அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பரபரப்புக்காக தவறான செய்தி வெளியிடுவதா - மு.க. வருத்தம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   15 , 2009  23:19:07 IST

மழையினால் தகர்ந்த சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் போக்குவரத்து தொடங்கிவிட்டது. இயல்பான வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற செய்திகள் வந்தும் கூட இன்னும் சில ஏடுகளில் அங்கே எதுவுமே நிவாரணப் பணிகள் நடக்கவில்லை என்பதைப் போல சிலர் விடுத்துள்ள அறிக்கைகள் பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் காணு கிறேன். இது போலவே, மீனவர்கள் எழுநூறு பேரைக் காணவில்லை என்ற பரபரப்பான செய்தி சில தொலைக்காட்சிகளிலும் ஏடுகளிலும் வெளி வந்ததும், நான் அதிர்ந்து போய் அதைப் பற்றி விசாரிக்கச் சொல்ல; மொத்தமே காணாமல் போனவர்கள் எட்டு பேர்தான் என்றும், அதிலும் நான்கு பேர் திரும்பி விட்டார்கள் என்றும் செய்தி கிடைத்தது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:

பத்திரிகைப் பெண் பயிலவேண்டிய பாடம்!ம்!


உடன்பிறப்பே,

“காரிருள் அகத்தில் நல்ல

கதிரொளி நீ தான்; இந்தப்

பாரிடைத் துயில்வோர் கண்ணிற்

பாய்ந்திடும் எழுச்சி நீ தான்;

ஊரினை நாட்ட இந்த

உலகினை ஒன்று சேர்க்கப்

பேரறி வாளர் நெஞ்சிற்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே.

அறிஞர் தம் இதய ஓடை

ஆழ நீர் தன்னை மொண்டு

செறி தரும் மக்கள் எண்ணம்

செழித்திட ஊற்றி ஊற்றிக்

குறுகிய செயல்கள் தீர்த்துக் -

குவலயம் ஓங்கச் செய்வாய்;

நறுமண இதழ்ப் பெண்ணே உன்

நலம் காணார் ஞாலம் காணார்.”

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பத்திரிகை பற்றி எழுதிய கவிதை - சில பத்திரிகைகளின் போக்கினைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வரும். பத்திரிகைகள் மீது அவர் கொண்ட உயர் எண்ணத்தின் மேலான மதிப்பின் அடிப்படையில்தான் நான் இன் றைக்கும் பத்திரிகை களையும் - பத்திரிகை நடத்துபவர்களையும் கருதுகிற காரணத்தால்; அவர்களுக்கு அரசின் வாயிலாக எத்தகைய அடக்கு முறைகள் தொடரப்பட்டாலும் அந்த நேரத்தில் எல்லாம் அவர்களுக்காக வாதாடி யிருக்கிறேன்; போராடியும் இருக்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போது 'ஆனந்த விகடன்' ஆசிரியர் - வார ஏடுகளின் பிதாமகன் என்று கூறப்படும் வாசன் அவர்களின் மகன் திரு. பாலசுப்பிரமணியம், விகடன் இதழில், அன்றைய அரசு பற்றி ஏதோ எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது - எதிர்க்கட்சித் தலைவனாக இருந்த நான் காரில் திண்டிவனம் வழியாக சென்று கொண் டிருந்தபோது, காரில் இருந்த வானொலி மூலமாக பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டுவிட்டு, அங்கேயே காரை நிறுத்தச் சொல்லி, உடனடியாக ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டதோடு - அதன் பிறகு அவருக்காக தொடர்ந்து குரல் கொடுக்கவும் செய்தேன்.

பத்திரிகை உலகின் மற்றொரு பிதாமகன் என்று அழைக்கப்பட்ட திரு.சாவி அவர்கள்; அவருடைய வார இதழில் ஒரு அட்டைப்படம் வெளியிட்டார் என்பதற்காக அந்த அட்டை படத்தில் வரையப்பட்டிருந்த ஒரு ஓவியம் குறித்து, அந்த ஓவியத்தில் இடம் பெற்றிருந்த பெண்ணுக்கோ, அல்லது அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்கோ, உற்றார் உறவினர்களுக்கோ வராத கோபம் அன்றைய அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்டு - சாவி ஏட்டின் ஆசிரியர் திரு.சாவி அவர்களைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்ற செய்தி கேள்வியுற்று - நானும், நண்பர்களும் காவல் நிலையத்திற்கே ஓடோடி சென்று அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தோம்.

