அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எஸ்.செந்தில் குமாருக்கு சுந்தர ராமசாமி விருது

Posted : புதன்கிழமை,   நவம்பர்   04 , 2009  09:54:01 IST

சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் இளம் படைப்பாளிகளுக்கான விருது இந்த ஆண்டு எஸ். செந்தில் குமாருக்கு வழங்கப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பாரட்டுப் பத்திரமும் கொண்ட இந்த விருது நாகர்கோவிலில் அக்டோபர் 31 அன்று மாலை நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

சுகுமாரன், பாவண்ணன், அரவிந்தன் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்படும் இந்த விருதை சுந்தர ராமசாமியின் துணைவியார் திருமதி கமலா ராமசாமி செந்தில் குமாருக்கு இந்த விழாவில் வழங்கினார். செந்தில் குமாரின் படைப்புலகை அறிமுகப்படுத்திக் காலச்சுவடின் பொறுப்பாசிரியர் தேவிபாரதி பேசினார். தேர்வு குறித்தும் செந்தில் குமாரின் படைப்புகள் குறித்தும் சில கருத்துக்களைக் கவிஞர் சுகுமாரன் முன்வைத்தார்.

இந்தத் தேர்வுக்குப் பின்னால் இருக்கும் பார்வைகள் மற்றும் முயற்சிகள் குறித்த அறிக்கையை குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்தன் வாசித்தார். தேர்வுகளுக்குப் பின் இருக்கும் பார்வைகளை வெளிப்படையாக முன்வைப்பது தேர்வுகள், விருதுகள் பற்றிய புரிதலுக்கும் ஆரோக்கியமான விவாதத்துக்கும் துணை புரியும் என்னும் நம்பிக்கையில் அந்த அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம்.

- ஆசிரியர்


இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது - 2009 தேர்வுக் குழுவின் அறிக்கை

படைப்பாளியாக மட்டும் செயல்படாமல் படைப்புச் சூழலை மேம்படுத்துவது குறித்த ஆழ்ந்த கரிசனமும் தீர்க்கமான சிந்தனைகளும் கொண்டிருந்த ஒரு படைப்பாளியின் பெயரால் வழங்கப்படும் விருது குறித்த சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். படைப்புச் சூழலை மேம்படுத்துவது என்பது மேலான படைப்புகள் வெளிவருவதற்கு இசைவாகச் சூழலின் இயல்பு உருக்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலான படைப்பாளிகள் போற்றப்படுவதும் அவர்களது காத்திரமான ஆக்கங்களுக்கு உரிய அங்கீகாரங்கள் உரிய நேரத்தில் உரிய விதத்தில் கிடைப்பதும் இந்த இயல்பின் தவிர்க்க இயலாத கூறுகள். இலக்கிய அமைப்புகளும் இலக்கியச் சூழலில் சலனம் ஏற்படுத்தும் திறன் படைத்த பிற நிறுவனங்களும் உரிய அங்கீகாரங்களை உரிய நபர்களுக்கு உரிய காலத்தில் வழங்காமல்போனால் பொக்கையான படைப்புகளும் படைப்பாளிகளும் இலக்கிய அடையாளங்களாகப் போற்றப்படும் நிலைதான் ஏற்படும். படைப்புத் தமிழின் தரத்தை உலகளாவிய தரத்துக்குக் கொண்டுசெல்லக்கூடிய அளவில் பங்களிப்புச் செய்திருக்கும் சிலர் புறக்கணிப்பின் வலியையும் வெற்றி பெறாமையின் பரிசான வறுமையையும் அனுபவித்துக்கொண்டிருந்த சமயத்தில் பிரகடனத் திறமையில் தேர்ச்சி பெற்ற அரிதாரச் சிங்கங்கள் இலக்கிய உலகின் மன்னர்களாக வலம்வந்ததைப் பார்த்திருக்கிறோம். அசலான படைப்பாளிகளை ஒடுக்கும் இத்தகைய முயற்சிகள் பலவீனமடைந்து அங்கீகாரங்கள் அவ்வப்போதேனும் உரிய இடங்களுக்குப் போய்ச் சேரும் கால மாற்றத்தையும் தற்போது பார்த்துவருகிறோம்.

