அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒய்வுக்காக வரவில்லை, பயன்படுத்துகிறேன்:பெங்களூரிலிருந்து மு.க. கடிதம்

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   26 , 2009  06:16:24 IST

முதலமைச்சர் கருணாநிதி சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். அங்கு சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் அவர் சென்னைக்குத் திரும்புகிறார்.

அவர் பெங்களூர் சென்றபின்னர் அவரின் கடித வடிவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர், '' உடன்பிறப்பே, ஓய்வுக்காக வந்திருக்கிறேன் என்று நீ எண்ணிக் கொண்டிருப்பாய். ஓய்வுக்காக அல்ல; அல்ல! ஒப்பற்ற முறையில் நடக்க விருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கடிதங்களைக் கொண்டு, ஒரு தோரணவாயில் அமைக்கின்ற ஆர்வத்தோடு தான், இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தோரணவாயில் அமைக்க நான் கொட்டிவைக்கும் கற்களின் குவியல் இது!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ளது:

அறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக முன்னின்று நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையும் சேர்த்து, இதுவரை “உலகத் தமிழ்மாநாடு” என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்தேறியுள்ளன. சென்னையில் சிறப்புறவும், கண்டோர் வியப்புறவும் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு தமிழர்களின் உள்ள உணர்விலும், அறிவுத் திறனிலும் விதைத்த மிகப்பெரிய மாற்றத்தின் காரணமாக; அறிஞர் அண்ணா,

“திராவிடர்தம் மொழியாம் செந்தமிழ் மொழியின் மேன்மையும் மேம்பாடும் சீரும் சிறப்பும் உலகப் பார்வையில் சிறப்பிடம் பெற்று வருகின்றது.தமிழின் சிறப்பியல்புகளை - செம்மொழிக் கேற்ற சீரிளம் இயல்புகளை மொழிவல்லார் பலரும் மெத்தவும் மெச்சிடுகின்றனர். தமிழ்மொழி, காலத்தால் மிக மிகத் தொன்மையானது. இலக்கண இலக்கிய விதிகளையும் வரைமுறைகளையும் செவ்வனே பெற்றுள்ளது. தூயது - தூய்மையானது. துல்லியமாக எண்ணங்களை வெளிப்படுத்திடும் சொல் வளம் மிகவும் படைத்தது. உணர்வுகளை நுட்பமாகவும் நுண்ணியமாகவும், நேர்மை யாகவும், நேர்த்தியாகவும் ஊட்டிடும் நயம் மெத்தவும் மிக்கது. எண்ணங்களை, ஏற்பாடுகளை - கொள்கை கோட்பாடு களை வழுவாமல், பிறழாமல் குறித்துணர்த்திக் கூறிடும் சொல்லாட்சியும் உடைத்தானது.

சூடு, சுவை, சூட்சுமம், மதி நுட்பம் வாய்ந்த குறிப்புரை, விரிவுரை, விளக்க வுரை அத்துணையும் ஆற்றிடவல்ல சொல்லாரம் தமிழ்க் களஞ்சியத்தில் ஏராளம், ஏராளம், மிக மிக ஏராளம்; எடுக்க எடுக்கக் குறையாதது. கொடுக்கக் கொடுக்க மாளாதது நம் தமிழ்மொழியின் வளம் - வல்லமை.

தமிழ் இனியது. அழகியது. ஆற்றல் மிக்கது, வற்றாத ஊற்றான சொற்செறி வும், பொருட்செறிவும், நாகரிக நயமும் நேர்த்தியும் கொண்டது. அது தொன்மை யானது. தூயது! என்றும் அழியாத வியத்தகு சீரிளமைத் திறம் உடைத் தானது என்பதெல்லாம் உண்மை-வெறும் புகழ்ச்சியல்ல என்பதை ஊரும் உலகும் ஒப்பிடத் தொடங்கியுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்கின்றோம்!”- என்று பீடும் பெருமையும் கொண்டு பேசினார்கள்.

இப்போது, 2010ஆம் ஆண்டு ஜுன் திங்கள் 23ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை
5 நாட்களுக்கு, கொங்குப் பகுதியின் கோலமிகு திருநகரமாம் கோவையில் நடைபெறுமென நாம் அறிவித்திருப்பது, “உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு” ஆகும். மாநாட்டுக்கான தொடக்கக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மாநாடு நடைபெறவுள்ள நாட்கள்;
மாநாடு நடைபெறவுள்ள இடம்;
மாநாட்டை அழகு மிளிர்ந்திடவும்;
ஆய்வரங்கங்கள், பொருளாழம் கொண்டதாகவும்-
அடுத்துவரும் தலைமுறையினர்க்கு அறிவூட்டுவதாகவும்-
அன்னைத் தமிழுக்கு மேலும் பொலிவு தரும் புத்தம்புதிய
அணிகலன்கள் பூட்டுவதாகவும் அமைந்திடவும்;
பொது அரங்கங்கள், இதுவரை கண்டிராத உணர்ச்சியையும், ஊக்கத்தையும், வெள்ளமெனப் பெருக்கி
உலகெங்கணும் உள்ள தமிழர்களிடைப் பாய்ச்சுவதாகவும்;
கண்காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக, கண்களின் நினைவுகளில்,
காலமெலாம் நின்று நிலைத்து ஒளி உமிழ்வதாகவும்;
ஊர்வலம்- தமிழர் நாகரிகம், பண்பாடு பன்முகத் தோற்றம், தொன்மை,
தரணி போற்றிடும் தமிழிலக்கியத்தின் மேன்மை, மென்மை
ஆகியவற்றைப் பேசும் சித்திரப் பாவைகளாக உருக்கொண்டு,
ஊர்வலமாக மட்டுமன்றி, உலகவலமாகப் பிரமிப்பூட்டுவதாகவும்;
நடத்துவதற்குத் தக்கவகையில் சான்றாண்மை மிக்கோர் பலரையும் இணைத்து 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளபடியே சொல்லப்போனால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற வகையில், நாம் நடத்திடப் போவது, முதல் மாநாடாகும்.

