அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

செம்மொழி - வல்லுநர் குழு அறிக்கை:கருணாநிதி வெளியிட்டார்

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   28 , 2009  23:23:28 IST

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி, மத்திய அரசுக்கு இப்போதைய திமுக அரசு பதவிக்கு வந்தபிறகு வல்லுநர் குழு அமைத்து, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை முதலமைச்சர் கருணாநிதி, நேற்று தன் கடிதவடிவ அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

அவரின் அறிக்கை:

நான்காவது முறையாக நான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு; அரசின் சார்பில், தமிழ் செம்மொழியே என உரிய முறையில் நிலைநாட்டி, மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கென; ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜான்சாமுவேல் அவர்களால் தயாரிக்கப்பட்ட; முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் வா.செ.குழந்தைசாமி, மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ போன்ற வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவு அறிக்கையின் முக்கியப் பகுதிகள் பின்வருமாறு:-

“உயர்தனிச் செம்மொழியாக ஒளிரும் தமிழ்
இந்தியச் சூழலில் செம்மொழித் தமிழ் பெறும் சிறப்பிடம் :-

உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு ஈடில்லாத ஒரு தனித்தன்மையுண்டு. ஈராயிரம் ஆண்டுப் பழமைவாய்ந்த செவ்விய இலக்கியங்களின் களஞ்சியமாகவும், மூத்த திராவிட இலக்கிய அணிகலன்களின் கவச மாகவும் தமிழ்மொழி திகழ்கிறது. எண்ணற்ற கவிதைகள்-செய்யுள்கள்- பாடல்களின் கோவைகளைக் கொண்ட இம்மொழி கிறித்துவின் முதலாண்டுக்கு முன்னேயே நிலைபெற்றதாகும். தங்குதடையின்றிப் பொங்கும் வளமையுடனும், பொலிவார்ந்து ஓங்கிய வளர்ச்சியுடனும் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் இன்றும் தன் சீரிளமைத் திறம் குன்றாமல் தமிழ் மொழி சிறந்து விளங்குகிறது.

பொங்கித்ததும்பும் நதியின் போக்கிற்கேற்பப் பல்வேறு இணைப்புகள், பகிர்வுகள் வாயிலாகத் திராவிட மொழிகளின் தொகுப்பில் உயரிய இடம் பெறும் மொழியாகத் தமிழ்மொழி மிளிர்கிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் வழங்கிய சமஸ்கிருத மொழிக்கு நிகராக, உயிரோட்டத் தோடு உலவி வரும் மொழியாக நிலைபெற்று, இந்தியப் பண்பாட்டு மாறுதல் களுக்கு இசைவாகப் பிறமொழிகளுடன் தக்க உறவினையும், அதே சமயம் தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த இயல்புகளைத் தக்கவைத்துக் கொண்டும், ஆற்றல் குன்றாத நிலையில் தமிழ்மொழி திகழ்கிறது.
இந்திய ஐரோப்பிய மொழி வரிசையில், செல்தியம், செருமானியம், இலத்தீன் மற்றும் கிரேக்க, இரானிய மொழிக் குழுமத்தின் வேர்த் தொடர்புகளைத் தமிழ் மொழியிலும் கண்டு அறிஞர் கால்டுவெல் ஒப்பீடு செய்துள்ளார். அதேபோல, தாமஸ் பர்ரோ பின்லாந்திய மொழிக்கும், திராவிட மொழிகளுக்கும் நுண்ணிய தொடர் இணைப்புகளைக் கண்டார். அங்கேரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் தொடர்புறவை ஜி.எஸ்.பாலிண்ட் ஆராய்ந்து கண்டார். ஹப்பர், சுசுமோ ஓநோ ஆகியோர் சப்பானிய, கொரிய ஒப்பாய்வுகளைத் தமிழ்மொழியோடு ஆராய்ந்து கண்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் ஆறு கோடித் தமிழரின் அன்றாட வாழ்வில், நடனமிடும் தமிழ்மொழி; இலங்கையிலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளிலும் மோரீசு, டிரினிடாட், பிஜிதீவுகளிலும் வாழும் மக்களால் பேசவும், எழுதவும் படுகிறது. இலங்கையரசும், சிங்கப்பூர் அரசும், தமிழ்மொழியினை ஆட்சி மொழியாகவும் அறிவித்துள்ளன.