அவர்கள் எல்லாம் பாரதிதாசன் எழுதிய 'பத்திரிகைப் பெண்ணே' என்ற பாடலுக்கு ஏற்ப பத்திரிகை நடத்தியவர்கள்தான். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட நேரிட்டது. அதே நேரத்தில் பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரால், எதை வேண்டுமானாலும் எழுதலாம் - எப்படி வேண்டுமானாலும் படம் போடலாம் - யாரை வேண்டுமானாலும் அவர்களுக்குரிய மானம், மரியாதைக்கு மாசு ஏற்படும் வகையில் எழுதலாம், பேசலாம் என்று எவர் ஒருவரும் கருதிக் கொண்டு “என் வழி இதுதான்” என்று வழி மீறுவார்களானால் - அதுபற்றிய முறையீடு பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்படும் பொழுது - அதை எந்தவொரு அரசும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க முடியாது.

அப்படிப்பட்ட நேரத்திலேகூட இந்த அரசினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பத்திரிகைகளை எதிர்த்து மூர்த்தன்ய மாகவோ, முரட்டுத்தனமாகவோ இதுவரை எடுக்கப்பட்டதாக யாரும் கூற முடியாது. ஏன் இத்தகைய மென்மையான அணுகுமுறையை - அதே நேரத்தில் இரு சாராருக்கிடையே பகை பரவிடக் கூடாது என்ற பரந்த நோக்கத்தோடு எச்சரிக்கையாக கையாளும் அணுகு முறையை - என் மீது வேண்டுமென்றே குறை கூற விரும்புவோர் கடுமையாக விமர்சிப்ப தையும் நான் புரிந்து கொள்ளாமல் இல்லை.

பத்திரிகையாளர்களுக்கு நான் நண்பன் என்பதால்தான் அவர்கள் எழுப்புகின்ற கோரிக் கைகளையெல்லாம் நிறைவேற்றி வந்திருக் கிறேன். சென்னையில் திருவான்மியூருக்கு அருகில் பத்திரிகையாளர்களுக்காக ஒரு பகுதியையே ஒதுக்கி அவர்கள் வாழும் இல்லங்களை அங்கே அமைத்துக்கொள்ள வழி செய்திருக்கிறேன். அதுபோலவே திருச்சியிலும், மதுரையிலும், சேலத்திலும் வேலூரிலும், திண்டுக்கல்லிலும் பத்திரிகை யாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள இடங்கள் தரப்பட்டுள்ளன. அண்மையில் கோவையில் கூட விண்ணப்பித்திருக் கிறார்கள். அதுவும் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே நானும் ஆரம்ப காலத்தில் இருந்து இது வரையில் ஒரு பத்திரிகையாளன்தான் என்ற முறையில் அவர்களிடம் பரிவு காட்டி வருகிறேன். தொடர்ந்து பரிவு காட்டுவேன், பாசம் காட்டுவேன். அது இயல்பாக எனக்கு ஏற்பட்ட ரத்தத்தோடு கலந்த உணர்வு. அந்த உணர்வின் அடிப்படையில் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு அவர்களை என் நண்பர்கள் என்ற முறையிலோ அல்லது சகோதரர்கள் என்ற முறையிலோ அல்லது தோழர்கள் என்ற முறை யிலோ எந்த முறையில் என்று எடுத்துக் கொண் டாலும் சரி - நான் அவ்வப் போது விடுக்கின்ற வேண்டுகோளும் - இப் போது விடுக்கின்ற வேண்டுகோளும் 'உரிமைக்கு வாதிடுங்கள் - உண்மைகளை வெளி யிடுங்கள்' என்பதுதான். 'எதையும் மிகைப்படுத் தாதீர்! எவருக்கிடையிலும் பகை மூட்டாதீர்!' என்பதுதான்.

