அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

'ஈழம் - மௌனத்தின் வலி' - குற்றமற்றவர்களின் ரத்தம் பழிவாங்காமல் விடாது

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   16 , 2009  06:50:35 IST

சென்னையில் சனியன்று ஈழத்திற்காக நூறு புகழ் பெற்றவர்கள் குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌனத்தின் வலி’ வெளியீட்டு விழா நடந்தது.சென்னையில் எழும்பூர் காசா மேஜர் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் சனிக்கிழமை மாலை ’ஈழம்-மௌனத்தின் வலி’ புத்தகம் வெளியிடப்பட்டது.

பெருமழை என்பதால் பெரும்பாலோர் நனைந்துவிட்டிருந்தனர். கீழே இருந்த அரங்கம் நிரம்பி, மேலே சென்று அமரவேண்டிய நிலை. சுமார் 2000 பேர் அமரக்கூடிய எழும்பூர் டொன்பாஸ்கோ பள்ளி அரங்கு மழையத் தாங்காத சென்னை போல் நிரம்பி வழிந்தது. நாற்காலிகள் கிடைக்காதவர்கள் படிகளில் உட்கார்ந்திருந்தனர். நிகழ்ச்சி, போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு, நாம் அமைப்பு இணைந்து நல்லேர் பதிப்பகம் வாயிலாக- மவுனத்தின் வலி நூல் விழா.

அருட்தந்தை ஜகத் கஸ்பர் பொறுப்பேற்று பின்னிருந்து நடத்திய இவ்விழாவை பத்திரிகையாளர்களே நெறி செய்தனர். விழாவில் சத்குரு ஜக்கிவாசுதேவ், நடிகர் சிவகுமார், நடிகர் பிரகாஷ் ராஜ், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், பேராயர் வின்சென்ட் சின்னப்பா, நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலில் நூலில் இருந்து சில கவிதைகளைப் படித்து அரங்கை உறையச் செய்தார் நடிகர் சிவகுமார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்ட செய்திகூட இங்கிருக்கும் மக்களுக்குத் தெரியவில்லையே.. எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் கூட அதெல்லாம் தமிழ் இனத்துக்குப் பயன்படவில்லை யே என்று பேசிய அவர் இந்த புத்தகம் ஒரு வெடிகுண்டாக மாறும் என்றார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு ஒரு பயங்கரவாதம் நடக்கையில் அதைத் தடுக்காமல வேடிக்கைப் பார்ப்பவகளும் பயங்கரவாதிகள் என்று கூறினார்,
சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலை வெளீயிட மற்றவர்கள் பெற்றுக் கொண்டனர்.
சத்குரு பேசுகையில் கனத்த அமைதியும் எதிர்பார்ப்பும் நிலவியது. ஒட்டு மொத்த மானிடப் பிரதிநிதியாய் பேசினார் சத்குரு. நடந்து முடிந்த இந்த பேரழிவை இனி மேல் நம்மால் சரி செய்ய முடியாது. இறந்தவர்களை மீட்க முடியாது. ஆனால் இதில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு ந்ம்மால் ஆன உதவிகளைச் செய்யவேண்டும் என்று கூறிய அவர், இந்த மனித அவலங்கள் யாருக்கும் நிகழாமல் பார்த்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனிலும் மாற்றங்கள் நிகழ்வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
ஈழத்தில் தற்போதைய அரசியல் மாற்றங்கள் பற்றி ஆவேசமாகப் பேசிய நக்கீரன் கோபால் புலிகளுக்கு எதிராக 20 ஆண்டுகளுக்கு முன்பாகத் தடைவாங்கிய ஒரு பெண்மணி ஈழம் வாங்கித்தருவதாகச் சொன்னதை மக்கள் சிலர் நம்பியதாகச் சுட்டிக் காட்டிய அவர், கருணாநிதி முதல்வர் என்பதால்தான் இம்மாதிரி கூட்டமாவது போட முடிகிறது என்றார்.
சேகுவேரா உங்களுக்குள் வெறி இருந்தால் நீங்கள் எங்களில் ஒருவர் என்று கூறியதைச் சுட்டிக் காட்டிய ஜக்கி, உங்களுக்குள் வெறி இல்லாவிட்டால்தான் நீங்கள் எங்களுக்குள் ஒருவர் என்று தன் ஆன்மீகப் படி பேசினார். நிகழ்ச்சிக்கு ஏராளமான ஜக்கி வாசுதேவின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஒரு புதிய மக்கள் கூட்டத்திடன் ஈழ மக்கள் பிரச்னை போய்ச் சேர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இறுதியாக மருத்துவர் எழிலன் நன்றி கூறினார்.