எகிப்திய, சுமேரிய, சிந்துவெளி பண்பாட்டுக்கு இணையாக கலையிலக்கிய பண்பாட்டுச் செல்வங்களைத் தாங்கி விளங்கும் தமிழ்மொழி, தொல் திராவிட மரபையும், தொல் தமிழிய வளர்ச்சியையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வாளர்கள் கணக்கிடுவதற்கு வழிவகுக்கிறது. இந்நிலை யிலும், இவ்வளவு தொடர்பிருந்தும் இன்றுவரை தொன்மைக்குத் தொன்மையாய், இன்றும் வாழும் ஒரே இயல்பும் திறனும் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும்.

தமிழ்மொழியையும், தமிழின் இலக்கியப் படைப்புகளில் பொதிந்துள்ள கோட்பாடு களையும், இலக்கண விதிகளையும் நுணுக்க மாக வரையறுக்கும் வகைப்பாடு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொடங்கியுள்ளது. இதனால் இலக்கியச் செய்யுள் படைப்புகள் செம்மையாக அமைவதற்குத் தொல்காப்பியம் வளமூட்டியுள்ளது. தொல்காப்பியத்தில் காணப்படும் விதிகள், நெறிமுறைகள், ஒலியியல், மொழியியல் பயன்பாடுகள், அயற்சொற்களைக் கையாள்வதற்கு உருவாக்கிய விதிப்பாடுகள் முதலியன தெளிவாக உள்ளன. இதனால் தமிழ்மொழி பயனுடைய மேம்பாட்டைப் பெறுதற்கு இடந்தருகிறது என்று குறிப் பிட்டுள்ளனர். பழமைவாய்ந்த, செப்பமுற வளர்ந்த தமிழ்மொழியை இப்போது செம்மொழி என்று நாம் குறிப்பிடும் சிந்தனைக்கு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே இம்மண்ணில் வாழ்ந்த அறிஞர்கள் உரமூட்டினர்.
கிரேக்க மொழியுடன் தமிழ்மொழியாளரின் உறவு தொடங்குவதற்கு முன்னரே, தமிழ்மொழி செம்மொழித் தகுதியை அடைந்துவிட்டது என்று கில்பர்ட் சிலேட்டர் குறிப்பிடுகிறார். தமிழ்மொழி கிரேக்க மொழியை விடச் செறிவானதென்றும், இலத்தீன் மொழியைவிட மேன்மையானது என்றும், ஆங்கிலம் மற்றும் செருமன் மொழியைவிட ஆற்றல் வாய்ந்தது என்றும் டாக்டர் வின்சுலோ குறிப்பிட்டுள்ளார். பிரெஞ்சு இந்தியவியல் அறிஞர் பியரி மெய்லியின் கருத்துப்படி, செம்மொழித் தமிழின் சங்கப் பாடல்கள், கிரேக்க மொழியின் நுட்பமான கவிதைத் தொகுதிகளுக்கு அறைகூவலாக விளங்குகின்றன.

தாமதமாக உணரப்பட்ட தமிழ் மேன்மை:-

தொடக்க நிலைகளில் கூட, வால்டர் எலியட், எல்லீசு கோவர், வின்சுலோ, கால்டுவெல், போப், வின்சன் ஆகியோர் தாங்கள் வாழ்ந்த காலத்திலும் திராவிடத் தமிழ்ப் பண்பாட்டாய்வு பொதுவாக புறக்கணிக்கப்பட்டேயிருந்தது என்பது பற்றிய தங்கள் கருத்தைத் தெரிவித் துள்ளனர். ஆங்கிலேய அரசு தமிழ் இலக்கி யத்தை புறக்கணித்தது பற்றி டாக்டர். ஜி.யு.போப், 1910ஆம் ஆண்டிலேயே தெரிவித்தார். மிகத் தொன்மையான, வளம்மிக்க, பண்பட்ட தமிழ்மொழி எம்மொழிக்கும் சிறப்பில் குறைந்ததன்று என்றபோதிலும்; இங்கிலாந்துப் பேரரசின் ஆட்சியிலிருந்து தொலைவில் உள்ள ஒரு பகுதியில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு மொழி என்றே, தமிழ் மொழியைப் பெரும்பான்மையான மக்கள் நினைக்கின்றனர். நம்முடைய இந்திய அரசோ, நம்முடைய பல்கலைக் கழகங்களோ தமிழ் இலக்கியத்தின் மாண்பை முழுமையாக அறியவில்லை. எனவே, தென்னிந்திய மொழிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள், ஆழ்கடலில் முத்துக்களை அலைந்து தேடுபவர்களைப் போன்ற அரிய உழைப்பாளர்களாக உள்ளனர்.