சுட்டிக்காட்டப்படும் குற்றம் குறைகளை 'நீ யார் சுட்டிக்காட்ட?' என்று என்றைக்குமே கேட்காத அரசு; இந்த அரசு. அத்தகைய ஆணவம்; அணுகியதும் இல்லை இந்த அரசை! பத்திரிகைகளில் வரும் செய்திகளை விடியற்காலையிலேயே படிக்கத் தொடங்கி அவற்றை அதிகாரி களோடும், அந்தச் செய்திக்கு தொடர்புடை யவர்களோடும் உடனடியாக கலந்து பேசி குற்றம் குறைகள் காணப்படின் அவற்றை உடனே களைந்தெறிய; நான் காரியமாற்று கிறேன் என்பதை பாசத்திற்குரிய பத்திரிகை யாளர்கள் பலர் அறிந்திருந்தும் கூட எனக்கல்ல - மக்களிடையே பதற்றத்தை தங்களை அறியாமலேயே ஏற்படுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொண்டோ அல்லது புரியாமலோ - கடுகளவு செய்திகளைக் கூட கடல் அளவாகப் பெருக்கி வெளியிடுகின்ற வித்தை கற்றவர்களை நான் அறிவேன்.

ஒரு அரசின் சார்பில் நடந்திருக்க வேண்டி யவைகள் இன்னும் நடக்கவில்லை என்று சுட்டிக்காட்டுபவர்களின் நல்லெண்ணத் தையும் நான் அறிவேன். இந்த இரு சாராரால் ஏற்படும் விளைவுகளை மக்களிடையே எப்படி கொண்டு செல்வது என்பதிலும் எனக்குள்ள அக்கறையின் காரணமாக இதை எழுத நேரிடுகிறது. உதாரணமாக இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் துன்ப துயரங்களை வேண்டுமென்றே பெருக்கிக் காட்டுவதால் சில நேரங்களில் விபரீதங்கள் ஏற்பட்டு விடக் கூடும் அல்லவா? அதனால்தான், எதையும் மிகைப்படுத்தாதீர்! என்று வேண்டுகோள் விட வேண்டியிருக்கின்றது.

அண்மையில் ஏற்பட்ட புயல், மழை, கடும் வெள்ளம் இவற்றின் காரணமாக தமிழகத் திலே ஒரு சில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு - குறிப்பாக நீலகிரி மாவட்டம் அழகிழந்து - நிலை குலைந்து அங்குள்ள மக்கள் வேதனைக்கு உள்ளானபோது - இந்த அரசு அதனை ஒருக்கணம் கூட வேடிக்கை பார்க்காமல் - வேகமாக நிவாரணப் பணிகளை எப்படி ஆற்றியது என்பதை அந்த மலை பகுதியிலே வாழ்கின்ற மக்கள் மிகத் தெளிவாக அறிவார்கள்.

நாற்பதுக்கு மேற்பட்ட உயிர்களை கொள்ளை கொண்ட அந்தக் கொடுமையான நிகழ்வு, தொடங்கியபோதே நான் துடித்துப் போய் - நமது அமைச்சர்களாம் என் தம்பிமார்கள் வீரபாண்டி ஆறுமுகத்தையும், பொங்கலூர் பழனிசாமியையும் உடனடியாக அங்கே சென்றிடுமாறு கேட்டுக் கொண்டேன். கெலிகாப்டரிலே அவர்கள் செல்வதற்கு முயன்றும்கூட, அந்த மழையில் கெலிகாப்டர் போகாது என்று தெரிவித்துவிட்ட காரணத்தால் அந்தச் சாலையிலே அந்தப் பகுதியில் எந்தப் பயங்கரம் நிகழுமோ என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் என் அன்பு உடன் பிறப்புகளாம் அந்த அமைச்சர்கள் சாலையிலே பயணம் செய்து ஏற்கனவே அங்கே முகாமிட்டிருந்த அமைச்சர்கள் ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோருடன், அந்தத் தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான தம்பி ஆ. ராசாவுடன் மற்றும் குண்டன், முபாரக், சவுந்திரபாண்டியன், எம்.எல்.ஏ., ஆகியோருடன் சேதமடைந்த பகுதிகளை யெல்லாம் சுற்றிப் பார்த்து நிவாரணப் பணிகளைத் தொடங்கச் செய்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறச் சென்று அங்கும் உரிய நிவாரணங்களை அரசின் சார்பிலே அளித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கிறார்கள்.

