அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அதிகாரமென்னும் வெறி - சா.கந்தசாமியின் எழுத்தோவியம்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   19 , 2005  10:44:38 IST

அதிகாரம் செலுத்துவதில் மனிதர்களுக்கு உள்ள ஆசை சாதாரணமான ஆசையில்லை. அது ஆசைகளுக்கு எல்லாம் மேற்பட்ட ஆசை. பேராசை என்பதற்குள் அதை அடக்க முடியாது. வானம், பூமி என்பதெல்லாம் அதிகாரத்திற்கு எல்லை இல்லை. அதிகாரம் எல்லை இல்லாதது என்று நம்பக் கூடிய ஆள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள்.அது காலம் என்பது எதையும் கற்றுக் கொடுக்கவில்லை என்பதின் தொடர்ச்சிதான்.

அதிகாரம் செலுத்த என்ன அதிகாரம் உள்ளது என்று கேட்கக் கூடாது. எப்படியோ, ஆள்களைப் பிடித்து கொஞ்சம் மேலே வந்துவிட்ட ஆள்கள் சட்ட திட்டத்திற்கு எல்லாம் மேலான ஆள்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

முதன் முதலாக சட்டத்தை வகுத்தவன் என்று ஐரோப்பிய நாடுகள் சொல்லும். கடவுளிடம் இருந்து தனக்கு அதிகாரம் வந்ததாக கல்லில் அடித்து வைத்து இருக்கிறான். ஆனால் அதிகாரம் செலுத்தும் ஆள்கள் எல்லாம் அதைப் படித்துதான் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்பது இல்லை.

மனிதர்களுக்கு சுபாவத்திலேயே அதிகாரம் செலுத்த ஆசை இருக்கிறது. அதுவும் ஒரு பதவி கிடைத்துவிட்டால் அதிகாரம் செலுத்தும் ஆசை வெறியாக மாறிவிடுகிறது.அதில் பெரிய மனிதன், சிறிய மனிதன், ஆண்-பெண் என்ற பேதமெல்லாம் கிடையாது. அதிகார ஆசையை அவர் மறைப்பதும் இல்லை. அதனால்தான் ஆசை வெட்கம் அறியாது என்கிறார்கள். குனிந்து கொள் என்று சொன்னால்- படுத்தால் சந்தோஷப்படுவார்கள். மார்பால் தவழ்ந்தால் அவர்கள் சந்தோஷம் கூடும். அற்ப சந்தோஷம் என்றாலும் ஆசை வெறியர்கள் அதிலேயே மூழ்கிக் கிடப்பார்கள்.

அதிகாரம் பிறப்புரிமை என்பது காலாவதியாகிவிட்டது. அதாவது பரம்பரை பரம்பரையாகக் குடும்பத்தின் சொத்தாக வருகிறது என்பது போய்விட்டது. எனவே அரசாங்கத்தில் வேலையில் சேர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இன்னொரு கூட்டம் அரசியலில் புகுந்து தேர்தலில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. இவர்கள் எல்லாம் மக்கள் சேவையே தங்கள் இலட்சியம் என்று ஒரே குரலில் சொல்கிறார்கள். ஆனால் செயல் அப்படி இல்லை என்பது சரித்திரமாக உள்ளது.

அதாவது அதிகார பீடத்தைக் கேள்வி கேட்கக் கூடாது. தவறு என்பது அவர்களிடம் இருக்கவே இருக்காது என்று மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று நிஜமாகவே நம்புகிறார்கள். ஆனால் அது நம்பும்படியாக இல்லை என்பதுதான் நிஜம்.

நிஜமான கேள்வி கேட்டால் கொதித்துப் போய் விடுகிறார்கள். ஏனெனில் 'தான்' அதற்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதர் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு எதிரான குரல்கள் வரும்போது மனம் பதறுகிறார்கள். தன்னை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லையென பெருங்குரலில் கத்துகிறார்கள். அது பலம் இல்லை. எப்போது பலவீனம் அடைகிறார்களோ அப்பொழுதெல்லாம் கத்தல் பெருங்குரலாகிவிடுகிறது.

பாராளுமன்ற சபாநாயகர், மாநில கவர்னர், மாநில சபாநாயகர், எல்லாம் என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று சட்டத்தை முன்னெடுத்துக் காட்டுகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்பது சட்டம். ஆனால் மேல் முறையீடு செய்யலாம். அப்படி இல்லாமல் தீர்ப்புப் பற்றி கேள்வி கேட்டால் அது குற்றமாகிவிடும். குற்றத்திற்குத்தான் தண்டனை உண்டு. அதாவது கேள்வி கேட்கும் உரிமையை ஓரிடத்திலாவது நிறுத்த வேண்டும் என்பதாலேயே சட்டம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள்-எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். அவர்கள் தண்டனை, குற்றம் என்பதை எல்லாம் கவனத்தில் கொள்வதில்லை.

அவர்கள் எல்லோரின் சார்பாகவும் அதாவது வீரர்கள், தீரர்கள், உதவாக்கரைகள் என்று புறந்தள்ளப்பட்டவர்களின் சார்பாகவும் பேசத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், யோசிக்கத் தெரியாதவர்களின் சார்பாகவும் கேள்வி கேட்கிறார்கள்.

சட்டம், தண்டனை என்பது பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை. அவர்கள் பொது மனிதர்கள். அதாவது எந்த ஒரு தனி மனிதர்க்கும் என்று இல்லாமல் எல்லா மனிதர்களின் நலம் உரிமைக் கேள்வி கேட்கிறவர்கள். அம்மாதிரியான பொதுமனிதர்களை நாம் இழந்து வருகிறோம். அவர்கள் இடத்தை அரசியல்வாதிகள் கைப்பற்றிக் கொண்டு வருகிறார்கள்.

பொதுமனிதன் எப்போதும் மனித சமூகத்தின் மனசாட்சியாக இருக்கிறான்.

சாகித்ய அகதமி விருது பெற்ற சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவர்.அந்திமழைக்கென்று சா.கந்தசாமி எழுதும் பிரத்தியேக கட்டுரைகள் வாராவாரம் செவ்வாயன்று வெளிவரும்.
அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
Profile
Article I, Article II,Article III,Article IV ,Article V,Article VI, Article VII


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...