புவியியல் வகையில் பரந்து விரிந்த இந்திய நாட்டின் மொழி என்ற வகையிலும், திராவிட இனம் சார்ந்த, சமூக நலனில் அக்கறையுள்ள ஒரு மொழி என்ற வகையிலும், அமெரிக்காவிலும் தமிழைப் படிக்கத் தொடங்கினர். தமிழ்மொழி, பென்சில்வேனியா, சிகாகோ, கான்சாஸ் ஆகிய பல்கலைக் கழகங்களிலும், கோடைப் பள்ளிகளிலும் மொழியைப் பயிற்றுவிக்கும் திட்டங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

பன்னாட்டு அறிஞர்களும், நம்முடைய தமிழியல் ஆய்வாளர்களும், இந்திய பண் பாட்டுக் கூறுகளை முழுமையாகவும், முற்றிலுமாகவும் புரிந்துகொள்வதற்குத் தமிழாய்வு மிகவும் இன்றியமையாததென்பதை உணர்ந்துள்ளனர். இந்தியத் திருநாட்டின் பண்பாட்டுக் கலை வளத்தை, முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு வடமொழி ஆய்வு மட்டும் போதுமானதல்ல என்றும்; திராவிட மொழிகளில் மிகத் தொன்மையான தமிழ்மொழியின் வளம்மிக்க கலைப் பண்பாட்டு இலக்கியக் கூறுகளை கருத்தில் கொண்டால்தான்; இந்தியப் பண்பு குறித்த எந்த ஒரு ஆய்வும் முழுமையாகும் என்றும் அறிஞர்கள் ஒருமித்த கருத்தை உறுதி செய்கின்றனர். இந்திய மொழிகள் குறித்து, புகழ்பெற்ற அறிஞரான டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி பின்வருமாறு தன் கருத்தைத் தெரிவித்தார். (வங்கநாட்டுப் பேராசிரியர் சுனித்குமார் சட்டர்ஜி தமிழார்வத்தால் தன் பெயரை ‘நன்நெறி முருகன்’ என மாற்றிக் கொண்டதும் நாம் நினைக்கத்தக்கது). ‘தற்போதைய இந்தியப் பண்பாடு மற்றும் சமய தத்துவத்தைப் பொறுத்தவரையில் திராவிட மொழியே பாவு நூலாகவும், ஆரியமொழி ஊடிழையாகவும் உள்ளன. இந்தியப் பண்பாட்டுச் செல்வத்துக்கு திராவிடர்கள் ஆற்றிய பங்கு ஐம்பது விழுக்காட்டுக்குக் குறையாதது’ என்றும் அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்சங்க இலக்கியம்தான் செம்மையான, நவீனமான இந்திய இலக்கியமாகும். முந்தைய வடமொழி நூல்களைப் போன்று பழமையான தோடு இன்றைய நவீன படைப்புகளுக்கும் ஈடுகொடுத்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. அறிஞர் ஏ.கே.இராமானுசன் ‘இலக்கிய இயற்கையடைவு’ என்ற தன் நூலில் இந்தியாவின் இரண்டு செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மட்டுமே, சமகால இந்திய நிகழ் மொழியாகும் என்றும்; இது கடந்தகாலத் தொல் பழமையோடு தொடர்ந்து வழக்கு மொழியாக மக்களிடையே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது என்றும் காட்டியுள்ளார். சங்க