கமலகாசனின் கனமான கவிதை ஒன்றுடன் ஆரம்பமாகி, நடிகர் ரஜினிகாந்தின் வரிகளுடன் ஈழத்து போர் அவலத்தை, இனப்படுகொலையைக் காட்டும் படங்களையும் அவற்றுக்கு கவிஞர்களும் பிற கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் எழுத்யிருக்கும் உணர்ச்சிப் பதிவுகளையும் கொண்டு இந்நூல் ஆக்கப் பட்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் அருந்ததி ராய், அனிதா பிரதாப், ஆன்மீகப் பெரியோர்களான சத்குரு ஜக்கி வாசுதேவ், பேராயர் சின்னப்பா, கவிஞர்கள் வைரமுத்து, இன்குலாப், அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, தாமரை, தமிழச்சி, கபிலன், நா.முத்துக்குமார், பா.விஜய், தபு சங்கர், யுகபாரதி, கலாப்ரியா, கல்யாண்ஜி, ஈரோடு தமிழன்பன்,திரையுலகின் கமல்ஹாசன், சூர்யா, பிரகாஷ்ராஜ், நந்திதா தாஸ், சத்யராஜ், சீமான், சேரன்,அமீர், பாலாஜி சக்தவேல், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், கே.வி.ஆனந்த், லிங்குசாமி, ராதா மோகன், நக்கீரன் கோபால், கல்வியாளர்கள் அனந்தகிருஷ்ணன், வசந்தி தேவி உட்பட்ட நூறுபேர் ஆசிரியர்களாக இருந்து ஆக்கியுள்ள புத்தகம் இது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, ‘’கற்பனைக்கும் எட்டாத சிந்திக்க முடியாத ஒரு கொடூரம் என்பதை கேள்விபட்டிருந்தாலும் கூட, இந்த புத்தகதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, ஒரு காட்டுமிராண்டி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஏன் என்றால் இதில் நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவே இல்லை. நம்ம அறிவுக்கு இதுவெல்லாம் வரவே இல்லை என்று நினைக்கும்போது யாரோட தப்பு. ஏன் இவ்வளவு தகவல் தொழில் நுட்பத்தில் பயங்கரமாக இருக்கிறோம்.

வானத்தை எட்டி விட்டோம் என்று சொல்கிறோம். அனால் இதுவெல்லாம் நமக்கு தெரியவே இல்லை என்று சொல்லும் போது வெட்கமாக இருக்கிறது.

ஒரு நார்த் இண்டியாவில் போய் இதையெல்லாம் சொன்னால் 'ய தி ஸ்ரீலங்கா பிராபளம்' என சாதாரணமாக கேட்பார்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டால், நிதி திரட்டுவதில் தமிழன் தான் முதல் இடத்தில் இருக்கணும். கார்கில் வார் நடந்தது என்றால் நிதி திரட்ட தமிழன்தான் முதல் இடத்தில் நிற்கணும். ஆனால் ஒரு இனம் அழிவது உங்க அறிவுக்கே வராதா?

உங்களுக்கு அப்படி ஒன்று நடப்பதே தெரியாதா? யார் தப்பு இது. அரசியல் ஈகோவா? மதமா? இல்ல பழிவாங்கலா? எனக்கு தெரியல.

செயற்கைக்கோளில் இருந்து பார்க்கும்போது மரத்தில் உட்காந்திருப்பது குருவியா, காக்காவா என பார்க்கக்கூடிய அறிவியல், முகாம்களில் எத்தனை பேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பதியவே இல்லையா? தமிழனை பார்த்தவுடனேயே அந்த கேமரா திரும்பிடுச்சா? போர் குற்றம் நடக்கிறது என்று ஐ.நா. சோதனை செய்ய வரும்போது, ஒரே நாளில் கிட்டதட்ட 50 ஆயிரம் தமிழர்கள் புல்டவுசரால் நசுக்கப்பட்டிருக்கிறார்கள்.

எல்லாமே ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள். ஏன் என்றால் அவர்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள். பேசினால்தான் தமிழன். தமிழ் பேசும்போது தமிழனாகிறான். தமிழ் பேசும்போது கொலை செய்கிறார்கள்.
ஆனால் பேசாத குழந்தை. குழந்தைக்கு இன்னும் மொழியே தெரியாது. அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அப்பாவி குழந்தைகளை கொலை செய்திருக்கிறார்கள்.
பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படைக் கூட ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள். அதாவது குழந்தைகள், பெண்களை கொலை செய்ய மாட்டோம் என்று. கூலிப்படைக்கு இருக்கிற ஒரு கட்டுப்பாடு கூட ஒரு ராணுவத்துக்கு கிடையாது.