நமது தமிழ்மொழி, ‘செம்மொழி’ என்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் நிரம்பவே பெற்றிருப்பதால், அதனைச் செம்மொழியென அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று; இன்று, நேற்றல்ல - ஒரு நூற்றாண்டுக் காலத் திற்கு முன்பே குரலெழுப்பப்பட்டது.

அன்று எழுப்பப்பட்ட அந்தக் குரல் - தமிழ்க் குரல் - மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக, காலப்போக்கில் - தமிழறிஞர்களின் குரலாக - தமிழ் ஆர்வலர்களின் குரலாக - தமிழ்ச் சமுதாயத்தின் குரலாக - அரசியலரங்கத்தில் ஆற்றல் செறிந்த குரலாக - உருப்பெற்று; அந்தக் குரலை, கேளாக் காதினர் மதித்திடத் தவறிவிட்டாலும்; செவித்திறனும், சீர்த்த பண்பும் உடையோர் அதனை மதித்துப் போற்றி; அந்தக் குரலின் மாண்பமைந்த நியாயத்தை உணர்ந்து; தமிழ் செம்மொழியே என, இந்தியத் திருநாட்டளவில் அங்கீகாரம் செய்து பிரகடனப் படுத்தப்பட்ட நாள் 12.10.2004.
அந்த நாள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற உரிமைப் போராட்ட வரலாற்றில், உயர்ந்த நாள், உன்னதமான நாள்; மாத்தமிழர் என்றென்றும் மறந்திடவியலாத மரகதத் திருநாள்! முன்னைப் பழைமைக்கும் பழைமை யாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய், என்று பிறந்ததென்ற இயல்பறியாததாய், சீரிளமைத் திறம் கொண்டதாய் வளர்ந்து செழித்திருக்கும் செந்தமிழ், செம்மொழியெனப் பிரகடனப்படுத்தப்பட்ட பரிணாம வரலாற்றை; உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிக்கப் பட்டுள்ள இந்தச் சரியான தருணத்தில், நான் நினைவு கூர்ந்து உனக்குச் சொல்வதும்; நீ அதனை அறிந்து கொள்வதும், அறிந்து கொண் டவற்றை நினைவிலே தேக்கி, உனது உற்றார் உறவினர்க்கும், மற்ற உடன்பிறப்புக்களுக்கும் எடுத்துரைப்பதன் மூலம் புதிய எழுச்சியும் இன்பமும் கொள்வதும்; நாம் கொண்டிருக்கும் பொருள் பொதிந்த உறவின் காரணமாகப் பொருத்தமானதே!

1887ல் பண்டைத் தமிழறிஞர் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் அவர்கள் “தமிழ்மொழியின் வரலாறு” என்ற தமது நூலின் முடிவுரையில்:

“வடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ்மொழியும் உயர்தனிச்செம்மொழி யாமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பலமொழிகட்குந் தலைமை யும் அவற்றினும்மிக்க மேதகவுடைமையுமுள்ள மொழியே உயர்மொழி. இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்துத் தமிழ் - தெலுங்கு முதலிய வற்றிற் கெல்லாந்தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கும் நாட்டிற் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே தனிமொழி என்னப்படும். தான் பிறமொழி கட்குச் செய்யும் உதவி மிகுந்தும், அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியினுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்கு தலொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுத வியில்லாமலே சிறிது மிடர்ப்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய மொழிநூற்ப்புலவர்கள் பலர்க்கும் ஒப்பமுடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது?” - என்று தமிழை உயர்மொழி என்றும் தனிமொழி என்றும் வலியுறுத்திய பின்னர் பரிதிமாற்கலைஞர் அவர்கள், செம்மொழியா வது யாது? என்ற வினாவுக்கு விடையளித் திடும்போது:

“திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழி யாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன்முடிபுகளும் பொருண்முடிபு களுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளி தினுணர வல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ்மொழியின் கண் முற்றும் அமைந் திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக்கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படு மிடத்துப் பிறபாஷைச் சொற்களன்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழியென்பது திண்ணம். இது பற்றியன்றே தொன்று தொட்டுத் தமிழ் மொழி செந்தமிழ் என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளி ராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே யாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டுயர் தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத் தென்னாட்டுயர் தனிச்செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்”.