இலக்கியங்கள் புகழ்பெற்ற காலப்பழமை கனிந்த தமிழ்ப்பாடல்களாகச் செம்மையுடன் விளங்குவதற்கு, மூன்று காரணங்களை, டாக்டர் கமில் சுவலபில் தெரிவிக்கிறார். முதலாவதாக, நம்முடைய தேசிய இலக்கியங் களின் சில பகுதிகளை நாம் பாராட்டுவதைப் போன்று; புகழ்பெற்ற சங்கப் பாடல்களை, தமிழறிஞர்களும், வரலாற்று வல்லுநர்களும் திறனாய்வாளர்களும் செம்மையானது என்று பாராட்டுகின்றனர். இரண்டாவதாக, இது ஒரு முற்றாக ‘நிறைவெய்திய’ இலக்கியத் தொகுப்பாக இருந்து வந்துள்ளது. இது இன்றும் உயிர்ப்பான வாய்மொழி மரபில் துடிப்போடு வழங்கப்பெறுகிறது. காலத்திற்கேற்ப மாற்றம் பெறமுடியாத விழுமிய சொற்களைக் கொண்டதால் ‘உறைந்த நிலை மாறாத கவிதை’ வடிவில் உள்ளன. மேலும் இது செம்மையான மரபு வழியின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. மூன்றாவதாக, ஒரு மொழிசார்ந்த யாப்பிலக்கணம் மற்றும் புலனெறி சார்ந்த முழுமைபெற்ற வரம்போடு உள்ளது. முழுமையான, நிறைவான, ஈடிணையற்ற பண்பாட்டின் இலக்கியத் தொடராகவும், பண்பாட்டின் முடிமணியாகவும் இவை உள்ளன. இவ்வகையில், செம்மையான வடிவமைப் புடையதாக ஒரு செவ்விய இலக்கியமாக உள்ளது. (கமில் சுவலபில், “முருகனின் புன்னகை” பக்கம் 50).
திராவிடக் குடும்ப மொழிகளில் தலையாய மொழி என்ற வகையில், இது தனியிடம் பெற்றுள்ளதால், பல நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் என்றுமுள தென்தமிழாக நிலைத்து நின்று; வளர்ச்சியையும், மேன்மையையும் பெற்று அனைத்தையும் அரவணைத்து அனைவருடனும் ஒன்றிக் கலந்து வந்துள்ளது. ஏனைய திராவிட மொழிகளைப் போன்று, இந்திய ஐரோப்பிய மொழிகள் மற்றும் கீழை நாட்டு மொழிகளின் அம்சங்களுடன், தொடர்புற்றிருந்த ஒப்புமையையும் வெளிப்படுத்துகிறது. இருபத்தைந்து மொழிகளுக்கு மேற்பட்ட திராவிடக் குடும்ப மொழிகளில் இதுவே முதன்மையான மொழியாகும்.

தமிழ்மொழியிலுள்ள சொற்களின் வேர்களை, உலகின் அனைத்துச் செம்மொழி களிலும் காணலாம். இது, போர்த்திறம் கொண்ட புறப்பாடல்களையும், உயரிய காதல் கனிந்த அகப்பாடல்களையும் மற்றும் அறநூல்களையும் சிறந்த படைப்புகளாக (ஆயளவநசயீநைஉநள), இலக்கியத் தொகுப்பாகப் படைத்துள்ளது. சமயம் சாராத உலகளாவிய மனித நேயம் பற்றி இவ்விலக்கியங்கள் கூறுகின்றன. சமய உருக்கம் கொண்ட பக்தி சார்ந்த பாடல்களின் தொகுப்பும் இம்மொழியின் செல்வமாகும். இந்த நாட்டில் இன்றுள்ள அனைத்து மொழிகளிலும் நிலையான தமிழ் முத்திரையைப் பொறித்துள்ளது.