அணுகுண்டுக்கும், புத்தகத்துக்கும் ஒரே வித்தியாசம்தான். அணுகுண்டு வீசும்போதெல்லாம் வெடிக்கும், புத்தகம் படிக்கும்போதெல்லாம் வெடிக்கும். இந்தப் புத்தகம் அந்த மாதிரியான புத்தகமாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கம் வியட்நாமுக்கும் நடந்த போரை தடுத்து நிறுத்தது ஒரே ஒரு புகைப்படம் தான். ஒரு சிறுமியின் நிர்வாணமாக நடந்து வருவதுபோல் உள்ள புகைப்படம்தான். இங்கு அதைவிட கொடூரமான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்தப் புகைப்படத்திற்கு இந்த உலகம் என்ன பதில் சொல்லப்போகிறது.

அப்பாவித் தமிழர்கள் எல்லாம் சாகும்போது, போர்க்குற்றம் என்றால், அதைப் பார்த்து வாய் மூடி, கண் மூடி இருப்பது வரலாற்றுக் குற்றம்.

தரையில் முட்டி அழ வேண்டும் போல் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையின்மையால் தான் நாம் அழிந்து கொண்டு வருகிறோம். இனியாவது நாம் ஒற்றுமையாக இருந்து இந்த கொடுமைகளை தடுக்க வேண்டும்' என்று பேசினார்.

நக்கீரன் கோபால் பேசும்போது,'இலங்கை அதிபர் ராஜபக்சேவும், ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும், தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்கள். தமிழர்கள் பொங்கி எழுவார்கள் என்று பொன்சேகா கூறுகிறார். அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட போகிறார்.

நாம் எல்லாவற்றையும் மறந்து விட்டோம். இது தான் நம்முடைய இழிவு நிலைக்கு காரணம். தமிழர்களை கொன்று குவித்ததை மறந்து விட முடியுமா?

20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைபுலிகளுக்கு இங்கே தடை இருக்கிறது. தடையை வாங்கி தந்தவரோடு சேர்ந்து கொண்டு, அவர் காலடியில் அமர்ந்து கொண்டு தனி ஈழம் வாங்கி தருவோம் என்று இங்கே சொல்கிறார்கள்.

நாம் எல்லாவற்றையும் மறந்து விடக்கூடாது. தமிழினத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்'என்றார்.

நிகழ்ச்சியில் பேராயர் சின்னப்பா பேசும் போது,'இன்று ராஜபக்சே சிரிக்கலாம். ஆனால் நான் செய்தது தவறு என்று மார்பிலே அறைந்துகொண்டு அழுது புலம்பும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் யேசு கிறிஸ்துவை சிலுவையிலே கொன்றார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இவனை கொன்றுவிட்டோம். இன்றோடு இவன் கதை முடிந்துவிட்டது. நம்முடைய வெறியை தணித்துக்கொண்டோம்.

ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் சொன்னார்கள். அங்குதான் யேசுவின் கதையே ஆரம்பித்தது. யேசு உயிர் துறந்த பிறகு, எந்த காரணத்திற்காக உயிர் துறந்தாரோ, ரத்தம் சிந்தினாரோ அதன் விளைவு ஆரம்பித்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தது.

குற்றமற்றவர்களின் ரத்தம் பழிவாங்காமல் விடாது. சாதாரண மனிதனின் ரத்தம் இலங்கை மண்ணில் ஊறிக்கொண்டிருக்கிறது. இன்னம் காயவில்லை. ரத்தத்தை உறுஞ்சிய ஈழ மண்ணில் என்ன விளைய போகிறது என்று பார்ப்பீர்கள். என்னை பொறுத்தவரையில் ஈழம் விளையும் 'என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும் போது , 'ஒரு மானை வேட்டையாடினால் தண்டிக்க சட்டம் இருக்கிறது. போராட அமைப்பும் இருக்கிறது. ஆனால் மனிதர்களை வேட்டையாடி கொல்கிறார்களே இதை தடுக்க சட்டம் இல்லையா? பெரியவர்களை கொல்ல காரணம் பல சொல்லலாம்.
ஆனால் குழந்தைகளை கொல்ல காரணம் சொல்ல முடியுமா? இதை இப்படியே விட்டு விட முடியாது' என்று பேசினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...