இந்த மாற்றம் நம்மைத் தேடி வந்த அதிருஷ்டம் அல்ல. சில படைப்பாளிகள் தொடர்ந்து தம்மால் இயன்ற அனைத்து மேடைகளிலும் ஊடகங்களிலும் இதற்காகக் குரல் கொடுத்துவந்ததன் ஒட்டுமொத்த விளைவு இது. எங்கும் எதிலும் தரம் நாடித் தவம் இருக்கும் இதுபோன்ற ஆளுமைகளின் குரல்களால் ஆக்கபூர்வமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தளங்களில் பணிபுரிய நேர்ந்தபோது இந்தக் குரல்களின் தாக்கம் விதை பிளந்த மரமாய் வெளிப்படத் தொடங்கியது. இத்தகைய குரலை அழுத்தமாகவும் தர்க்கத்தின் வலுவோடும் சுயநலம் தவிர்த்த உணர்வோடும் முன்வைத்தவர்களில் முதன்மையானவர் என்று சுந்தர ராமசாமியைச் சொல்லலாம். அவரது நினைவாய் ஓரு இளம் படைப்பாளியை, அவர் தீவிரமாக இயங்கிவரும் காலகட்டத்திலேயே கௌரவிப்பதில் இந்த விருதினைத் தீர்மானித்த நடுவர்கள் குழு பெருமை கொள்கிறது.

தமிழில் தரமான படைப்பாளிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இன்றும் பல மூத்த, இளம் எழுத்தாளர்கள் தங்களுக்கே உரிய அடையாளங்களுடனும் வீரியத்துடனும் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டுவருகிறார்கள். அங்கீகாரம் இல்லை என்ற நிலை மாறி உடனடி அங்கீகாரங்கள்கூடக் கிடைக்கத் தொடங்கியிருக்கும் காலம் இது. நேற்று புறக்கணிப்பின் இருட்டுக்குள் இருந்த தமிழ்ப் படைப்பாளிகள் - படைப்பு என்பதற்கான முறையான பொருளில் இயங்குபவர்களை மட்டுமே இந்தச் சொல்லின் மூலம் குறிக்க விரும்புகிறேன் - இன்று கண்ணைக் கூசவைக்கும் வெளிச்சத்தில் இருக்கிறார்கள். இருட்டில் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருந்ததைப் போலவே வெளிச்சத்தின் வெள்ளத்தினுள் தேடிக் கண்டுபிடிப்பதும் கடினமானதாகவே இருக்கிறது. பிரசுர வாய்ப்புக்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் போலிகள் பெருகுவதும் எளிதுதான். இந்நிலையில் அசலான படைப்பாளியைச் சலித்தெடுப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே இளம் படைப்பாளியைத் தேர்ந்தெடுக்கும் பணி சவால் நிறைந்ததாகவே இருந்துவருகிறது. நெய்தல் அமைப்பை நிறுவி அதைத் தனக்கே உரிய உற்சாகத் துடிப்புடன் நடத்துவரும் நெய்தல் கிருஷ்ணன் பல்வேறு படைப்பாளிகளுடன் கொண்டுள்ள ஆரோக்கியமான நட்புறவு இந்தச் சவாலை எளிதாக்கப் பெரிதும் உதவிவருகிறது. அவரது பெரிய சட்டைப் பைக்குள் ஒளிந்திருக்கும் சின்னஞ்சிறு தொலைத் தொடர்புக் கருவியின் மூலம் இலக்கிய உறவுகளைப் பேணி இலக்கியச் செயல்பாட்டை விஸ்தரித்துக்கொண்டு செல்லும் கிருஷ்ணனின் ஆளுமை இந்த விருது வழங்கும் பணியின் சுமையைப் பெருமளவு குறைத்துவிடுகிறது என்று சொல்வதில் சற்றும் மிகையில்லை.

கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் ஆகியவற்றின் வழியே முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் கீழ்க்காணும் படைப்பாளிகளின் பெயர்கள் இடம்பெறிருந்தன. சுகிர்த ராணி, கீரனூர் ஜாகீர் ராஜா, ஷோபா சக்தி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, செந்தில் குமார், யா. சாம்ராஜ், ஜே.பி. சாணக்யா, ஹரிகிருஷ்ணன், சங்கர ராமசுப்பிரமணியன் ஆகிய பெயர்கள் இந்த ஆண்டு பரிசீலனைக்கு வந்தன. பரிந்துரைகளின் எண்ணிக்கை, வயது வரம்பு, தொடர்ந்து இயங்கிவரும் போக்கு, பங்களிப்பின் வீச்சும் வலுவும், தேர்வுக் குழுவினரின் பார்வைகள் முதலான சில அளவுகோல்களின் அடிப்படையில் இந்தப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் பரிசீலிக்கப்பட்டன. தேர்வுக் குழுவினர், நெய்தல் அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணன் மற்றும் இதர சில படைப்பாளிகள் ஆகியோரிடையே நடைபெற்ற கலந்தாலோசனையின் அடிப்படையில் இந்த ஆண்டு எஸ். செந்தில் குமாருக்கு விருது வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது.
36 வயதாகும் செந்தில் குமார், கடந்த பத்து ஆண்டுகளாக இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்புகள் செய்துவருகிறார். கவிதை, சிறுகதை ஆகிய இலக்கியப் பிரிவுகளில் தொடர்ந்து படைப்பார்வத்துடன் தீவிரமாகச் செயல்பட்டுவரும் இவர் தனது பிரத்யேகமானதும் வலுவானதுமான புனைவுலகின் மூலம் கவனத்துக்குரிய இளம் படைப்பாளியாகப் பலராலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். தமிழில் தற்போது வெளிவரும் தீவிர இதழ்கள் பெரும்பாலானவற்றில் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. போடிநாயக்கனூரில் வசிக்கும் இவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த வாழ்வை எளிமைப்படுத்தாமல், சிதைக்காமல், அதன் நிலையிலேயே தன் படைப்புலகில் பிரதிபலிக்கச் செய்கிறார்.