கடந்த ஐம்பதாண்டுகளாகவும் அல்லது அதற்கு மேலாகவும், அரப்பா - மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழ் அல்லது திராவிட மொழி பேசும் மக்களின் கணிசமான, குறிப்பிடத்தக்க பங்களிப்பு அனைவராலும் கவனிக்கத்தக்க அளவுக்கு உணரப்பட்டு வருகிறது. மொகஞ்சதாரோ என்ற இடத்தைக் கண்டுபிடித்த பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி ‘ஆரியர்கள் வருகை புரிந்த காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னரே அமைந்திருந்த, சிந்துவெளி நாகரிகமானது, ஆரிய நாகரிகத்திற்கும் முந்தைய அதிசய நாகரிகம் என்பதை நிலைநிறுத்தியுள்ளது என்றும்; அம்மக்களைத் திராவிடர்கள் அல்லது திராவிட இனத்தில் மூத்தவர்கள் என்று தென்னிந்தியாவில், திராவிட மொழிகளைப் பேச்சுவழக்காகக் கொண்டு வாழும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகப் பின்னர் சுட்டிக்காட்டப் பட்டது’ என்றும் எழுதியுள்ளார்.

தமிழர்கள், தம் இலக்கிய இலக்கணக் கோட்பாட்டினை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகவும் திறம்பட மேம்படுத்தி யுள்ளனர் என்பதும், இது உலகில் உள்ள எந்த வொரு செம்மொழிக்கும், எந்த வகையிலும் சளைத்தது அன்று என்பதும் ஐயத்திற்கிட மின்றி அறுதியிடப்பட்டுள்ளன. தமிழ்மொழி சில சொற்களை வடமொழியிலிருந்து பெற்றிருந்தாலும், அவையனைத்தும் தமிழ்ச்சொற்களாகவே கொள்ளப்பட்டதால் அல்லது தமிழாக்கப் படுவதால், தமிழ்மொழி யானது தன் தனித்தன்மையையும், அமைப் பொழுங்கையும் தக்கவைத்துக் கொண் டுள்ளது. சொல்லமைவு நுணுக்கத்தைப் பெருமளவில் வடஇந்திய மொழிகளுக்குத் தமிழ்மொழி வழங்கியுள்ளதை முனைவர் பர்ரோ, பட்டியலிட்டுள்ளார்.

இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழ்மொழி மிகப்பெரிய அளவில், பங்களிப்புச் செய்தபொழுதும், உரிய தகுதியினைப் பெறத் தாமதமாகிவிட்டது. செனகலிலுள்ள டாக்கர் பல்கலைக்கழகத்தில், செம்மொழித் துறையில், தமிழ்மொழி, அரேபியமொழி, பாரசீக மொழி, வடமொழி ஆகியவை செம்மொழிகளாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நம்முடைய பல்கலைக் கழகங்களில் நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழ்மொழி, இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, அரேபிய மொழி, பாரசீகமொழி, வடமொழி ஆகிய மூன்று மொழிகளே செம்மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், தமிழறிஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்று குறித்துக் காட்டி தமிழுக்குச் செம்மொழி மகுடம் சூட்டவேண்டும் என்று விழைந்தார். இந்த வேண்டுதல் அறிஞர்கள் பலரின் உள்ளங்களில் எழுச்சியூட்டியது.
மரபுரிமைக் களஞ்சியமாக இலக்கிய வரையறையைக் கொண்டுள்ள மொழி சார்ந்த சமுதாயம் ஒவ்வொன்றும், சமூக மற்றும் இலக்கியம் சார்ந்த சூழலின் குறிப்பிட்ட காலத்தினைச் செம்மொழிக் காலமாகக் குறிப்பிடுகிறது. அறிஞர் சிலரின் கூற்றுப்படி, கி.மு.500லிருந்து 300 வரைப்பட்ட காலமானது, கிரேக்கர்களின் செம்மொழிக் காலம் ஆகும். கி.மு.500 முதல் கி.பி.1110 என்ற வரையறையில் வடமொழியின் செம்மொழிக் காலமெனக் கருதப்படுகிறது.