- என்று தமிழ்மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே அறுதியிட்டு, உறுதியாக நிலைநாட்டிக் குரல் கொடுத்தார்.

ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின், தாம் மேற்கொண்ட இதே நிலையைத்தான் இறுதிவரை பரிதிமாற்கலைஞர் வலியுறுத்தி வந்தார். பேராசிரியர் இராகவைய்யங்காரை ஆசிரியராகக் கொண்டு, மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த “செந்தமிழ்” எனும் மாத இதழில், 1902ஆம் ஆண்டு, “உயர்தனிச் செம்மொழி” என்று தலைப்பிட்ட கட்டுரையில், பரிதிமாற்கலைஞர் “தென்னாட் டின்கட் சிறந்தொளிராநின்ற நம் அமிழ்தினு மினிய தமிழ்மொழி எவ்வாற்றாணாராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாமென்பது திண்ணம். இத்துணை யுயர்வுஞ்சிறப்பும் வாய்ந்த நம் அருமைத் தமிழ்மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத், தென்னாட்டுயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம்” - என்று விளக்கி உரைத்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றத்திற்கு அருகில் விளாச்சேரி எனும் கிராமத்தில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை யாக்கி, நினைவில்லமாக அந்தப் பழைய இல்லம் கழக அரசால், 7 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்ச் செலவில் புதுப்பிக்கப்பட்டு - புதிய பொலிவுடன் நினைவில்லமாக்கப்பட்டு - நினைவில்லத்தின் முகப்பில் பரிதிமாற்கலைஞர் அவர்களின் மார்பளவு சிலை ஒன்றும் நிறுவப்பட்டு - வீட்டின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலையைத் திறந்துவைத்து; அங்கு வைக்கப் பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில்,
“தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரி குரல்கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற் கலைஞர் புகழ் வாழ்க!”- என நான் எழுதிக் கையெழுத்திட்டேன்.

தமிழில் நாடக இலக்கண நூல் இல்லாத குறையைப் போக்க விரும்பி, தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் ஆராய்ந்து, நாடகவியல் என ஒரு நூல் எழுதி வெளியிட்டவர் பரிதிமாற்கலைஞர்.

இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி உட்பட உள்நாட்டு மொழிகளைப் பாடப்பகுதியி லிருந்து நீக்கிட திட்டமிட்டபோது; பரிதிமாற் கலைஞரும், பூர்ணலிங்கம் பிள்ளையும், தமிழறிஞர்களின் வீடுதோறும் சென்று, முயன்று பல்கலைக் கழகத்தின் திட்டத்தைத் தடுத்தனர்; தமிழ்மொழி தொடர்ந்து பல்கலைக் கழகப் பாடமொழியாக நீடித்தது.

தமிழ்மொழியைச் செம்மொழியென்று பிரகடனப்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்த பரிதிமாற்கலைஞர் - நூறாண்டுக் கால மொழி உரிமை வரலாற்றைத் தொடங்கி வைத்த தமிழறிஞர் - ஏறத்தாழ 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அப்பெருமகனார் - தமிழ் மொழி வரலாற்றில் நிலைத்த புகழைக் கொண் டுள்ளார்.

சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதி மாற்கலைஞர்; வடமொழியா ளரின் ஏமாற்று வேலைகள் எப்படிப்பட்டவை என்பதை - அவர்களது முகத்திரையைக் கிழித்து, அணிந்திருந்த முகமூடியைக் கழற்றி - அவர்களது வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். “தமிழ்மொழியின் வரலாறு” என்ற அவரது நூலில் உள்ள அந்தப் பகுதி, தமிழர்கள் அனைவரும் - குறிப்பாக பெரியார், அண்ணா வழி வந்தவர்கள் - தவறாது நினைவு கூரத்தக்கதாகும். அது பின்வருமாறு:

“வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சிக்கு உடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங் களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத் தில்லாதிருந்த ‘அந்தணர்’, அரசர், வணிகர், வேளாளர்’ என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.

“முற்படைப் பதனில்வே றாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர், நாட்டினீர்”

- என்று ஆரியரை நோக்கி முழங்குங் ‘கபிலரகவ’ லையுங் காண்க.

இன்னும் அவர்தம் புந்தி நலங்காட்டித் தமிழரசர் களிடம், அமைச்சர்களெனவும் மேலதி காரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழி யினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்”
- என்று பரிதிமாற்கலைஞர் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்காட் டுகளுடன் இயம்பியிருப்பது;

பெரியார் - அண்ணா எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிப்ப தாக அமைந்திருக் கிறதல்லவா? அதனால் தான் சூரியநாராயண சாஸ்திரியாரை, முதல் தமிழன் பரிதிமாற்கலைஞர் என்று அழைத்து அவர் புகழ் வாழ்க என்று எனது நெஞ்சத்து உணர்வு கலந்து வாயார வாழ்த்தி எழுதினேன்!என்று கருணாநிதி கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...