எவ்வளவு ஆபத்தான இடத்தில் - எந்த நேரத்தில் அந்த இடம் சரியுமோ என்றுள்ள இடத்தில் தங்களைப் பற்றி கவலைப்படாமல், என் தம்பிமார்கள் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள் ஆனால் சிலர் எந்த உண்மை யையும் தெரிந்து கொள்ளாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதைப் போல இரண்டு அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை, பாதிக்கப்பட்டவர்களை யாரும் சென்று பார்க்கவில்லை என்றெல்லாம் அறிக்கை விட - அதையும் உண்மையை அறிந்த பத்திரிகையாளர்கள் கொட்டை எழுத்துக்களிலே வெளியிடுகின்றார்கள். அந்தப் பத்திரிகைகள் உண்மைகளை வெளியிட வேண்டாமா? அரசுக்கு எதிரான செய்தி என்பதற்காக எதையும் வெளியிட்டு விடலாமா? நன்றாகத் தெரிந்து - உண்மை யில்லாத செய்திகளை வெளியிடுவதில்லை என்று பத்திரிகைகள் முடிவெடுத்து விட்டால், பின்னர் அறிக்கை விடுபவர்களே உண்மை யில்லாத செய்திகளை வெளியிடுவதை நிறுத்தி விடுவார்கள்.

பாதிக்கப்பட்ட இடங்களில் பயம் சிறிதும் இன்றி, அந்த மக்களிடம் கொண்ட பாசமே பெரிது என்ற அக்கறையுடன் அவர்கள் அந்த இடத்தைப் பார்வையிடும் அந்தக் காட்சியைப் பார்த்தாயா? இதை “இந்து” - “தினத்தந்தி” போன்ற நாளேடுகள் முதல் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளதை நான் பார்த்தவுடன் எவ்வளவு உயரத்திலே தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் பகுதியிலே நின்றுகொண்டு சிறிதும் அச்சமின்றி கடமையாற்றுகிறார்களே என் தம்பிமார்கள் - அந்த மகிழ்ச்சிதான் நீல மலையிலே ஏற்பட்ட சோகத்தைப் பின் தள்ளுகிற ஆறுதலாக எனக்கு அமைந்தது.

ஏற்பட்ட பாதிப்புகளை களைவதற்கான பணியில் தீயணைப்புத் துறையினர், மீட்பு குழுவினர், மின்வாரியத் துறையினர், நெடுஞ் சாலைத் துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கிடைத்த தகவலின்படி அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.

துணை ராணுவத்தின் பேரிடர் துயர் நீக்க பிரிவில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும், தேசிய பேரிடர் மீட்பு படைப் பிரிவின் இன்ஸ்பெக்டர்கள் அருண் குமார், பூட்மாங்கே பிரசாந்த் ஆகியோரது தலைமையில் 76 பேர் சீரமைக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள்.

வருவாய்த் துறை ஆணையாளர் சுந்தர தேவன், தீயணைப்புத் துறை இயக்குநர் நடராஜ், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும், நிவாரணப் பணிகளை ஊக்கப்படுத்தவும் அனுப்பி வைத்தேன். இவர்களுக்கு முன்பாகவே மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோவிந்தன் அவர்களை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி மாவட்ட ஆட்சியரோடு இருந்து நிவாரணப் பணிகளிலே ஈடுபடுமாறு அறிவுறுத்தினேன். உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் உடனடியாக வழங்கக் கூறினேன்.

12௧1௨009 அன்று காலை 10 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்கள் தலைமையில், மாநில அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.

அந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் கலந்து கொண்ட உதகை கோட்ட மேலாளர், 50 விழுக்காடு பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும், மீதி பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். அனைத்துப் பேருந்துகளையும் விரைவில் இயக்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரியத் துறை சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட உதகை மின் வாரிய கண் காணிப்புப் பொறியாளர், நீலகிரி மாவட்டத்தில் 95 விழுக்காடு மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது என்றும், மீதம் உள்ளவை மூன்று நாட்களில் வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்திருக்கிறார். சேதம் அடைந்த மின் கம்பங்களுக்குப் பதிலாக வெளி மாவட்டங் களிலிருந்து உடனடியாக அவற்றைக் கொண்டு வரவும், சாலை துண்டிக்கப்பட்ட இடங்களில் தலைச் சுமையாகவே அவற்றைக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள மின்வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேட்டுப்பாளையம் - உதகை சாலை துண்டிக் கப்பட்டு விட்டதால், மைசூர் வழியாகவோ அல்லது பாலக்காடு வழியாகவோ தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை தடங்கலின்றி கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதற்கிணங்க - இந்த அத்தியா வசியப் பொருட்கள் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டு தற்போது அவைகள் கிடைக்கின்றன.