சங்க காலம் முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டைய எல்லையுட்படும் காலத்தைச் செம்மொழிக் காலமாகக் குறிப்பிடலாம். ஏனெனில், இக்காலத்தில் தான் ஈடிணையற்ற இலக்கியமும், மொழிசார்ந்த உயர்ந்த சிந்தனைகளும் மலர்ந்தன. இத்தகைய பங்களிப்புகள், திராவிடத் தொன்மையினையும் விழுமிய செழுமையினையும் உருவாக்கின. திராவிடர்களின் சிறந்த பண்பாட்டுச் சாதனைகளைக் கணக்கில் கருதத் தவறினால், இந்தியப் பண்பாட்டு மரபு குறித்த எந்தவொரு ஆய்வும் முழுமையற்றதாக குறையளவிலேயே இருக்கும் என்று, புகழ் வாய்ந்த ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் வலியுறுத்துகின்றனர்.

பன்னாட்டு அறிஞர்கள், உலகின் செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ்மொழியை இப்போது ஏற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்கள், வடமொழி, அராபிய மொழி மற்றும் பாரசீக மொழியுடன் பண்டைய தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவிப் பதற்கு முன்வந்துள்ளன. வடமொழியறிஞர் சி.ஆர்.சங்கரன், ஈராயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொல்காப்பிய நூலில் உள்ள ஒலியியல் குறித்த பிரிவை ஆராய்ந்து தாம் கண்ட முடிவைப் பின்வருமாறு எழுதுகிறார். மொழியின் உள்ளார்ந்த ஒலி குறித்த ஆய்வுமுறைக்குச் சிறப்பளிப்பதும் ஒலியின் வடிவம், வகைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை உறுதிப்படுத்தும் முயற்சி, சொற்களுக்குப் பொருள்கள் காண் பதில் சிறப்பான இடத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது பாணினியின் அஸ்டதி யாதியில் கூடக் காணப்படவில்லை என்று மதிப்பிட்டுள்ளார். மொழிகள் குறித்த வரலாற்றுக்குப் பண்டைய தமிழ் இலக்கண மரபார்ந்த நெறி மிகவும் போற்றத்தக்க பங்களிப்பாகக் குறிப்பிடலாம்.

செம்மொழியாகத் தமிழ்:-

இந்தியாவில் உள்ள மொழிகளில் தனித்தன்மை பூண்ட வீறுகொண்டதாகத் தமிழ் விளங்குகிறது. செழுமையான, அகப்புற இலக்கியக் கோட்பாடுகளையும், யாப்பிலக் கணம், செய்யுளியல், இலக்கண வரம்பு களையும் உள்ளடக்கியதாகத் தமிழ் இலங்குகிறது. வடமொழிச் செம்மொழியுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளாக அமைந்திருந்தாலும் வடமொழியின் செல்வாக்கினால் எவ்விதச் சீர்குலைவுமின்றி, வழக்கொழியாமல் தமிழ் தனித்து நின்று ஈடில்லாத மொழியாகத் தன்னைக் காத்துள்ளது.

தொன்மைத் தமிழ் செம்மொழியாக மலர்தல்:-

உலகளாவிய மரபிலக்கிய நற்கூறுகள், தொன்மை, வளமை, எளிமை முதலிய சிறப்பியல்புகளைப் பெற்றிருந்தபோதிலும் கூட, இந்நாள்வரையில் தமிழ்மொழி வட்டார மொழியாகவே கருதப்பட்டு, புதிய இந்திய மொழிகளின் வரிசையில்தான் வகைப் படுத்தப்பட்டது. இந்திய மொழிகளில், வடமொழி தவிர, தமிழ்மொழி போன்ற தொல்மரபு கொண்ட மொழி வேறெதுவும் இல்லை. ஒருமைவாய்ந்த நம் பண்பாட்டின் உயர்ந்த மரபு மாட்சியைப் பேணுவதும், காப்பதும் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வரையறை செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்மொழியைச் செம்மொழியாக ஏற்பது நமது கடமையாகும்.”
தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று, தக்க வரலாற்றுப் பின்னணியோடும், சான்றுகளோடும், கழக அரசின் சார்பில் மத்திய அரசின் கல்வித் துறைக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை; மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்திற்குப் பரிசீலித்து கருத் துரைக்குமாறு அனுப்பப்பட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...