண்பாத்திரமும் மாதவி என்று பெயர் சூட்டிக் கொண்டிருப்பதாலாக இருக்கலாம். கானல் வரியை நாவல் என்றோ குறுநாவல் என்றோ சொல்வதில் எனக்குத் தயக்கமிருக்கிறது. தமிழில் நாவல் என்கிற வடிவம் அவ்வளவு ஒன்றும் வறுமை கொண்டதல்ல. அவற்றை வாசித்து நாவல் பற்றிய தோராயமான திட்பத்தைக் கொண்டிருக்கும் மனதுக்கு இதை அப்படிச் சொல்லச் சன்கடமாக இருக்கிறது. தவிர நாவல் இரு வகையான காட்சிகளைக் கொண்டு இயங்குவது, ஒன்று ; நிலக்காட்சி. மற்றது மனக் காட்சி. தமிழ்நதியால் குறிப்பிடப்படும் இரண்டு எழுத்தாளர்களையே உதாரணமாகச் சொல்லலாம். மோகமுள்ளை நிலக் காட்சியாகவும் மஞ்சள் வெயிலை மனக்காட்சியாகவும் சொல்லலாம். கானல்வரியை என்னவென்று சொல்ல? ஒரு கடிதம் . மிக நீளமாக எழுதப்பட்ட கடிதம். ஒரு பெண் மனம் ஓர் ஆண் மனத்தை விசாரணை செய்யும் கடிதம். கடிதங்கள் கூட இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப் பட்டவைதானே? எனினும் தொடர்ந்து பேசுவதற்கான சௌகரியத்தின் பொருட்டு இதைக் குறுநாவல் என்றோ நாவல் என்றோ அழைக்கிறேன்.மாதவி - மௌலி இருவரும் இணையம் மூலம் அறிமுகமாகிறார்கள். இருவரும் ஒத்த ரசனை கொண்டவர்கள். இருவரும் கவிதை எழுதுகிறார்கள். இருவரும் சொந்த இடங்களிருந்து அந்நியமான பிரதேசங்களில் வசிக்கிறார்கள். இருவரும் நேசிக்கிறார்கள். சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். பரஸ்பரம் கண்டடைகிறார்கள். இருவரும் மணமானவர்கள் என்பதுதான் இந்த உறவின் மையமான முடிச்சு. மாதவியால் இந்த இரண்டாவது உறவை இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிவதுபோல மௌலியால் முடிவதில்லை. அவனுக்கு வேறு தடைகள். மனைவி, குழந்தைகள். அதைக் காரணம காட்டி அவனால் வலியுடன் பிரிய முடிகிறது. இதில் தகர்பவள் மாதவிதான். நாவலின் முன் பகுதியில் இருவருக்கும் பிடித்த யாரோ ஒருவர் சொன்னதாக வருகிற வரிகள் - 'ஆணுக்கு காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. பெண்ணுக்கு அதுவே வாழ்க்கை' - மாதவியைப் பொருத்து நிஜமாகிறது. உடலாலும் மனதாலும் சிதைவதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள அவள் செய்வது இந்தப் பொன் விலங்கைக் கழற்றி எறிவது. அப்படிக் கழற்றியதற்கான தன் தரப்பு நியாயத்தைப் பகிரங்கமாகச் சொல்வது. இந்த இயல்புதான் தமிழ்நதியின் கானல்வரியை கவனத்துகுரியதாக ஆக்குகிறது. மாதவி