பால் விநியோகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள ஆவின் மேலாண்மை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலரும், ஆவின் மேலாண்மை இயக்கு நரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் பால் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்துகொள்ள வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. குழந்தை களுக்குத் தேவைப்படும் பால் பொருட்கள் தடங்கல் இன்றி கிடைத்திட உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் குழாய் கள் வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்து விட்ட காரணத்தினால் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள நகராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்களுக்கும் பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் உதவி இயக்குநர், பேரூராட்சிகள் மற்றும் உதவி இயக்குநர், கிராம பஞ்சாயத்து ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சேதம் அடைந்த குழாய்களை உடனடியாக மாற்றி புதிய குழாய்கள் பொருத்தப்பட வேண்டுமென்று சொல்லப்பட் டுள்ளது. தண்ணீர் தொட்டிகள் சேதம் அடைந்திருந்தால், அப்பகுதிகளில் சிண்டெக்ஸ் தொட்டிகள் வைத்து குடிநீர் வழங்க வேண்டு மென்றும் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியர் (பஞ்சாயத்து வளர்ச்சி) மேற்பார்வையிடவும் சொல்லப் பட்டுள்ளது.

வெள்ள சேதம் காரணமாக தொற்று நோய் எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குநர் சார்பில் தெரிவிக்கப்பட்டு, வெள்ள நிவாரண முகாம் களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப் பட்டுள்ளதால், அவர்களுக்கு உடல் பரிசோதனை செய்திடவும், மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் உரிய அலுவலர்களை நியமிக்க வும், தேவையான மருந்துகளை உடனடியாக வழங்கிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாலை ஓரங்களிலும், குடியிருப்பு பகுதி களிலும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய மரங் களை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பெருமளவு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. அதற்கான விவரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை தரும்படி அதிகாரிகளுக்குக் கூறப்பட்டுள்ளது. அது போலவே கால்நடை சேதம் குறித்த விவர அறிக்கையினை சேகரித்திட உதகை கால்நடைத் துறை உதவி இயக்குநருக்குச் சொல்லப்பட்டுள்ளது.

அரசு சார்பில் இத்தகைய முயற்சிகளை மேற் கொள்ள பணித்ததோடு - கட்சி ரீதியாகயும் நிவாரணப் பணிகளிலே ஈடுபடும் படி சொல்லப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிலேயே தி.மு. கழகத்தின் சார்பில் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 கம்பளி போர்வைகளும், உணவுப் பொருட் களும், பால், ரொட்டி, வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை எடுக்கப்பட்ட புள்ளி விவரங் களின்படி முழுமையாக 55 வீடுகளும் - பகுதியாக 909 வீடுகளும் பாதிக்கப்பட் டுள்ளன. நிவாரண உதவியாக இதுவரை 476 பேருக்கு 9 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் 488 பேருக்கு 9 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு 1808 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 610 குடும் பங்களைச் சேர்ந்த 1808 பேர் 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகின்றனர். 30 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 105 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளன.

மழையினால் தகர்ந்த சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் போக்குவரத்து தொடங்கிவிட்டது. இயல்பான வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற செய்திகள் வந்தும் கூட இன்னும் சில ஏடுகளில் அங்கே எதுவுமே நிவாரணப் பணிகள் நடக்கவில்லை என்பதைப் போல சிலர் விடுத்துள்ள அறிக்கைகள் பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டிருப்பதைக் காணு கிறேன். இது போலவே, மீனவர்கள் எழுநூறு பேரைக் காணவில்லை என்ற பரபரப்பான செய்தி சில தொலைக்காட்சிகளிலும் ஏடுகளிலும் வெளி வந்ததும், நான் அதிர்ந்து போய் அதைப் பற்றி விசாரிக்கச் சொல்ல; மொத்தமே காணாமல் போனவர்கள் எட்டு பேர்தான் என்றும், அதிலும் நான்கு பேர் திரும்பி விட்டார்கள் என்றும் செய்தி கிடைத்தபோது, பத்திரிகைகள் எல்லாம் இப்படி பரபரப்பாக தவறான செய்தியை அவசரப்பட்டு மிகைப் படுத்தி வெளியிடுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன். அந்த வருத்தங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டுத்தான் நாம் நம் வழியில் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...