மூளையின் குறுக்கீடு இன்றி ஒரு எளிய கிராமத்து மனிதனின் வியப்போடும் குழந்தையின் உற்சாகத்தோடும் புனைகதைப் பரப்பில் ஆர்வத்துடன் புழங்கிவருபவர் செந்தில் குமார். தன்னைச் சுற்றியுள்ள உலகில் சுழலும் வாழ்வின் இயக்கத்தைத் தன் பின்னணி சார்ந்த சார்புகளோ கோட்பாடுகள் சார்ந்த முன்முடிவுகளோ இன்றிப் புனைவுப் பிரக்ஞையுடன் எதிர்கொண்டு படைப்புகளை உருவாக்கிவருகிறார். படைப்பு சார்ந்த அவரது இந்த அணுகுமுறை, விளிம்பு நிலை வாழ்வை அதன் நிலையில் நின்று பார்ப்பதையும் பிரதிபலிப்பதையும் இவரது படைப்புலகின் இயல்பான கூறுகளாக ஆக்கியிருக்கிறது. இவரது கதைகள் புனைவுகளின் கொண்டாட்டமாகவும் விளிம்பு நிலை வாழ்வின் வலுவான பிரதிபலிப்புகளாகவும் இருப்பதற்கு இவையே காரணம்.
புனைவு என்பது செந்தில் குமாருக்கு மிக இயல்பாகக் கைவரப்பெற்றிருக்கிறது. வினோதமான அம்சங்கள் பலவும் அவர் கண்களுக்கு யதார்த்தமாகவே தென்படுவதும் யதார்த்தச் சித்திரங்களாகவே அவை இவரது படைப்புலகில் உருப்பெறுவதும் உத்தி சார்ந்த வெளிப்பாடுகள் அல்ல. இயல்பு வாழ்க்கையின் வினோதங்கள், விசித்திரங்கள், குரூரங்கள், பொதுப் புத்தியின் தர்க்க ஒழுங்குக்கும் நெறிமுறைகளுக்கும் அடங்காத கோலங்கள் ஆகியவை குறித்த அவரது பார்வையின், அனுபவத்தின் விளைவுகள்தாம் இத்தகைய வெளிப்பாடுகள்.

முக்கியமான இளம் கவிஞராகவும் அறியப்படும் செந்தில் குமார் அதீதப் புனைவின் வெளிப்பாட்டுக் களமாகக் கவிதையைப் பயன்படுத்திக்கொள்பவரல்ல. புனைகதை அம்சங்களுடன் கவிதைகளைப் படைக்கும் கவிஞர்கள் மத்தியில் கவிதை என்னும் பிரத்யேகமான தளத்தின் இயல்புகளுடன் இவர் கவிதைகளைப் படைக்கிறார். கதைகளில் புனைவின் பல்வேறு சாத்தியங்களை அனாயாசமாகக் கண்டடையும் இவர் கவிதைத் தளத்தில் புனைவைக் கலக்காமல் கவித்துவ அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் தந்து தன் செயல்பாட்டுத் தளம் குறித்த தெளிவுடன் வெளிப்படுகிறார்.

மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல் என விரிந்திருக்கும் இவரது செயல்பாடுகள் மேலும் வலுப்பெற்று வளர வேண்டும் என்னும் ஆவலை நெய்தல் சார்பில் நடுவர் குழு முன்வைக்கிறது. அதற்கான அடிப்படைகளைக் கொண்டிருக்கும் செந்தில் குமார், தொடர்ந்து தன் படைப்புச் செயல்பாட்டைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்க இந்த விருது அவருக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் இக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
விருது வழங்கும் பணியில் பல விதங்களிலும் ஒத்துழைத்த இலக்கிய நண்பர்களுக்கு நெய்தல் சார்பாகவும் நடுவர் குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...