அனுபவிக்கும் 'நிரந்தரத் தனிமை'தான் இந்தக் குறுநாவலை உறுத்தலுடன் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. நமக்கு அறிமுகமாகியுள்ள முதலாவது கானல் வரி 'சிலப்பதிகார'த்தில் வருவது. அதிலும் மாதவியின் தனிமைதான் என்னை உறுத்தியது. கானல்வரி பாடி முடித்து கோவலன் கோபித்துக்கொண்டு ஏவலாளர் புடை சூழக் கிளம்பிப் போகிறான். மாதவி தன்னந்தனியளாக வீடு திரும்புகிறாள். இந்தக் காட்சி எப்போதும் துன்பத்தைத் தருகிறது.இந்தக் குறுநாவலுக்கு கடிதம் போன்ற வடிவத்தை தமிழ்நதி தெரிந்தே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். மாதவியின் சார்பாக நின்று சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடக் கூடிய வடிவம். விசுவாசிகள் கடவுளிடம் பேசுகிற வடிவம். ஒரு படைப்பாளி உருவாக்க வேண்டிய வடிவம் கடவுள் விசுவாசியிடம் விவாதிக்கிற வடிவமாக இருக்கும்.வேறு வடிவமாக இருந்தால் படைப்பின் இன்னொரு தேவையை தமிழ்நதி நிறைவேற்ற வேண்டியிருக்கும். பிறன் நிலையில் தன்னை வைத்துப் பார்ப்பது என்ற தேவையை. இங்கே வடிவம் என்று நான் சொவது அதன் பௌதிக வடிவத்தையல்ல. காதல் என்ற கருத்து உடலையும் சேர்த்துத்தான் என்று இந்த நாவல் வலியுறுத்தும் அர்த்தத்தில்தான்.இந்த நாவலில் இரண்டு புள்ளிகளுக்கு இடையில் கிழித்த கோடுதான் தென்படுகிறது. அந்தக் கோட்டுக்கு மேலும் கீழும் உள்ள மிக முக்கியமான இரண்டு பாத்திரங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. மாதவியின் கணவன் ராகவன். மௌலியின் மனைவி. இதில் ராகவன் பெருமைப்படக் கூடிய பாத்திரமாகத் தென்படுகிறார். மௌலியை ஒருமையில் அழைக்கும் மாதவியால் ராகவனை மரியாதையுடன் பன்மையில்தான் நினைக்கவே முடிகிறது. 'ஆண்பிள்ளைகள் எல்லாரும் மோசமானவர்களில்லை' என்று பெருமூச்சு விடத் தூண்டுகிற காரியம் இது. மௌலியுடனான உடல் பரிமாற்றத்தைப் பற்றிக் குற்ற உணர்வுடன் முறையிடுகிற மாதவியிடம் ராகவன் சொல்கிறார். 'நானும் ராமனொன்றும் இல்லை'. இந்த வாசகம் தேய்வழக்கு என்று தோன்றினாலும் ராகவன் இலக்கியம் பேசுகிற பேர்வழியில்லையே என்ற உடனடி சமாதானமும் இவ்வளவு காத்திரமான காட்சியை ஒற்றைத் தீற்றலில் முடித்து விட்டீர்களே தமிழ்நதி என்ற ஆற்றாமையும் ஏற்படுகின்றன.அண்மைக் காலமாகத் தமிழில் பெண்கள் அதிகம் எழுத வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் கவிதையிதான் அவர்கள் பங்களிப்பு அதிகம். தமிழ்நதியும் கவிதையில் தொடங்கியவர். ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். சிறுகதைளிலோ நாவல்களிலோ பெண்களின் பங்கு அதிகமில்லை. சல்மா, உமா மகேஸ்வரி,தமிழ்ச்செல்வி போன்றவர்களைத் தவிர இந்தத் துறைகளில் யாருமில்லை. அந்த நோக்கில் தம்ழிநதியின் இந்த முயற்சி ஆறுதல் தருகிறது. எந்த மனத்தடையும் இல்லாமல் அனுபவங்களைப் புனைவாக்க, இல்லை, புனைவை அனுபவமாக்கவா? தெரியவில்லை - அவரால் முடிந்திருக்கிறது. அதற்கு அபாரமான துணிவு தேவைப் படுகிறது. அது அவரிடம் இருக்கிறது என்பதற்கு இந்த நாவல் ஓர் அத்தாட்சி. அந்தத் துணிவுக்கு வாழ்த்துகள். இந்த நாவலில் நானும் ஒரு பாத்திரமாக இருக்கிறேன். அதற்காக தமிழ்நதிக்கு நன்றி. இந்த நாவலை அல்லது குறுநாவலை அல்லது நீள்கடிதத்தை ஒரு முதிர்ந்த படைப்புக்கான கரட்டு வடிவமாக எண்ணத் தோன்றுகிறது. அந்த நாவலை எப்போது எழுதுவீர்கள் தமிழ்நதி?

@
-கவிஞர் சுகுமாரன்

உயிர்மை பதிப்பகம் கடந்த 25 ஆம்தேதி ஒழுங்கமைத்த 12 புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...